Sunday, 13 November 2016

அமெரிக்கா புதிய பாதையில் பயணிக்கமா?


அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றிருக்கிறார். எல்லாரும் அறிந்த செய்தி.

புதிய அதிபரின் போக்கு  எப்படி இருக்கும் என்பது இன்னும் நமக்குத் தெரியாத செய்தி. அடுத்த நான்கு  ஆண்டுகளுக்கு அதிபரின் நடவடிக்கைகள் எந்தத் திசையை நோக்கி பயணிக்கும் என்பது போகப் போகத்தான் தெரிய வரும்.

ஒன்று மட்டும் உறுதி. இத்தனை ஆண்டுகள் அதிபராக இருந்தவர்கள் பெரும்பாலும்  அரசியல்வாதிகள்.  ஆனால் டொனால்ட்  டிரம்ப் இதில் வித்தியாசப்படுகிறார். அவர் ஒரு தொழில் அதிபர். இளம் வயது தொட்டே அவர்   தொழிலில் ஈடுபட்டவர்.  தோல்விகளையும் வெற்றிகளையும் சந்தித்தவர். மாபெரும் தோல்விகளையும் மாபெரும் வெற்றிகளையும் சந்தித்தவர்.  எதற்கும் அசராத ஒரு தொழில் அதிபர்!  அரசியலில் அதிகம் ஈடுபாடு காட்டாத ஓர் தொழில் அதிபர்!

ஆனால் இன்று அவர் அரசியலுக்கு வந்துவிட்டார். அதிபராகவும் ஆகிவிட்டார்! இது தான் உலக மக்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கும் ஒரு செய்தி! அவர் வெற்றி பெறுவார் என்று யாரும் எதிபார்க்கவில்லை! ஆனால் அவர் வெற்றி பெற்றுவிட்டார்.

அமெரிக்காவின் எதிர்காலப் பயணம் எப்படி இருக்கும்?  தனது கொள்கையில் மிகவும் உறுதியான மனிதர் டிரம்ப். அவர் சொன்னவைகளை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் போகும் மனிதர். அவ்வளவு சீக்கிரத்தில் அவர் எதனையும் விட்டுக் கொடுக்கமாட்டார்! அமெரிக்காவை நேசிப்பவர். தனது மக்கள் நல்லதொரு வாழ்க்கை வாழ வேண்டுமென்று நினைப்பவர்.

அமெரிக்காவை இன்னும் வலிமைமிக்க நாடாக உருவாக்க வேண்டும் என்னும் கொள்கை உடையவர். வையத்துத்  தலைமை அமரிக்காவிடம் தான்  என்பதில் கருத்து வேறுபாடு இல்லாதவர்.

அவரின் பேச்சில் ஒரு முரட்டுத்தனம் தெரிகிறது. அமெரிக்காவின் அதிபர் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு சில வரைமுறைகளை வைத்திருக்கின்றனர் மக்கள். இவரோ அனைத்தையும் உடைத்தெரியும் மனிதராக இருக்கிறார்!  எதற்கும் கட்டுப்படும் மனிதராக அவர் இல்லை!

இன்னும் பதவி ஏற்காத  நிலையில் - பதவியேற்க இன்னும் ஓரிரு மாதங்கள் இருக்கும் நிலையில் - இப்போதே பலரின் எதிர்ப்புக்ளுக்கு ஆளாகியிருக்கிறார்!  அவரது  நாட்டில்  மட்டும் அல்ல , உலகங்கெகளிலும் கூட பலர் தங்களது எதிர்ப்புக்களைத் தெரிவித்து வருகின்றனர்! கொலை மிரட்டல்களும் விடப்படுகின்றன!  இதுவரை எந்த ஒரு அமெரிக்க அதிபரும் இப்படி ஒரு சூழலை எதிர்நோக்கவில்லை!

ஆனாலும் டிரம்ப் அந்த அளவுக்குக் கெட்ட மனிதரா? இல்லவே இல்லை! தனது நாட்டை நேசிக்கிறார். தனது மக்களை நேசிக்கிறார்.தனது மக்கள் வேலை வாய்ப்புக்கள் பெற்று,, நல்ல முறையில் உழைத்து நாட்டின் வளத்தில் பங்கு பெற வேண்டும் என்று நினைக்கிறார்.தனது நட்டில் அமைதி நிலவ வேண்டும், பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறார். இதெல்லாம் தவறு என்று எப்படி நாம் சொல்ல முடியும்? ஒவ்வொரு நாடும் தனது குடிமக்கள் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்பதில் தானே குறியாக இருக்கிறார்கள்.

புதிய அமெரிக்க அதிபர் பார்வைக்கு ஒரு கரடுமுரடான மனிதராகத் தோற்றமளிக்கிறார்! கரடுமுரடாகப் பேசுகிறார் என்பதை வைத்து நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது!

அமெரிக்காவின் வருங்கால இன்னும் சிறப்பாகவே இருக்கும்! புதிய பாதையாக இருந்தாலும் பயணம் வெற்றிகரமாகவே அமையும்!


Thursday, 10 November 2016

அதிரடி கொடுத்தார் மோடி!


இந்தியப் பிரதமர் மோடி அதிரடியான அறிவிப்பு  ஒன்றினைச் செய்திருக்கிறார்!

ஆயிரம் ரூபாய் நோட்டுக்களும், ஐனூறு ரூபாய் நோட்டுக்களும் செல்லாது என அதிரடியான அறீவிப்பு  செய்து அந்த நோட்டுக்களைச் செல்லாதபடி ஆக்கிவிட்டார்!

இது ஒரு துணிச்சலான  முடிவு என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. ஆரம்பத்தில்,  குறிப்பாக நடுத்தர குடும்பங்கள் ஓரளவு பாதிக்கப்படும் என்பது  உண்மையே! ஆனால் பெரிய பாதிப்பு என்பது அரசியல்வாதிகளுக்குத் தான்.

தமிழ் நாட்டில் தேர்தல் வருவதற்கு முன்னரே இப்படி ஒரு அதிரடி அறிவிப்பு வந்திருந்தால் ஒரு வேளை அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.

ஆயிரம், ஐனூறு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிய வந்தபோது எனக்கு நடிகர்  மகாலிங்கம் நடித்த  பழைய  "நாம் இருவர்" படம் ஞாபகத்திற்கு வந்தது! அதில் "ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாதா?"  என்று -  நடிகர்  சாரங்கபாணி என்று நினைக்கிறேன் - மயங்கி விழுவது போல ஒரு காட்சி வரும்! சரியாக ஞாபகத்திற்குக் கொண்டு வர முடியவில்லை! என்னால்  உறுதியாகவும் சொல்ல முடியவில்லை! என்ன சொல்ல வருகிறேன் என்றால் அந்தக் காலத்திலேயே இந்தக் கறுப்புப் பணம் ஒரு பிரச்சனையாக இப்போதும் போல் இருந்திருக்கிறது! இப்போதோ அப்போது விட பல மடங்குகள் அதிகரித்துவிட்டன!

ஆனால் சமீபத்தில் வந்த "பிச்சைக்காரன்" படத்திலும் இப்படி ஒரு செய்தி சொல்லப்பட்டிருப்பது ஆச்சரியமான விஷயம்!  இந்திய நாட்டின்  வறுமையையும், கறுப்புப்பணத்தையும் ஒழிக்க படத்தின் இயக்குனர் சசி அமைத்திருந்த அந்த  வசனம் இப்போது உண்மையாகிவிட்டது! ஆக, நமது சினிமாப் படங்களும் அவ்வப்போது சில செய்திகளை முன்கூட்டியே சொல்லிவிடுகின்றன. "சுனாமி" பற்றி நடிகர் கமலஹாசன் தனது அன்பே சிவம் படத்திலும் அப்படித்தான் சொல்லியிருந்தார்!

சரி! பிரதமர் மோடி கொடுத்த இந்த அதிரடி அறிவிப்பினால் யாருக்கு பலத்த அடி?  தீவிரவாதிகள், கறுப்புப்பணம் வைத்திருப்போர், ஊழல்வாதிகள்,
 லஞ்சம் வாங்குவோர்  இவர்களுக்கெல்லாம் சரியான அடி விழும்!  சரியான முறையில் அனைத்தையும் கடைப்பிடித்தால் - அரசியல்வாதிகள் எதனையும் உடைத்தெறியக் கூடியவர்கள் -அமலாக்கம் சரியாக இருந்தால் - இந்த அதிரடி என்பது இந்தியாவைச் சரியானப் பாதைக்குக் கொண்டு செல்லும்.

இந்தியப் பிரதமர் மோடி தான் ஒரு துணிச்சல்வாதி  என்பதை நிருபித்திருக்கிறார். எந்த ஒர் அரசியல்வாதியும் செய்யத் துணியாததைச் செய்திருக்கிறார்! அவரது மாநிலமான, குஜாராத் மாநிலம், கறுப்புப் பணத்திற்குப் பெயர் போன மாநிலம்! அப்படியிருந்தும் இப்படி துணிச்சலோடு அவர் ஓர் அதிரடியைக் கொண்டு வந்ததற்கு அவரை நாம் பாராட்ட வேண்டும்!

மோடி அவர்கள் நல்லதைச் செய்திருக்கிறார்! பாராட்டுக்கள்!


Wednesday, 9 November 2016

டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார்!


அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் டொனால்ட்  ட்ரம்ப் வெற்றி பெற்றார்!

உலக அளவில் இந்தச் செய்தி எப்படி வரவேற்கப்படும் என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை. இஸ்லாமிய உலகம் அதனை வரவேற்கவில்லை என்று ஆரம்பச்  செய்திகள் கூறுகின்றன.  ஆனாலும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நான் ட்ரம்பின் விசிறி.  அவருடைய ரசிகன். என்னுடைய இளமைக்காலத்தில் அவரை நான்  எனது சுப்பர் ஸ்டாராக நினைத்தவன். எனக்குச் சினிமா நடிகர்களில் யாரும் சுப்பர் ஸ்டார் இல்லை!

நான்  சொல்லுபவை எல்லாம் அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு - பல ஆண்டுகளுக்கு முன்பு! அவர் அரசியலில் இல்லாத காலத்தில்!

அவர் முதன் முதலில் எழுதிய "The Art of the Deal" என்னும் தலைப்பைக் கொண்ட புத்தகம் பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் படித்திருக்கிறேன். அதன் பின்னரும் நான் படித்திருக்கிறேன். இப்போதும் நான் படிக்கிறேன். இன்னும் அவர் எழுதிய ஒருசில புத்தகங்களையும் நான் படித்துக்கொண்டு தான் இருக்கிறேன்.

இந்தப் புத்தகங்கள் அனைத்தும் தொழில் சம்பந்தமானவை. அவர் ஒரு சிறந்த நிர்வாகி என்பதில் சந்தேகமில்லை. ஒரு வெற்றிகரமான தொழில் அதிபர். எதனையும் பெரிய அளவில் நினைத்துப் பார்ப்பவர். நினைத்துப் பார்ப்பவர் மட்டும் அல்ல. அதனைச் செயல்படுத்தியவரும் கூட. திறமையானவர்.

ஆனால் அவருடைய அரசியல் எப்படி?  அவர் உதிர்த்த சில கருத்துக்கள் மக்களிடையே பலவித எதிர்மறை எண்ணங்களை உருவாக்கியிருக்கின்றன என்பது உண்மை தான். அதுவும் குறிப்பாக முஸ்லிம்களிடையே அவருடைய கருத்துக்கள் ஏற்கக்கூடியவையாக இல்லை.

ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். தேர்தலில் போது அவர் உதிர்த்த கருத்துக்கள் தேர்தல்கால கருத்துக்கள்! அவைகளுக்கு எந்த அளவுக்கு மரியாதை உண்டு என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அது முற்றிலும் ஓர் அரசியல்வாதியின் பேச்சாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அமெரிக்க அதிபர் பதவி என்பது உலக அளவில் அதற்கு ஈடு இணை இல்லை! அந்த  அளவு உயர்ந்த பதவி. அந்தப் பதவியை வைத்துக்கொண்டு ஓர் அதிபர் தனது விருப்பத்திற்கு எதனையும் செய்துவிட முடியாது! அவரைக்  கட்டுப்படுத்தவும் அவர்களுடைய செனட்டுக்கு அதிகாரமுண்டு என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

டொனால்ட் ட்ரம்ப்,   நான் விரும்பிய ஒரு 'கதாநாயகர்'  என்பதால் அவர் பதவிக்கு வந்ததில் எனக்கு மகிழ்ச்சியே!  அதே சமயத்தில் அவர் காலத்தில் உலகில் அமைதி நிலவ அவர் பாடுபட வேண்டும். அது நடந்தால் இன்னும் மகிழ்ச்சி! வாழ்த்துகள்!