Saturday 27 February 2016

தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நமது இளைஞர்களுக்கு அதுவும் குறிப்பாக இடைநிலைப்பள்ளிகளிருந்து வெளியாகும் மாணவர்களுக்கு நிறைய தகவல்கள் தேவைப்படுகின்றன.

பெற்றோர்கள் படித்தவர்களாக இருந்தால் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள். பெற்றோர்கள், குடும்ப நண்பர்கள் மூலம் அவர்களுக்குத் தேவையான தகவல்கள் கிடைத்து விடுகின்றன. அதனால் அவர்கள் உயர்கல்விக் கூடங்களில் சேர்வதற்கான வாய்ப்புக்கள் பிரகாசமாக இருக்கின்றன.

ஆனால் படிக்காதப் பெற்றோர்களின் நிலையோ பரிதாபம்! வேதனை! தங்கள் பிள்ளைகள் நல்லபடியாகப் படித்து ஒரு நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதற்காக அவர்கள் பணத்தைச் செலவழித்துக் கடைசியில் 'இதுவும் இல்லை, அதுவும் இல்லை' என்னும் நிலைக்கு ஆளாக்கப் படுகின்றனர். வீண்  பண விரயத்திற்கும் ஆளாகின்றனர். கடைசியாக,  படிக்கப் போன அவர்கள் பிள்ளைகளும் எதற்கும் பிரயோஜனம் இல்லாமல் 'என்னத்தையோ'  படித்துவெளியாகின்றனர்.

இன்றைய நிலையில், எனக்குத் தெரிந்த வரை, தகவல்களைச் சேகரிப்பதில் மலாய் மாணவர்களே முன்னணியில் நிற்கின்றனர். அவர்களின் கல்வி தேர்ச்சியினை வைத்து எங்குச் சென்று படிக்க ,முடியுமோ அங்குப் போய் சேர்ந்து விடுகின்றனர். அவர்களுக்கு ஏற்ற கல்வி அவர்களுக்குக் கிடைத்து விடுகிறது. அப்படியே அந்த மாணவர்கள் மேற்கொண்டு படிக்க அக்கறைக் காட்டவில்லை என்றால் அவர்களின் பெற்றொர்கள் அக்கறை எடுத்து அவர்களை எதாவது ஒரு தொழிற்கல்வி கற்க சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

ஒரு மலாய் மாணவனைத் தெரியும்.அவன் பரிட்சையில் எந்தப் பாடத்திலும் தேர்ச்சிபெற வில்லை. அவனை அவன் பெற்றோர்கள் GIATMARA வில்
 'என்ன கிடைக்கிறதோ' அதனைப் படிக்கட்டும் என்று அனுப்பி வைத்தார்கள். அங்கு அவன் மின்சாரம்  சம்பந்தமானப் படிப்பை மேற்கொண்டான். அங்கு முழு நேரப் பயிற்சிகள் அல்லது பகுதி நேரப் பயிற்சிகள் உண்டு. அந்த மாணவன் நல்ல முறையில் முழு நேரப்  பயிற்சியில் கலந்து கொண்டு அந்தத் தொழிற்பயிற்சியில் சிறப்பான மாணவனாக தேர்ச்சிப் பெற்றான்.  அங்குப்பெற்ற அந்தச் சிறப்பானத் தேர்ச்சியின் மூலம் அவனுக்கு தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் டிப்ளோமா படிக்க வாய்ப்புக் கிடைத்தது. அதனை முடித்து இப்போது அவன் நல்ல வேலையில் உள்ளான்.

பொதுவாக தொழில் நுட்ப கல்லூரியில் பயில SPM - ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நமது இளைஞர்கள் நல்ல தேர்ச்சி இருந்தும் வாய்ப்புக்களைக் கோட்டை விடுகின்றனர். அதற்கு முக்கியமான காரணம் அறியாமையே. வெளி உலகம் தெரியாதவர்களாக, அவர்களாகவே ஒரு உலகத்தைச் உருவாக்கிக் கொண்டு அதனுள்ளயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பெற்றோர் அதைவிட எதையும் அறியாதவர்களாய் அப்பாவிகளாய் இருக்கின்றனர்.

விழிப்படைந்த சமூகமாக நாம் இருந்தால் அவர்கள் செய்கின்ற தவறுகளுக்கு அவர்களை நாம் குறை சொல்லலாம். ஆனால் அவர்களின் நிலைமையே வேறு.. அவர்கள் உலகமே வேறு. 24 மணி நேரமும் ஆடலும் பாடலும், சினிமாவும் தொலைக்காட்சியும், குடியும் கூத்தும்   இருந்தால் போதும் என்னும் அவலத்துடனேயே வாழ்கின்றவர்களிடம் எதனை நாம் பெரிதாக  எதிர்பார்க்க   முடியும்?

நமது நாட்டில் ஒரு மைல்  தொலைவிற்கு  குறைந்தபட்சம் இரண்டு ம.இ.கா. கிளைகள் உள்ளன.  ஒரளாவாவது இவர்களது குரலை அரசாங்கம் கேட்கும். இந்தக் கிளைகள் அனைத்தும்  மிஞ்சி மிஞ்சிப் போனால் சுமார் 100 அங்கத்தினர்களோ அல்லது அதற்குக்குறைவானவர்களோ தான் இருப்பார்கள். அதாவது ஒரு ஐம்பது குடும்பங்கள் கூட தேறாது.இந்த ஐம்பது குடும்பங்களின் விபரங்கள் இவ்ர்களிடம் இருக்கும். அதனை வைத்தே அந்த அந்தக் குடும்பப் பிள்ளைகளின் கல்வி விபரங்களைத் தெரிந்து கொண்டு அவர்களின் மேற்கல்விக்கு உதவலாம். அவர்கள் நம்மைத் தேடி வரமாட்டார்கள். நாம் தான் அவர்களைத் தேடிப் போக வேண்டும்.அவர்களாக நம்மைத் தேடி வருகிறார்கள் என்றால் அவர்கள் விழிப்படைந்து விட்டார்கள் என்பது பொருள்.

இதில்  நமது சமுதாயத்தின் எதிர்காலம் அடங்கியுள்ளது. நமக்கென்ன என்று நாம் இன்று இருந்தோமானால் நாளை,  நாம் படித்தவர்கள், நாம் பணம் உள்ளவர்கள், நாம் பதவியில் உள்ளவர்கள்,  எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன  என்று  இறுமாப்பு கொண்டு வாழ்ந்தோமானால் நாளை அந்த நிம்மதியான வாழ்க்கைக்கு வேட்டு வைப்பவர்கள்  இன்றைய இந்த இளைஞர்கள் தான்! அதனை மனதில் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள்.. காரணம் இவர்கள் தான் நாளைய குண்டர் கும்பல்கள்,  அடியாட்கள் இந்த சமுதாயத்தின் தீய சக்திகள் அனைத்தும்!

நண்பர்களே! நான் சொல்ல வருவதெல்லாம் இது தான். இன்றைய  நமது மாணவர்கள், நமது இளைஞர்கள் -  சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கின்றனர்.அவர்கள் ஏதாவது கல்லூரிகளில் சேர, தொழிற்பயிற்சிகளில் சேர நம்மால் என்ன செய்ய முடியுமோ அதனை நாம் செய்ய வேண்டும்.நம்மிடம் இருக்கும் தகவல்கள் அவர்களுக்குப் போய்ச் சேர வேண்டும். நமக்குத் தெரிந்தவைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

வெள்ளிக்கிழமைகளில் கோவிலில் கூடும் நேரத்தில் இதனை ஒரு கட்டாயச் செய்தியாக பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் கொண்டுச் செல்லப்பட வேண்டும்.

நாளை நமது சமுதாயம் ஒரு வெற்றிகரமான சமுதாயமாக மாற இன்றே நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய முடியுமோ அதனைச் செய்து நம்மை நாமே உயர்த்திக் கொள்ளுவோம்!

நாளைய வெற்றிக்காக இன்றே நாம் வெற்றியை நோக்கி உழைப்போம்!





No comments:

Post a Comment