Friday 29 May 2020

ஒரு மகளின் பாசம்

கொரனோ தொற்று நோயினால் எத்தனையோ பிரச்சனைகள். எத்தனையோ அசம்பாவிதங்கள், எத்தனையோ மகிழ்ச்சியான தருணங்கள் - இப்படி நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இன்னும் அதற்கு ஒரு முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் என நம்பலாம்.



சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு பற்றி யோசிக்கும் போது ஒரு பள்ளி மாணவியான, 15 வயது ஜோதி குமாரி ஓர் அசாதாரண நிகழ்வினை நடத்திக் காட்டியிருக்கிறார்! உலகமே வியக்கிறது என்று சொல்லலாம்.

இந்தியாவின் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜோதி குமாரி. அவரது தந்தை ஒரு ரிக்‌ஷா ஓட்டுனர். அவர் பணி புரிந்த இடமோ டில்லி அருகே உள்ள ஒரு பட்டணத்தில்.  அப்போது அவருக்கு ஏற்பட்ட ஒரு விபத்தில் அவரால் தனது பணியினை செய்ய முடியாமல் முடங்கிப் போனார்.

அப்போது அவரைப் பார்க்க அவர்களது குடும்பத்தினர் வந்திருந்தனர். அவரைப் பார்த்து விட்டு அவர்கள் திரும்பிப் போய்விட்ட நிலையில் மகள் ஜோதி மட்டும் தந்தையைப் பார்த்துக் கொள்ள அங்கேயே தங்கி விட்டார்.

அந்த நேரத்தில் கொரனோவால் ஏற்பட்ட ஊரடங்கினால் தனது தந்தையை பீகாருக்கு கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார் ஜோதி குமாரி.  அடுத்து ஓர் அசாதாரண முடிவெடுத்தார்.

கையில் இருந்த பணத்தைக் கொண்டு ஒரு சைக்கிளை வாங்கினார். தந்தையை சைக்கிளின் பின்னால் உட்கார வைத்தார். ஆரம்பித்தது சைக்கிள் பயணம்!

பயணம் சாதாரணமானது அல்ல.  1200 கிலோ மீட்டர் பயணம். ஏழு நாள்கள் தொடர் பயணம். அதில் இரண்டு நாள்கள் பட்டினி.  உணவுக்கு வழியில்லை. ஆனாலும் முன் வைத்த காலை பின் வைக்கவில்லை அந்த இளம் வீராங்கனை! துணிச்சல் மிக்கவர். இப்போது அவரை இந்த உலகமே பாராட்டுகிறது.

என்ன தான் அதனை ஒரு வெற்றியாக நினைத்தாலும இப்படி ஒரு நிலைமை அவருக்கு ஏற்பட்டதை நினைக்கும் போது மனம் ஏற்கவில்லை.

இந்த நிகழ்விலிருந்து நாம் என்ன கற்றோம்? எந்தப் பக்கம் இருந்தும் ஆதரவு இல்லை. யாரும் உதவுக் கூடிய  நிலையில் இல்லை. "நம் கையே நமக்கு உதவி!"  அவ்வளவு தான்!  அதனைத் தான் ஜோதி குமாரி செய்திருக்கிறார். ஒரு வேதனையிலும் ஒரு சாதனைப் படைத்திருக்கிறார்.

அவரின் எதிர்காலம் சிறக்க வாழ்த்துவோம்!

No comments:

Post a Comment