Tuesday, 8 November 2016
ஹின்ராப் இயக்கம் தேர்தலில் குதிக்குமா?
ஹின்ராப் அடுத்து வரும் பொதுத் தேர்தலில் பங்கெடுக்குமா என்பதை வெகு விரைவில் தீர்மானிக்கும் என்று அதன் தலைவர் வேதமூர்த்தி அறிவித்திருக்கிறார்.
அவர் ஆளுங்கட்சியில் கூட்டுச் சேர வழியில்லை. எந்த ஆளுங்கட்சியும் அவரை வரவேற்கத் தயாராக இல்லை. அப்படியே அவர்கள் வருந்தி அழைத்தாலும் அவரும் போகத் தயாராக இல்லை.
ஒரு காலக்கட்டத்தில் இப்போதைய அரசாங்கத்தில் துணை அமைச்சராக இருந்தவர் பொன் வேதமூர்த்தி. இந்தியர்கள் சார்பில் பிரதமருடன் ஒர் ஒப்பந்தம் போட்டுவிட்டு துணை அமைச்சரானவர். ஆனால் அவர் நினைத்தபடி எதனையும் அவரால் செயல்படுத்த முடியவில்லை!
நல்லதைச் செய்ய வேண்டுமென்று அவரிடம் ஆர்வம் இருந்தது. பிரதமரின் ஒத்துழைப்பும் ஒரளவு இருந்தது. ஆனால் அங்கு ம.இ.கா. (மலேசிய இந்தியர் காங்கிரஸ்} அவருக்கு இடையூறாக இருந்தது! அவர் செய்ய நினைத்த அனைத்துக்கும் அது தடையாக இருந்தது! அவரால் எதனையும் செய்ய இயலவில்லை. மனம் வெறுத்துப் போய் தனது துணையமைச்சர் பதவியை பதவிதுறப்புச் செய்துவிட்டார். பிரதமருக்கு ஒரு விஷயம் புரிந்துவிட்டது. இந்தியர்களுக்கு தான் எதுவும் செய்ய வேண்டிய அவசியமில்லை. ம.இ.கா. இருந்தாலே நமக்குப் போதும். அவர்களே நாம் எதையும் செய்ய முடியாதபடி பார்த்துக் கொள்ளுவார்கள் என்று!
ஆளுங்கட்சியில் சேரமுடியாத ஒரு நிலையில் அவர் எதிர்கட்சியில் சேர நினைக்கலாம்.அவர்கள் வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் தேர்தல் என்று வரும் போது பெரிதாக அவர்களிடமிருந்து எதனையும் எதிர்பார்க்க முடியாது! ஒரு நாடாளுமன்ற இடம் கொடுத்தாலே அதுவே பெரிய சாதனை!
பொதுவாக ஹின்ராப் தனித்து ஓர் அரசியல் கட்சியாக இயங்க வழியில்லை. முற்றிலும் அவர்கள் இந்தியர் சார்ந்த ஒர் அமைப்பு. இந்தியர்கள் எந்தத்தொகுதியிலும் பெரும்பான்மை இல்லாதவர்கள். அவர்கள் போட்டிப்போட நினைக்கும் ஒரளவு இந்தியர் சார்ந்த தொகுதிகள் அனைத்தும் ம.இ.கா. வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். எதிர்கட்சி இந்திய வேட்பாளர்களும் அங்குக் களம் இறக்கப்பபடுவார்கள். தனித்து இவர்கள் போட்டியிட்டால் வேற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் மிகமிகக் குறைவு.
நாடாளுமன்றத்தில் நமது குரல் ஒலிக்க வேண்டும் என்று நினைப்பது நல்லது தான். இப்போது மட்டும் என்ன? நமது குரல் ஒலிக்காமலா இருக்கிறது? எதிர்கட்சியினர் அதனைச் செய்கிறார்களே! ம.இ.கா.வினரைத் தவிர மற்றவர்கள் குரல்கள் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றன!
நாங்கள் நாடாளூமன்றத்திற்குப் போனால் எல்லாவற்றையும் மாற்றிவிடுவோம் என்னும் வீண் நினைப்பால் யாருக்கும் பயனில்லை!
ஒன்று ஆட்சி மாற வேண்டும் அப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டால் ஒரு வேளை ஒரு சில மாற்றங்களைக் கொண்டு வரலாம். கல்வி, வேலை வாய்ப்பு போன்ற சில பிரச்சனைகள் நமக்குச் சாதகமாக இல்லை என்பது உண்மை தான்.
ஹின்ராப் தலைவர் வேதமூர்த்தி அவர்கள் தனது இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றுவது என்பது அவரது உரிமை. ஆனால் காலங்காலமாக ஏமாற்றுப்பட்டு வரும் நம் இனத்தவர்கள் யாரையும் நம்பத் தயாராக இல்லை என்பது தான் உண்மை!
ஹின்ராப் அரசியலில் குதிக்கட்டும்! கூத்தாடட்டும்! வாழ்த்துகிறோம்!
கடைசியாக,
எந்த ஓர் அரசியல்வாதியையும் நம்பிப் பயனில்லை! நம்மை நாமே நம்புவோம்!
Saturday, 5 November 2016
கபாலி ....ஒரு கண்ணோட்டம்!
கபாலி திரைப்படம் வெளியாகி மூன்று மாதங்கள் மேல் ஆகிவிட்டன. 100 நாள்கள் மேல் ஒடி முடிந்துவிட்டது..
இந்த நிலையில் ஒரு கண்ணோட்டமா? அதனாலென்ன? படம் வெளியானதும் அடித்துப்பிடித்து விமர்சனம் செய்கிற அளவுக்கு எனக்கு ஒன்றும் அவசரமில்லை!
இதனை ஒரு பெரிய விமர்சனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். என்னுடைய கண்ணோட்டத்தில் சில கருத்துக்கள். அவ்வளவு தான்!
அதுவும் கபாலி மலேசியாவைக் களமாக கொண்ட ஒரு திரைப்படம். அதனை மனதில் கொண்டு சில கருத்துக்கள்.
முதலாவது கபாலி நமக்குச் சீனர்களை எதிரியாகக் காட்டுகிறது. அது உண்மை தான் என்றாலும் நமக்குப் பெரிய எதிரி அரசாங்கம் தான். அந்த உண்மையைச் சொல்ல முடியவில்லை. அதனால் சீனர்கள் மேல் பழிபோடுவது என்பது எளிதாகப் போய்விட்டது!
அரசாங்கக் கொள்கைகள் அனைத்தும் நமக்கு எதிரானவை. மேற்கல்வி தடைச் செய்யப்படுகிறது. அப்படியே கிடைத்தாலும் நாம் விரும்பிய கல்வி கிட்டுவதில்லை. தனியார் கல்வி நிலையங்களில் படித்து வந்தாலும் வேலை கிடைப்பதில்லை. வெளி நாடுகளில், சொந்தப்பணத்தில், தரமான மருத்துவக் கல்வி கற்று வந்தாலும் அது தரமில்லை என்று குப்பையில் போடுவது. இப்படி எல்லாவற்றிலும் கதவடைப்பது. இவைகளையும் மீறித்தான் ஒரு சிலர் வெற்றி பெறுகிறார்கள். திறமைக்கு எந்த மரியாதையும் இல்லை.
அரசாங்க வேலை வாய்ப்புக்கள் நமக்கு மறுக்கப்படுகின்றன. தனியார் துறைகளிலும் நமக்குக் கிடைக்கின்ற வாய்ப்புக்களும் திறமைக்கு ஏற்ப அமையவில்லை. அரசாங்கமும் இதனை கண்டு கொள்ளவில்லை. நாட்டின் மூன்றாவது இனம் என்னும் முக்கியத்துவம் இல்லை. எல்லாத் துறைகளிலும் கதவடைத்தால் எப்படி முன்னேறுவது? வங்காள தேசத்தவனுக்கு உள்ள சலுகைக் கூட நமது இனத்தவருக்கு இல்லை!
சீனர்களின் நிலையோ வேறு. அரசாங்க உதவி அவர்களுக்குத் தேவை இல்லை. தனியார் துறை அவர்களைச் சார்ந்தது. நாடே அவர்களை நம்பித்தான் இருக்கிறது! சீனர்களிடம் ஒரு குணம் உண்டு. சீன இனத்தவரை ஒரு மாதிரியாகவும் மற்ற இனத்தவரை வேறு மாதிரியாகவும் பார்க்கின்ற குணம் அவர்களுடையது. அவர்கள் இனத்திற்கு ஒரு விலை, ஒரு சம்பளம்! நம்மைவிட அவர்களுக்குக் கூடுதலான சம்பளம். கடைகளில் அவர்களுக்கு என்று ஒரு விலை! நமக்கென்று ஒரு விலை! என்னதான் அரசாங்கம் சட்டம் கொண்டு வந்தாலும், கொண்டு வந்தவர்களையே கையில் போட்டுக்கொண்டு, அவர்கள் அத்தனையையும் முறியடித்து விடுவார்கள்!
அபின், கஞ்சா என்பதெல்லாம் சீனர்களிடமிருந்து வருவது தான். நம் இனத்தவர் எல்லாம் அவர்களுக்குக் கீழே தான். ஆனால் அவர்கள் யாரும் தொட முடியாத இடத்தில் இருப்பார்கள். அகப்படுபவன் உதைப்படுபவன் எல்லாம் நம் இனத்தவன்!
கபாலியில் குண்டர் கும்பல் தலைவனாக ஒர் உயர் ஜாதி தமிழன் தலமை தாங்குவதாக காட்டப்பட்டிருப்பது எந்த அளவுக்கு உண்மை என்பது எனக்குத் தெரியவில்லை. அதனை நான் நம்பவில்லை என்றாலும் இயக்குனர் ரஞ்சித் இந்தத் தகவலை எங்கு பெற்றார் என்பது தெரிந்தால் தான் அதன் நம்பகத்தன்மை தெரியவரும். ஆனால் கபாலி, வில்லனைப் பார்த்து பேசுகின்ற அந்த உச்சக்கட்ட காட்சியின் வசனங்களைத் தேவையான ஒன்றாகவே கருதுகிறேன். ஆனால் அது முற்றிலும் தமிழ் நாட்டு நடப்பைப் பேசுகிறது! மலேசிய நடப்பை அல்ல!
படத்தில் கபாலி உடுத்துகிற உடைகளைப் பற்றி பல இடங்களில் பேசுப்படுகிறது. ஆனால் இவைகள் முற்றிலும் தமிழகப் பின்னணிக் கொண்டவை. இங்கு மலேசியாவில் உடைகள் உடுத்துவது பற்றி எந்த ஏற்றத்தாழ்வுகளும் இல்லை! மிகச் சாதாரணமானவன் கூட நல்ல தரமான உடைகளைத்தான் அணிகிறான்.மேலும் நமது நாட்டில் யார் தாழ்ந்தவன், யார் உயர்ந்தவன் என்று எப்படி கண்டு பிடிப்பது? நான் தாழ்ந்தவன், நான் உயர்ந்தவன் என்று யார் சொல்லிக் கொண்டு திரிகிறார்? ஒருவருமில்லை! ஒருவரின் குடும்பப் பின்னணி நமக்கு நேரடியாகத் தெரிந்தால் ஒழிய அதனையெல்லாம் அவ்வளவு எளிதில் நாம் கண்டுபிடித்துவிட முடியாது.
மேலும் கோட்-சூட் போடுபவரெல்லாம் உயர்ந்தவர்கள் என்னும் கலாச்சாரம் தமிழகக் பின்னணி கொண்டவை. இங்கு இது பிரச்சனை அல்ல. மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், கணக்காயர்கள், ஆசிரியர்கள் என்று எடுத்துக் கொண்டால் அனைத்துப் பிரிவினரும் இதில் உள்ளனர். அது மட்டும் அல்ல. காப்புறுதித்துறை, விற்பனையாளர்கள், நேரடித் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் அனைவருமே கோட்-சூட் போடுபவர்கள் தான். உடை அணிவதில் சாதியப்பிரச்சனை என்று ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை.
இப்போது கலப்புத் திருமணங்கள் அதிகம். குறிப்பாக மருத்துவத்துறை, சட்டம் பயிலுபவர்கள் பலர் காதல் திருமணங்கள் செய்கின்றனர். ஒரே துறையைச் சார்ந்தவர்கள் என்பதால் இங்கு சாதியம் அடிபட்டுப் போகிறது. நடுத்தர வட்டத்தில் வேண்டுமானால் இன்னும் இந்தப் பிரச்சனை இருக்கலாம். ஆனால் காதல் என்று வரும்போது சாதியம் தகர்க்கப்படுகிறது. இதை நான் நேரடியாகவே பார்க்கிறேன்.
தமிழ் சினிமா உலகில் கபாலி ஒரு வித்தியாசமான படம் என்பது உறுதி சொல்ல வந்த கருத்துக்கள் உண்மையானவை. அதுவும் இயக்குனர் ரஞ்சித் அவர் சொல்ல வேண்டிய செய்திகளை ரஜினி மூலம் சொல்ல வைத்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. ரஜினிக்கு மிக உயர்ந்த குணம். தனக்கும் இந்த சமூகத்தின் மேல் அக்கறை உண்டு என்பதை அவர் காட்டியிருக்கிறார். வாழ்த்துகள், ரஜினி சார்!
கபாலி மலேசியப் பின்னணியைக் கொண்ட படம் என்றாலும் அது தமிழகப்பிரச்சனையையும் பேசுகிறது என்பது தான் உண்மை. அது தவறு என்று நான் சொல்ல வரவில்லை. யாராவது, எங்கேயாவது அதனை பேசித்தான் ஆக வேண்டும். இது ஒரு ஆரம்பம்! இது தொடர வேண்டும் என்பது எனது நிலைப்பாடு!
இயக்குனர் ரஞ்சித்திடம் இன்னும் பல சமூக மாற்றத்திற்கான படைப்புக்களை எதிர்பார்க்கிறோம்.
கபாலி ஒரு வெற்றிப் படைப்பே!
Wednesday, 2 November 2016
அம்மா உணவகம்..!
அம்மா உணவகம் என்றால் தமிழ் நாட்டில் மிகவும் பிரபலம். அது அரசியல் உணவகம். நம் மலேசியாவில் காக்கா உணவகம் என்றால் மிகவும் பிரபலம்! நாம் அதனைக் "காக்காக் கடை" என்று செல்லமாக அழைப்போம்!
வெளிநாட்டு வாசர்களுக்கு: காக்காவுக்கும் இந்த உணவகங்களுக்கும் சம்பந்தம் இல்லை. இங்கு காக்கா என்று குறிப்பிடுவது கேரள நாட்டு முஸ்லிம்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதுவும் குறிப்பாக உணவகங்கள் நடத்தும் கேரள முஸ்லிம்களையே இது குறிக்கும்! இப்போது அது கொஞ்சம் கிளைவிட்டு உணவகங்கள் நடத்தும் தமிழ் முஸ்லிம்களையும் பற்றிக் கொண்டது!
இப்போது இந்த கேரள முஸ்லிம்களின் கடைகள் நாடெங்கம் அதிகரித்து வருகின்றன. மூலை முடுக்குகள் எல்லாம் இவர்கள் உணவகங்களைத் திறக்கின்றனர். முதாளிகளும் கேரள முஸ்லிம்கள், வேலை செய்பவர்களும் கேரள முஸ்லிம்கள்!
இவர்களின் முக்கிய வாடிக்கையாளர்களாக உள் நாட்டு முஸ்லிம்களையே குறி வைக்கின்றனர். இப்போது இந்திய உணவு வகைகளையும் சேர்த்துக் கொண்டு இந்தியர்களையும் வளைத்துப் போடுகின்றனர்! ஆனால் சுத்தம் என்று வரும்போது இவர்கள் இன்னும் தங்களது இந்திய உணவகங்களின் மரபையே பின் பற்றுகின்றனர்! அதனால் உள்நாட்டு இந்தியர்களின் ஆதரவு என்பது கொஞ்சம் தள்ளியே நிற்கிறது!
ஆனால் நாம் இங்கு சொல்ல வேண்டிய செய்தி இதுவல்ல. இவர்கள் உணவகங்கள் திறக்கிறார்கள். இவர்கள் அருகிலேயே மலாய்க்கார முஸ்லிம்களும் உணவகங்களை நடத்துகின்றார்கள். இந்தக் காக்காமார்களின் உணவகங்களோ 'ஓகோ' என்று நடைபெறுகின்றது. மலாய்க்கார உணவகங்களோ 'ஈகோ' என்று ஈ ஓட்டிக்கொண்Mடிருக்கிறது! இது எப்படி சாத்தியம்?
அப்படி ஒகோ என்று நடைபெறுகின்ற அளவுக்கு அங்கு எந்த விசேஷமும் இல்லை. ஆனால் அவர்களின் வியாபாரம் அசாதாரணமாக நடக்கிறது! அவர்களின் உணவகங்களின் விலையோ மற்ற உணவகங்களை விட விலை அதிகம்! அவர்கள் அரசாங்கம் சொல்லுகின்ற விலையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை! அவர்கள் வைத்தது தான் விலை. விலையோ கூடுதல்! ஆனால் அங்கு தான் மலாய்க்காரர்கள் அதிகம் கூடுகின்றனர்!
உண்மையைச் சொன்னால் அவர்களின் உணவகங்களில் விலை அதிகம். சுத்தம், சுகாதாரம் என்பதோ கொஞ்சம் கம்மி! பழைய சரக்குகளை வைத்தே சரிசெய்தல்! இப்படி பல்வகையான குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது உண்டு!
ஆனாலும் எல்லாக்காலங்களிலும் அவர்கள் வியாபாரங்கள் குறைவதில்லை! ஏறுமுகமாகவே உள்ளன!
இது பற்றி எனது முஸ்லிம் நண்பர் - அவரும் காக்கா தான், உணவகமும் உண்டு - அவருடன் பேசிக்கொண்டிருந்த போது ஒரு தகவலைச் சொன்னார்: இந்தக் காக்காமார்களெல்லாம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கேரளா போவார்கள். அங்கு போய் தங்களது வியாபாரம் பெரிய அளவில் பெருக வேண்டும் என்பதற்காக 'மந்திரம்' செய்துவிட்டு வருவார்கள்! அதனால் தான் அவர்களின் வியாபார நிலையங்களில் கூட்டம் குறைவதில்லை! என்பதாக அவர் குறிப்பிட்டார்!
பொதுவாக நான் இது போன்ற 'மந்திர,தந்திர' செய்திகளை நம்புவதில்லை. ஆனால் சொன்னவரோ அவரும் அந்த கேரள காக்கா என்பதால் ஏதோ 'இருக்கலாம்!' என்று தலையாட்டியதோடு சரி! ஆனால் முழுமையாக நமபவில்லை!
ஆனாலும் நான் நம்புவதைப் பற்றி யார் கவலைப்பபட்டார்? காரியங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. சமீபகாலங்களில் நடைபெறுகின்ற சம்பவங்களைப் பார்க்கின்ற போது அது உண்மைதான் என்று தோன்றுகிறது! ஒருவர் கேரளா போகின்றார் என்றாலே கொஞ்சம் சந்தேகக்கண் கொண்டு தான் பார்க்க வேண்டியிருக்கிறது!
சரி! இந்த மந்திர வேலையெல்லாம் உணவகங்களுக்கு மட்டும் தானா? ஏன், மற்ற தொழில்களுக்குப் பயன்படுத்த முடியாதா? அப்படி ஒரு கேள்வி கேட்க நினைத்தாலும் இந்தக் காக்காமார்கள் எல்லாம் உணவுத்துறைக்கு மட்டும் தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள்! நான் பார்த்தவரை இவர்கள் உணவகங்கள் மட்டுமே நடத்துகிறார்கள்! வேறு துறைகளைத் தேர்ந்தெடுப்பதில்லை!
ஒன்றை நான் குறிப்பிட விரும்புகிறேன். அந்தக் காக்காமார்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அவர்களின் உழைப்பை நான் குறைவாகச் சொல்லமாட்டேன். நல்ல உழைப்பாளிகள்.24 மணி நேரமும் உழைக்கத் தயாராக இருப்பவர்கள். சரியான, கடுமையான உழைப்பு அவர்களிடம் உண்டு.அந்த உழைப்பை நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். எங்கே போனாலும் ஒரு உணவகத்தைத் திறந்து நடத்த வேண்டும் என்னும் அந்த மன உறுதி நமக்கும் வேண்டும். தொழில் தான் அவர்களின் குறிக்கோள். அது மிகவும் பாராட்டுக்குறியது.
அவர்களிடம் நேர்மைக்குறைவு உண்டு. தொழிலில் அது தேவை என்று அவர்கள் நினைக்கிறார்கள்! ஏமாற்றாமல் ஒரு தொழிலைச் செய்ய முடியாது என்பது அவர்களின் நிலைப்பாடு!
நாம் அவர்களைப்பின் பற்ற வேண்டும் என்னும் அவசியம் இல்லை. நாம் அவர்களின் உழைப்பை மட்டும் பார்ப்போம். தாங்கள் முன்னேற வேண்டும் என்னும் அவர்களின் துடிப்பு நமக்கும் வர வேண்டும். அது போதும்!
கேரள காக்காய்களிடமிருந்து நல்லதை நாம் எடுத்து கொள்ளுவோம்! முன்னேறும் வழியைப் பார்ப்போம்!
Subscribe to:
Posts (Atom)