Wednesday, 3 August 2016
கேள்வி - பதில் (27)
கேள்வி
கபாலி திரைப்படத்திற்குப் பின்னர் தமிழ் திரைப்படவுலகிள் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டா?
பதில்
ஏற்பட வாய்ப்புண்டு என்றே நான் நினைக்கிறேன்.
கபாலி படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஒரு கூட்டத்தில் பேசும் போது தனது சினிமா வாழ்க்கையில் தனக்குப் பிடித்த இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமனும், பா.ரஞ்சித் இருவரைப் பற்றி குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். இந்த இரு இயக்குனர்களும் தயாரிப்பாளர்களின் செல்லப் பிள்ளைகள் என்று குறிப்பிட்டிருக்கிறார்!
எஸ்.பி.முத்துராமன் ரஜினி வைத்து 25 படங்களை இயக்கி மாபெரும் வெற்றி பெற்றவர். எஸ். தாணுவின் கருத்துப்படி இந்த இரு இயக்குனர்களுமே தயாரிப்பாளர்களின் நலனை முன்னிறுத்துபவர்கள். தயாரிப்பாளர்களுக்கு எந்தவித நட்டத்தையும் ஏற்படுத்தக்கூடாது என்று நினைப்பவர்கள். இவர்கள் இருவருமே தயாரிப்பாளர்கள் கொடுக்கின்ற மதிப்பீட்டுக்குள்ளேயே தங்களது படங்களை முடித்துக் கொடுப்பவர்கள் என்று பெயர் எடுத்தவர்கள்.
இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இப்போது எந்தப் படங்களையும் இயக்குவதில்லை. அடுத்து நிற்பவர் பா.ரஞ்சித். அவருடைய முன்னைய இரு படங்களும் - அட்டைக்கத்தி, மெட் ராஸ் - இரு படங்களுமே குறைந்த செலவில் நிறைவாக எடுக்கப்பட்டப் படங்கள். வெற்றிகரமாக ஓடிய படங்கள்! ஏன்? கபாலி ஒரு பெரிய பிரமாண்ட தயாரிப்பாக இருந்தாலும் அவர் கபாலியில் ஏகப்பட்ட சிக்கனத்தைக் கையாண்டவர்! பணத்தை வாரி இறைக்க அவர் சம்மதிக்கவில்லை! அது ஒன்றே போதும் தயாரிப்பாளர்களை மனங்குளிரவைக்க! பணத்தைக் கொட்டிக்கொடுக்க தயாரிப்பாளர் தயராக இருந்தாலும் அவர் அதனை ஏற்கவில்லை! தேவை என்றால் மட்டுமே செலவுகளை ஏற்பவர்! இது தான் எஸ்.பி.முத்துராமனின் அவர்களின் வழியுங்கூட! அதனால் தான் அவர் தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளையாக இருந்திருக்கிறார்! அத்தோடு 75 படங்களையும் இயக்கியிருக்கிறார்!
இந்த முன்மாதிரிகள் இனி எல்லாத் தயாரிப்பாளர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமையக் கூடிய சாத்தியம் உண்டு!
அதுமட்டும் அல்லாமல் மக்களின் பிரச்சனைகளை வெளிக்கொணர வேண்டும் என்னும் ஒரு நினைப்பையும் கபாலி படம் உருவாக்கியிருக்கிறது! பல பிரச்சனைகளை - குறிப்பாக ஏழை பாழைகளின் பிரச்சனைகள் - வெளி வருவதில்லை! அனைத்தும் அடக்கி ஒடுக்கி மறைக்கப்படுகின்றன! அரசியல்வாதிகள் இப்போது ஒரு புதிய வழியைக் கையாளுகின்றனர். எங்கேயாவது ஒரு அநீதி நடந்துவிட்டால் உடனே அந்தக் குடும்பத்தினருக்குக் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து மறைத்துவிடுகின்றனர்!
இப்போது கபாலி ஒரு புதிய பாதையைக் காண்பித்துக் கொடுத்திருக்கிறது.. புதிய இயக்குனர்களுக்கு ஒர் உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது கபாலி. மக்களின் அன்றாடப் பிரச்சனைகளைத் திரை உலகம் கையில் எடுத்திருக்கிறது என்று சொல்லலாம்.
இனி வருங்காலங்களில் மக்களின் பிரச்சனைகளைச் சினிமா உலகம் கையிலெடுத்துப் பயணிக்கும் என்று நம்பலாம்!
கபாலியின் வரவு தமிழ்த் திரை உலகிற்கு ஒரு புதிய வரலாறு படைக்கும்!
Tuesday, 2 August 2016
கேள்வி-பதில் (26)
கேள்வி
அண்மையில் வெளியான ரஜினியின் கபாலி ஒரு தலித் படம் என்கிறார்களே! சரியா?
பதில்
தங்கத் தமிழ் நாட்டில் இப்படி எதையாவது சொல்லி புரட்சி செய்வதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கின்றது! நமது மண்ணில் இப்படிப் பேசினால் ஆளையே மூட்டைக்கைட்டி விடுவார்கள்!
ஒரு சில வசனங்களை வைத்து இப்படி தலித் முத்திரைக் குத்துவது ஏற்புடையது அல்ல! இது போன்ற வசனங்கள் தமிழ்ப்படங்களுக்குப் புதிதும் அல்ல!
சான்றுக்கு, கலஞர் கருணாநிதியின் படங்களில் இது போன்ற வசனங்கள் எல்லாக் காலங்களிலும் உண்டு. அந்த வசனங்களின் மூலம் கலைஞர் தான் பேசப்பட்டாரே தவிர மற்றபடி அந்த வசனங்கள் எந்தத் தாக்கத்தையும் சமுதாயத்திற்குக் கொண்டு வரவில்லை! பார்த்துவிட்டு, பேசிவிட்டு, ரசித்துவிட்டு போய்விடுவார்கள்! அதனை மறந்தும் விடுவார்கள்!
வேறு ஒரு நடிகர் மூலம் இதே வசனங்களை இயக்குனர் பா.ரஞ்சித் வேறு படங்களில் பேச வைத்தாலும் கூட இந்தப் படத்தின் மூலம் வந்தத் தாக்கத்தை அது ஏற்படுத்தாது!
காரணம் அது தான் சுப்பர் ஸ்டார் ரஜினி! ரஜினி அந்த வசனங்களைப் பேசும் போது அதற்கான கணம் வேறு; அதற்கான பலம் வேறு; அதற்கான வலு வேறு! இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த வசனங்களைப் பேச ரஜினி ஒத்துக்கொண்டாரே அது சாதாரணமான விஷயம் அல்ல! அந்த வசனங்களின் மூலம் வரும் எதிர்ப்புக்களையும் அவர் அறிந்தவர் தான்! இருந்தும் அவர் அந்த வசனங்களைப் பேசினாரே அது தான் ரஜினி! அவருக்கும் சமுதாய நோக்கம் உண்டு என்பதை உணர்ந்து அந்த வசனங்களைப் பேசி இருக்கிறார்!
நாம் இயக்குனர் பா.ரஞ்சித்தையும் பாராட்ட வேண்டும். வேறு எந்த இயக்குனரும் ரஜினியிடம் சொல்லத் தயங்கும் ஒரு விஷயத்தை மிகவும் லாவகமாகப் பிரச்சனையைக் கையாண்டிருக்கிறாரே அவருக்கு நமது வாழ்த்துகள்!
சுப்பர் ஸ்டார் அரசியலுக்கு வருவாரா என்பது நமக்குத் தெரியாது. அவர் பேசிய அந்த வசனங்களே போதும்! அதுவே பெரிய அரசியல்! எத்தனையோ படங்களில் அவர் நடித்திருக்கிறார். ஆனால் தனது குணசித்திர நடிப்பையும் வெளிகாட்டி, தனது சமூகக் கடப்பாடுகளையும் கொட்டியிருக்கிறாரே அவருக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி! மகிழ்ச்சி தலைவரே!
இது தலித் படம் என்று சொன்னால் - மன்னிக்கவும் - நமது மலேசிய மண்ணில் சொன்னால் நிச்சயம் உதை படுவார்கள்! இது ஓர் அற்புதமான தமிழ்ப்படம்! பாராட்டுவோம்!
Monday, 1 August 2016
கபாலி.......மகிழ்ச்சி......டா...!
கபாலி திரைப்படத்தைப் பற்றி என்ன சொல்லுவது?
அது வழக்கமான ரஜினி படம் இல்லை! வழக்கமாக நீங்கள் எதிர்பார்க்கும் சுப்பர் ஸ்டார் படமில்லை! நீங்கள் பட அரங்கத்திற்குள் புகுமுன்னே அந்த எதிர்பார்ப்புக்களை எல்லாம் கழட்டி வைத்துவிட்டுப் போங்கள்!
அது ரஜினியின் வயதுக்கு ஏற்ப எடுக்கப்பட்ட ஒரு படம். வயதான கதாபாத்திரம். அசத்தியிருக்கிறார் ரஜினி. தனக்கும் நடிக்க வரும் என்பதை மீண்டும் உறுதிபடுத்தியிருக்கிறார்.
உடல்நிலைக் காரணமாக ஒரு சோர்வு அவரிடம் காணப்படுகிறது. அதனையும் கூட - அது 25 ஆண்டு கால சிறைவாசம், குடும்பத்தினரின் பிரிவு தான் காரணம் - என சாமர்த்தியமாகப் பயன் படுத்தியிருக்கிறார் இயக்குனர்! நடிப்பில் ஓர் அமைதி. நடப்பதில் கூட ஒரு மென்மை. குறைவாகப் பேசுவது. தனது மனைவியையும், மகளையும் நினைத்து அடிக்கடிக் கண் கலங்குவது. ஆனால் சண்டை என வரும்போது அந்தத் துள்ளல் துள்ளி விளையாடுகிறது! அது தான் ரஜினி!
இந்தத் திரைப்படம் நமது மண்ணின் மைந்தர்களின் கதை. குண்டர் கும்பல்களின் கலாச்சாரம் எந்த அளவுக்கு நமது இளைஞர்களிடம் பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதான் கதை.
நாம் அறிந்த கதை தான். ஆனால் அதற்கான தீர்வு தான் என்ன என்பது நம்மிடம் இல்லை! இந்தக் குண்டர் கும்பல்களை அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள் தங்களின் வளர்ச்சிக்காக! காவல்துறையினரும் கண்டு கொள்ளுவதில்ல! "உங்களுக்குள்ளேயே அடித்துக்கொண்டு சாகுங்கடா..!" என்று இவர்களும் அவர்களை ஊக்குவிக்கிறார்கள்!
ஒரு தீர்வும் இல்லாத ஒரு நிலையில் "கபாலி" மூலம் சில செய்திகளைச் சொல்ல வருகிறார் இயக்குனர் பா.ரஞ்சித். அந்தச் செய்தி சேர வேண்டிய இடத்தில் சேர்ந்தால் நமக்கும் மகிழ்ச்சியே! சேரும் எனவும் நம்புவோம்!
கபாலி இயக்குனர் பா.ரஞ்சித் பல வழிகளில் தாக்கப்படுகிறார்! நான் அவரைத் தற்காக்கிறேன்! ரஜினி கோட் சூட் போடுவது, கால்மேல் கால் போட்டு உட்காருவது என்பது நமக்குள்ள செய்தி அல்ல! இதனைத் தவறு என்று சொன்னால் சொன்னவன் தான் உதை வாங்க வேண்டும்! அது நமது கலாச்சாரம். உச்சக்கட்ட காட்சிகளில் பேசப்படும் வசனங்கள் நமக்கானதல்ல! ஆனாலும் இயக்குனரைப் பாராட்டுகிறேன். இதே வசனங்களை வேறு படங்களிலும் பேசலாம். ஆனால் ரஜினி பேசும் போது அதற்கான வலு அதிகம்; பலம் அதிகம்! ரஜினி ஓர் அரசியல்வாதியாய் ஆகியிருந்தால் கூட இப்படிப் பேசியிருக்க முடியாது! வலிந்து ஆனால் ரஜினி அறிந்து அந்த வசனங்களைப் பேச வைத்திருப்பது என்பது ரஜினிக்கும் ஒரு சமூகக் கடமை உண்டு என்பதை அறிந்தும் புரிந்தும் ரஜினி பேசியிருக்கிறார்! அவருக்கு நமது வாழ்த்துகள்!
படம் ஷங்கர் போன்று பிரமாண்டம் இல்லை என்றாலும் கேமராமேன் தனது ஒளிப்பதிவின் மூலம் பிரமாண்டமாக காட்சிகளை நம் கண் முன் கொண்டு வந்திருக்கிறார். படம் முழுவதுமே ஒரு பிரமாண்டம் தெரிகிறது. வாழ்த்துகள் நண்பரே! இசையமைப்பு மிக அற்புதம்! நெருப்புடா...! நான் சொல்ல ஒன்றுமில்லை, பின்னணி இசை இனிமையோ இனிமை! மென்மை, பயங்கரம் அனைத்தையும் நன்கு வெளிப்படுத்யிருக்கிறார், சந்தோஷ் நாராயணன்! வாழ்த்துகள்!
கபாலி! மகிழ்ச்சி!......மகிழ்ச்சிடா...!
Subscribe to:
Posts (Atom)