சமீபத்தில் ஒரு வேதனையானச் செய்தி, செய்தித்தாள்களில் வலம் வந்தன. உணவகத்தில் பணி புரியும் ஒரு மியான்மார் இளைஞன் ஒருவன் தனது கழுத்தை வெட்டிகொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த சம்பவம் தான் அது.
இந்தச் செய்தி எப்படியோ வெளியாகி விட்டது. அவ்வளவு தான். வெளியாகாத செய்திகள் ஏராளம்.
அதுவும் தமிழகத் தொழிலாளர்கள் பல இன்னல்களை அனுபவிக்கின்றனர். கேட்டால் வேதனையாக இருக்கும். அனைத்தும் தமிழகத்து சினிமாபாணி வில்லன்களைப் போல செயல்படும் உள்ளூர் முதலாளிகள்.
இவர்களை முதலாளிகள் என்று நான் சொல்லமாட்டேன். இவர்கள் அடியாட்கள்; பெரும்பாலும் குண்டர் கும்பலைச் சார்ந்தவர்கள். இவர்கள் பணம் பண்ணுவதற்காகவே இந்தத் தமிழகத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருப்பவர்கள்.
இங்கும் நல்ல தரமான முதாளிகள், நல்ல உள்ளூர், வெளியூர் நிறுவனங்கள் எல்லாம் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவிலிருந்து முறையான ஒப்பந்தங்களோடு ஆவணங்களோடு இங்கு வந்து வேலை செய்பவர்களுக்கு எந்த பிரச்சனையும் எழவில்லை. அது போல பல நாட்டினர் இங்கு வந்து வேலை செய்கின்றனர்.
ஆனால் பிரச்சனையெல்லாம் தமிழகக் கிராமங்களிலிருந்து இங்கு வருபவர்களால் தான். போலி ஏஜண்டுகள் மூலம், இங்கு வருபவர்களுக்குத் தான் அடி உதை என்று பலவித பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். அந்தக் கிராமப்புற இளைஞர்கள் அப்பவித்தனமாக இங்கு வந்து மாட்டிக் கொள்ளுகின்றனர்.
மிகவும் வருத்தப்பட வேண்டிய ஒரு செய்தி. இங்குப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பற்காக அங்குள்ள சொத்து சுகங்களை விற்று, பலரிடம் கடன் வாங்கி கடைசியில் இங்கு வந்து மாட்டிக் கொள்ளுகின்றனர்.
அங்கிருந்து வருபவர்களிடம், இங்கு வந்து சேர்ந்ததும் விமான நிலையத்திலே அந்த ஏஜெண்டுகள் அவர்களுடைய கடப்பிதழ்களை வாங்கி வைத்துக் கொள்ளுகின்றனர். எல்லாமே ஒரிரு மாதம் பயணம் செய்வதற்கான விசா. அதற்கு மேல் அவர்கள் இங்கு தங்க முடியாது., இப்போது இவர்கள் இங்கு தங்கவும் முடியாது, இந்தியாவிற்குப் போகவும் முடியாது என்கிற ஒரு நிலை.
வந்து விட்டார்கள் அல்லவா? வேலை கொடுத்தால் உண்டு. இல்லாவிட்டால் ஒன்றுமில்லை. ஆனால் வேலையை எப்படியாவது எங்கேயாவது கண்டுபிடித்துக் கொடுத்து விடுவார்கள். ஆனால் சம்பளம் கொடுப்பார்களா என்பது கேள்விக்குறி. இவர்களைப் பொறுத்தவரை தமிழகத் தொழிலாளர்கள் ஏதோ ஒரு இலவச இணைப்பு மாதிரி! அவ்வளவு தான். மனிதாபிமானம் என்பதெல்லாம் இவர்களிடம் இல்லை. சம்பளம் கேட்டால் அடி! உதை! என்பதெல்லாம் இவர்களுக்குச் சர்வ சாதாரனம்!
எனக்குத் தெரிந்த ஒரு ராமஸ்வரத்தைச் சேர்ந்த ஓர் ஏழை இளைஞன். அங்குப் பணம் கடன் வாங்கி இங்குப் பெரிய கனவுகளோடு வந்த இளைஞன். வந்ததோ ஒரு பயண விசா. எந்த விபரமும் தெரியாத அப்பாவி இளைஞன். வந்த அடுத்த நாளே கூட இருந்தவர்கள் "வெளியே எங்கும் போகக் கூடாது. போலிஸ் பார்த்தால் உள்ளே தள்ளிவிடுவார்கள்" என்று உண்மையைச் சொல்லி பயமுறுத்தி விட்டார்கள். அந்த இளைஞனால் வந்து ஒரு பத்து நாள்கள் கூடத் தாக்குப்பிடிக்க முடியவில்லை, போலிஸைக் கண்டு அவனால் பயந்து பயந்து வாழ முடியவில்லை. நான் ஊர் போகிறேன் என்று புலம்ப ஆரம்பித்து விட்டான். ஏதோ நாங்கள் எல்லாரும் சேர்ந்து அவனை ஊருக்கு அனுப்பி வைத்தோம்.
ஆனால் இப்போது அது கூட நடக்காது. எங்கே இருக்கிறோம் என்று தெரியாத இடங்களுக்கு அவர்களை வேலைகளுக்குச் சேர்த்து விடுகின்றனர்.
ஒன்று மட்டும் சொல்லுவேன். இங்கு வேலைக்கு வருவதென்றால் முறையான பயணப் பத்திரங்கள், நிறுவனங்கள் உடனான முறையான ஒப்பந்தங்கள் இவற்றோடு வாருங்கள். வேலை செய்யுங்கள். மீண்டும் தாயகத்திற்குத் திரும்பங்கள்.
இங்கு வந்தால் "நல்லா தண்ணி அடிக்கலாம்" என்று கிராமத்தில் உள்ள அப்பா அம்மாவை விட்டு, அக்காள் தங்கைளை விட்டு வராதீர்கள்.
இங்கு தண்ணியும் அடிக்கலாம்!உங்களைத் தண்ணிருக்குள்ளும் அமுக்கலாம்! எல்லாம் உங்கள் கையில்!
No comments:
Post a Comment