Tuesday 2 August 2016

கேள்வி-பதில் (26)


கேள்வி

அண்மையில் வெளியான ரஜினியின் கபாலி ஒரு தலித் படம் என்கிறார்களே! சரியா?

பதில்

தங்கத் தமிழ் நாட்டில் இப்படி எதையாவது சொல்லி புரட்சி செய்வதற்கென்றே  ஒரு கூட்டம் இருக்கின்றது!  நமது மண்ணில் இப்படிப் பேசினால் ஆளையே மூட்டைக்கைட்டி விடுவார்கள்!

ஒரு சில வசனங்களை வைத்து இப்படி தலித் முத்திரைக் குத்துவது ஏற்புடையது அல்ல! இது  போன்ற வசனங்கள் தமிழ்ப்படங்களுக்குப் புதிதும் அல்ல!

சான்றுக்கு, கலஞர் கருணாநிதியின் படங்களில் இது போன்ற வசனங்கள் எல்லாக் காலங்களிலும் உண்டு. அந்த வசனங்களின் மூலம் கலைஞர் தான் பேசப்பட்டாரே தவிர மற்றபடி அந்த வசனங்கள் எந்தத் தாக்கத்தையும் சமுதாயத்திற்குக்  கொண்டு வரவில்லை! பார்த்துவிட்டு, பேசிவிட்டு, ரசித்துவிட்டு போய்விடுவார்கள்! அதனை மறந்தும் விடுவார்கள்!

வேறு ஒரு நடிகர் மூலம் இதே வசனங்களை இயக்குனர் பா.ரஞ்சித் வேறு படங்களில் பேச வைத்தாலும்  கூட இந்தப் படத்தின் மூலம் வந்தத்  தாக்கத்தை அது ஏற்படுத்தாது!

காரணம் அது தான் சுப்பர் ஸ்டார் ரஜினி!  ரஜினி அந்த வசனங்களைப் பேசும் போது அதற்கான கணம் வேறு; அதற்கான பலம் வேறு; அதற்கான வலு வேறு! இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த வசனங்களைப் பேச ரஜினி ஒத்துக்கொண்டாரே அது சாதாரணமான விஷயம் அல்ல! அந்த வசனங்களின் மூலம் வரும் எதிர்ப்புக்களையும் அவர் அறிந்தவர் தான்! இருந்தும் அவர் அந்த வசனங்களைப் பேசினாரே அது தான் ரஜினி! அவருக்கும் சமுதாய நோக்கம் உண்டு என்பதை உணர்ந்து அந்த வசனங்களைப் பேசி இருக்கிறார்!

நாம் இயக்குனர் பா.ரஞ்சித்தையும் பாராட்ட வேண்டும். வேறு எந்த இயக்குனரும் ரஜினியிடம் சொல்லத் தயங்கும் ஒரு விஷயத்தை மிகவும் லாவகமாகப் பிரச்சனையைக் கையாண்டிருக்கிறாரே அவருக்கு நமது வாழ்த்துகள்!

சுப்பர் ஸ்டார் அரசியலுக்கு வருவாரா என்பது நமக்குத் தெரியாது. அவர் பேசிய அந்த வசனங்களே போதும்! அதுவே பெரிய அரசியல்! எத்தனையோ படங்களில் அவர் நடித்திருக்கிறார்.  ஆனால் தனது குணசித்திர நடிப்பையும் வெளிகாட்டி, தனது சமூகக் கடப்பாடுகளையும் கொட்டியிருக்கிறாரே அவருக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி! மகிழ்ச்சி தலைவரே!

இது தலித் படம் என்று சொன்னால் - மன்னிக்கவும் - நமது மலேசிய மண்ணில் சொன்னால் நிச்சயம் உதை படுவார்கள்! இது ஓர் அற்புதமான தமிழ்ப்படம்! பாராட்டுவோம்! 

No comments:

Post a Comment