Wednesday 10 February 2016

மானியங்கள் மறைந்து போன மர்மமென்ன.....?



நமது மலேசிய நாட்டில் ஆகக் கடைசியாக 524 தமிழ்ப்பள்ளிகள் இயங்கி வருவதாக நாம் அறிகிறோம். அதில் 367 பள்ளிகள் பகுதி அரசாங்க உதவி பெறும் பள்ளிகளாகவும் 157 பள்ளிகள் முழு அரசாங்கப் பள்ளிகளாகவும் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆனால் ஒரு காலக்கட்டத்தில் - நாடு சுதந்திரம் அடைந்த போது -   888 தமிழ்ப்பள்ளிகள் நாட்டில் இயங்கி வந்தன. பலவித காரணங்களால் - குறிப்பாக தோட்டத் துண்டாடல்  என்பதுவே முக்கியமான காரணம் -  பல தமிழ்ப்பள்ளிகள் காணாமல் போய்விட்டன.  தோட்டங்கள் இல்லையென ஆன பிறகு, அங்கு பணிபுரிந்து வந்த இந்தியர்கள் பலவித மாற்றங்களுக்கு உள்ளாகினர்.  இந்தியர்கள் தோட்டங்களிருந்து வெளியேறிய பின்பு  பல தமிழ்ப்பள்ளிகளும் இல்லையென ஆகிவிட்டன.

இப்போது நம்மிடையே இயங்கிவரும் தமிழ்ப்பள்ளிகள் தோட்டங்கள், பட்டணங்கள் என இருபுறமும்  524 தமிழ்ப்பள்ளிகள்  இயங்கி வருகின்றன.

இந்த 524 தமிழ்ப்பள்ளிகளில் ஒரு சில மாணவர்கள் பற்றாக்குறையால் மூடுவிழா காணும் என்று சொல்லப்படுகின்றது. அதே சமயத்தில் புதிதாக இன்னும் ஆறு தமிழ்ப்பள்ளிகள் எந்த நேரத்திலும் திறக்கப்படும் என்னும் நிலையும் உருவாகி வருகின்றது.

கடந்த ஒருசில ஆண்டுகளாக தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைச் சரிந்து வருவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. தமிழ்ப்பள்ளிகளின் மீதான நம்பிக்கை பெற்றோர்களிடையே குறைந்து வருவதையே இது காட்டுகின்றது.

தமிழ்ப்பள்ளிகளின் தரம் மீது எந்தவித குற்றச்சாட்டும் இல்லை. ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு எல்லாவிததிலும் உயர்ந்து நிற்கின்றது.

ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் நமது அரசியல்வாதிகளின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதே இன்றைய நிலைக்குக் காரணம் என்றும் சொல்லப்படுகின்றது.

தமிழ்ப்பள்ளிகளில் இன்னும் பல பள்ளிகள் சரியான அடிப்படை வசதிகள் இன்றி செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன என்னும் குற்றச்சாட்டு எப்போதும் உண்டு. இந்தக் குற்றச்சாட்டுகளைக்களைய நமது அரசியல்வாதிகள் எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என்பது பொதுவானக் குற்றச்சாட்டு.

ஆனாலும் இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பதை  நமது அரசியல்வாதிகளே - அதுவும் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளே - மீண்டும் மீண்டும் மெய்ப்பித்து வருகின்றனர்! சொல்லியும் வருகின்றனர்! தமிழ்ப்பள்ளிகளுக்காக அரசாங்கம் இதுவரை பல கோடிகள் மானியங்களாக கொடுத்துவிட்டதாகவும் கூறி வருகின்றனர்!

இது தான் நமக்கு ஆச்சரியமும் அதிர்ச்சிமிக்க செய்தியாகவும் நம்மை உறுத்துகின்ற செய்தியாக இருக்கின்றது. அரசாங்கம் இது நாள் வரை தமிழ்ப்பள்ளிகளுக்குக் கொடுத்த மானியங்கள் பல கோடி வெள்ளிகள். ஆகக் கடைசியாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டத் தொகை- பகுதி அரசாங்க உதவி பெறும் பள்ளிகள் - உதவி பெற்றத் தொகை சுமார் 760 மில்லியன்! இந்த 367 பள்ளிகளுக்கும் இந்தத் தொகை பகிர்ந்து அளிக்கப்பட்டிருந்தால் இன்று அனைத்துப் பகுதி உதவி பெறும் பள்ளிகள் தலை நிமிர்ந்து நிற்கும்! நிற்க வேண்டும்!

ஆனால் நிலைமை அப்படி இல்லை. இன்னும் இந்தப் பள்ளிகளுக்கு மாணவர்கள்  அமர்ந்து படிப்பதற்கான அடிப்படை  வசதிகளே இல்லை! இன்னும் அவை தரமற்ற கட்டங்களைக் கொண்ட பள்ளிகளாகவே விளங்குகின்றன.

நமக்கு இப்படி சொல்லுவதற்கே வெட்கமாகவும், கூச்சமாகவும் இருக்கின்ற போது நமது ஆளுங்கட்சி அரசியல்வாதிகளுக்கு அப்படி எதுவுமே இல்லாமல் எப்படி இப்படியெல்லாம், இவ்வளவு துணிவாக, அவர்களால்  பேச முடிகிறது என்பது நமக்கே புரியாத புதிராக இருக்கிறது!

மானியங்கள் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கொடுக்கப்பட்டது  உண்மை. அதுவும் கோடிக்கணக்கில் கொடுக்கப்பட்டதும் உண்மை.ஆனால் மானியங்கள் எந்தப் பள்ளிகளுக்கு எவ்வளவு கொடுக்கப்;பட்டது என்பது மட்டும் சிதம்பர ரகசியம்!

ஒவ்வொரு பள்ளிக்கும் கொடுக்கப்பட்ட மானியம் எவ்வளவு என்பதை மட்டும் எந்த ஆளுங்கட்சி அரசியல்வாதியும் வாயைத் திறக்கமாட்டேன் என்கிறார்கள்! ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் என்னும் போது இவர்கள் வேற்று இனத்தவர் என்று நினைக்க வேண்டிய அவசியமில்லை. இவர்கள் தமிழர்கள்! தமிழ்ப்பள்ளியில் படித்தவர்கள். தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள்

ஆனாலும் இப்படித் தாயையே எட்டி உதைப்பவர்களாக இருக்கிறார்களே என்று  நினைக்கும் போது மனம் வேதனையுறுகிறது. பெற்ற தாயையே உதைப்பவர்களுக்குச் சமுதாயத்தைப் பற்றி என்ன கவலை?

இப்போதைக்கு மானியங்கள் மறைந்து போகலாம். அது அப்படியே இருக்கப்போவதில்லை. மர்மங்கள் மர்மங்களாகவே மறைந்திருக்கப் போவதில்லை. மர்மமும் வெளிச்சத்திற்கு வரும். அது வெகு சீக்கிரம் வரும் என்பதில் ஐயமில்லை!






No comments:

Post a Comment