Saturday 13 February 2016

பெயரில் என்ன இருக்கிறது.....?

பெயரில் என்ன இருக்கிறது என்று நம்மில் பலர் அலட்சியமாக இருந்து விடுகிறோம்.

அது சரியா? சிலருக்கு அது சரி. எதற்கு எடுத்தாலும் அலட்சியம் காட்டுபவர்களுக்கு அது சரி தான். அவர்களுக்கு இனம் இல்லை; மொழி இல்லை; கலாச்சாரம் இல்லை. எதுவுமே இல்லை! எதையும் புரிந்து கொள்ளுவதுமில்லை!

நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை. யார் எதைச் சொன்னாலும் அது தேவையா, தேவை இல்லையா என்று யோசித்துப் பார்ப்பதுமில்லை. .

ஏன் இந்தப் பீடிகை?

இப்போது தான் ஓர் உணவகத்திலிருந்து வருகிறேன் உணவகத்தில் ஒரு தாய் தனது மகனைப் பார்த்து "பர்ஷன்! பர்ஷன்!" என்று  இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருக்கும் தனது மகனைப் பார்த்து கத்திக் கொண்டிருந்தார்.

நான் அதிர்ந்து போனேன். என்னடா..பெயர் இது?   எதிலுமே சேர்த்துக்கொள்ள முடியவில்லையே!

அவர்களைப் பார்ப்பதற்கும் அப்படி ஒன்றும் நவீனத் தமிழ்க் குடும்பாகத் தெரியவில்லை.  ஒரு வயதானப் பெண்மனி, இரண்டு வளர்ந்த பெண் பிள்ளைகள் அந்தச்  சிறுவனும்   அவன் தாயும். அனைவருமே கொஞ்சம் இலேசான கருமை நிறம். நெற்றியில் விபூதி. எப்படிப் பார்த்தாலும் அவர்கள் பிள்ளைகள் தமிழ்ப்பள்ளியில் படிப்பவர்கள் என்று சொல்லலாம்.

அசல் தமிழர்கள் என்று நம்பக்கூடிய இவர்கள் எப்படி இது போன்ற பெயர்களை வைக்கிறார்கள் என்பது நமக்குப் புரியவில்லை.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகின்றன வென்றால் மலேசியத் தமிழர்களின் குழைந்தைகளின்  பெயர்கள் கோவில் பூசாரிகளால் நிச்சயக்கப்படுகின்றன என்பது தொண்ணூறு விழுக்காடு உண்மை!       

நான் இங்கு பணி புரியும் ஒரு தமிழக பூசாரியை இது பற்றிக் கேட்ட போது  அவர் இங்குள்ள பூசாரிகளுக்குச் சமய அறிவு போதாமையால் இப்படி கொஞ்சம் கூட பொருத்தமில்லாதச் சொற்களைப் பயன்படுத்தி  பெயர்களை வைக்கச் சொல்லுகிறார்கள். என்பதாகச் சொன்னார். 

ட வில் ஆரம்பியுங்கள், டி யில் ஆரம்பியுங்கள், டு வில் ஆரம்பியுங்கள் என்று பெற்றோர்களிடம் சொன்னால் அவர்கள் என்ன செய்வார்கள்?  சில நூற்றாண்டுகளாக தமிழை மறந்து வாழும் ஆப்பரிக்கத் தமிழர்களின் பெயர்கள்  மருவி  அவர்களின் உண்மைப் பெயர் என்ன என்பதைக் கூட இப்போது நம்மால் ஊகிக்க முடியவில்லை.

இங்கு நிலைமை அப்படி இல்லை. இன்னும் நம்மிடையே தமிழ் இருக்கிறது. தமிழ்ப்புத்தகங்களைப் படிக்கிறோம். தமிழ்ப்பத்திரிக்கைகள் இருக்கின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று ஏகப்பட்ட ஊடகங்கள் எல்லாம் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இவ்வளவு இருந்தும் நமது அடையாளங்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன் கெடா மாநிலத்தைச் சேர்ந்த எழுத்தாளர் நாரண.திருவிடச்செல்வன் அவர்கள் தூய தமிழில் பெயர் வைப்பது பற்றி ஒரு புத்தகம் வெளியிட்டிருந்தார். அது அறுபதாம் ஆண்டுகளில் வந்த ஒரு புத்தகம். அப்போதாவது தாத்தா, பாட்டி, சினிமா நடிகர்களின் பெயர்கள் என்று குழந்தைகளுக்குப் பெயர்களை வைத்துக் கொண்டிருந்தார்கள்

இப்போதுள்ள மருமகள்கள்  தாத்தா, பாட்டி பெயர்களை விரும்புவதில்லை. அதற்குப் பதிலாக நிஷா, இஷா, பிஷா, திஷா, ரிஷா ஷிஷா என்பது போன்ற பெயர்களை வைத்து நம்மைத் திணறடிக்கிறார்கள்! 

இப்படித்தான் "மாடர்ன்" னாக பெயர் வைப்போம் என்றால் நாம் தமிழர்கள் என்னும் அடையாளத்திற்காகவாவது  நிஷா சின்னதுரை, இஷா இளங்கோவன், திஷா திருவாசகம், ரிஷா ரத்தினம், ஷிஷா செல்வதுரை என்று பெயர் வைத்தால் நமது கொஞ்ச நஞ்ச அடையாளமாவது  நீடிக்கும்.,அதனை ஏன் நாம் புறம் தள்ள  வேண்டும்?  

ஐ.நா. சபையில்,  தென் ஆப்பரிக்க  பிரதிநிதியாக அங்கம் வகித்த நவநீதம் பிள்ளை என்பவரைப்  பலர் அறிவர் அவர் ஒரு தமிழ்ப்பெண் என்பதை அவருடைய பெயர் தானே ஆதாரமாக விளங்குகிறது. இல்லாவிட்டால் அவரை நாம் கறுப்பர்கள் பட்டியலில் தானே சேர்க்க வேண்டி வரும்?

அதே போல,  தென் அமெரிக்காவின் ஒரு பகுதியில் இருக்கும் GUYANA என்னும் நாட்டின் ஆட்சி மொழி ஆங்கிலம். பல மொழிகள் அங்கு பேசுப்படுகின்றன. அந்த நாட்டின் பிரதமர் ஒரு தமிழர்.அவர் பெயர் மோசஸ் நாகமுத்து.மோசஸ் என்பது கிறிஸ்துவப் பெயராக இருந்தாலும் அவருடைய பரம்பரைப் பெயரான நாகமுத்து என்பது அவர் ஒரு தமிழர் என்பதைக் காட்டிக் கொடுக்கின்றதே! அவருடைய மூதாதையர் தமிழ் நாட்டிலிருந்து அங்கு பிழைக்கச் சென்றவர்கள் என்பதற்கான அடையாளம் அது தானே!  

பெற்றோர்களே! குழந்தைகளின் பெயரில் அலட்சியம் காட்டாதீர்கள். உங்கள் பெயரை உங்கள் பிள்ளைகள் சொல்ல வேண்டும். வெள்ளைக்காரர்கள் தங்களது குடும்பப் பெயரை மிகவும் மதிக்கிறார்கள்.

நமக்கும் அந்தக் கடப்பாடு உண்டு.பெயரில் எல்லாமே உண்டு. அதில் நமது சரித்திரமே உண்டு. அலட்சியம் வேண்டாம்!                                                                                                                                                                                                                                              

No comments:

Post a Comment