Saturday, 3 August 2024

உடைப்பட்டால் அது இந்தியன்!


 அது என்னவோ தெரியவில்லை!  மலேசியாவில் ஏதாவது கட்டடங்கள், சிறிதோ பெரிதோ,  உடைப்பட்டால் அங்கே இந்தியனின் அலறல் தான் கேட்கிறது.

அது கோவில்களாக இருக்கலாம், பள்ளிகளாக இருக்கலாம், சிறு வியாபாரங்கள் செய்யும்  அங்காடிகளாக  இருக்கலாம், இதோ கடைசியாக விளையாட்டு வீரர்களை உருவாக்கிய ஒரு கட்டுமானம்  உடைக்கப்பட்டது  நமது  நெஞ்சை  உலுக்குகிறது.

பல கராத்தே வீரர்களை உருவாக்கிய, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த  ஒரு விளையாட்டுக் கட்டுமானத்தைக்  கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி  உடைத்து நாசாமாக்கி இருக்கின்றனர்.   இது என்ன மாதிரியான மனநிலை என்று நமக்கும் புரியவில்லை.

இதில் என்ன அரசியல் என்பதும் புரியவில்லை.  இது விளையாட்டுத்துறை சார்ந்த ஒரு கட்டடம் என்பதைத் தவிர  வேறொன்றுமில்லை.  அது நிறைய கராத்தே வீரர்களை உருவாக்கியிருக்கின்றது.  பல தங்கப்பதக்கங்களை வாங்கிக் குவித்து நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கிறது.  தங்கத்தைக் குவித்தவர்களில் பலர் இந்திய இளைஞர்களாக  இருக்கலாம்.  ஏன் இந்தியர்கள் என்றால் நமது நாடு ஏற்றுக் கொள்ளாதா?  இது முட்டாள்தனம் என்பது நமக்குப் புரிகிறது.  ஆனால் முட்டாள்களுக்குப் புரியவில்லையே!

இந்தக் கட்டடம் உடைப்படும் போது அங்கே டத்தோ மோகன் மட்டுமே குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்.  அவர் தான் அந்த கராத்தே சங்கத்தின் தலைவர் என்று தெரிகிறது.  இருக்கட்டும்.  பக்காத்தான் தலைவர்களைப் போல ம.இ.கா. தலைவர்களும் பிரச்சனைகள் வரும் போது ஓடி ஒளிவதைப் பார்க்கிறோம்!  எந்தப் பிரச்சனையும் வேண்டாம் என்றால் ஓடி ஒளிவது தான் சிறந்த வழி என்பது  பக்காத்தான் தலைவர்கள் கடைப்பிடிக்கும் வழி. அதுவே இப்போது ம.இ.கா.வின் வழி!

நல்லதோ கெட்டதோ ஏங்கோ, ஏதோ ஒன்று உடைப்பட்டால்  அது இந்தியர் சம்பந்தப்பட்டதாகத்தான் இருக்கும் என்பது இப்போது  நமக்கு விளங்குகிறது.  இப்படி சம்பந்தா சம்பந்தமில்லாமல் இந்தியர்கள் சம்பந்தப்பட்டவைகளை உடைத்தால்  இப்போதைய பிரதமர் அன்வார் பெயரைக் கெடுக்கும்  நோக்கம் இருக்கலாம்.  அதே சமயத்தில் முன்னாள் பிரதமர் நஜிப் மேல் அபிமானத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவும் இருக்கலாம். 

எப்படியோ இதுவும் அரசியல் என்று கூறுகின்றனர் அங்குக் கூடிய மக்கள்.  அது என்ன அரசியல் என்பது நமக்குத்தான் புரியவில்லை! என்ன செய்ய?

Friday, 2 August 2024

ஊழல் பெருச்சாளிகள்!


 ஊழல் பெருச்சாளிகள் யார்?  இன்றைய நிலையில் அரசு சார்ந்த அதிகாரிகளே நமது கண்ணுக்குப் படுகின்றனர். காரணம் அவர்களின் கைது தான் நாளிதழ்களில்  அதிகம் பேசப்படுகின்றது.  

சட்டம் சொல்லுவது என்ன என்று பார்க்கும் போது இலஞ்சம் கொடுப்பவரும் குற்றவாளி, இலஞ்சம் வாங்குபவரும் குற்றவாளி. புரிகிற மொழியில் தான் சொல்லப்பட்டிருக்கின்றது. நமக்கு என்னவோ வாங்குபவரின் வற்புறுத்தலால் தான் கொடுப்பவன் கொடுத்துக் கொண்டிருக்கிறான்  என்று தோன்றுகிறது.

ஆனால் இப்போது இது பிரச்சனையல்ல.  இந்தப் பிரச்சனையில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.  யாருக்குச் சொர்க்கம் கிடைக்கும்? கொடுப்பவருக்கா அல்லது வாங்குபவருக்கா? கொடுப்பவன் என்ன நினைக்கிறான்?    "பாவம்! இரண்டு பெண்டாட்டிக்காரன், அவன் எப்படித்தான் சமாளிப்பான்?"  இவன், அவன் மீது அனுதாபம் கொள்கிறான்!  அப்படியென்றால் அவனுக்கு சொர்க்கம் தானே கிடைக்க வேண்டும்?  வாங்குபவன் என்ன சொல்கிறான்?   "அப்பாடா!  டேய்!  நீ நல்லா இருந்தா தான் நான் நல்லா இருக்க முடியும்! அதனால் நீ எப்போதும் நல்லா இருக்க வேண்டும்!'  வாங்குபவன்,  கொடுப்பவனுக்காக "நீ நல்லா இருக்கணும் என்று பிரார்த்தனைச் செய்கிறான்!'  இப்போது கொடுத்தவனுக்கு நல்லதொரு  வேண்டுதல் கிடைக்கிறது.  ஆக, அவனுக்கும்  சொர்க்கம் தான் கிடைக்க வேண்டும்/

இப்போது இரண்டுமே சரிதான்!   வாங்குபவனும் கொடுப்பவனும் ஒருவருக்கொருவர்  விட்டுக் கொடுக்கவில்லை. இருவருமே  தங்களது பிரார்த்தனைகளைக் கடவுளிடம் வைக்கிறார்கள்.  கடவுள்  கோபித்துக் கொள்ள போகிறாரா என்ன?  கடவுள் நீதியுள்ளவர்.  இருவருக்குமே பிரார்த்தனைகள் நடக்கின்றன. இவருக்கு அவரும் அவருக்கு இவரும் கடவுளிடம்  தங்களது வேண்டுதலை வைக்கின்றனர்.  கடவுள் வேண்டுதலைக் கட்டாயம் கேட்கத்தான் செய்வார்.  இந்த நிலையில் யாரையும் தண்டிக்கமாட்டார்! தண்டிக்காதவர் தான் கடவுள்! தண்டித்தால் அது என்ன கடவுள்?  வேண்டுதல்களைக் கேட்பவர் தானே கடவுள்!

அதனால் மலேசிய பெருமக்களே!  இப்போது நம்மிடையே கடவுள் எப்படி? என்பதில் பிரச்சனை இல்லை.  அவர் எந்த தலையீடும் செய்யப் போவதில்லை!  கொடுப்பவன் தான் பெரிய குற்றவாளி என்றால் வாங்குபவன்  குற்றவாளியே அல்ல!  வாங்குபவன் பதவியில் இருக்கிறான். அவன் தான் அரசாங்கம். அவனுக்கு ஆதரவாக இருப்பது  குடிகளின் கடமை என்று தான் சமயம் சொல்லுகிறது?

ஊழல் பெருச்சாளிகளுக்குக் கடவுள்  கடைசி காலத்தில் கையில்  ஊன்றுகோலை  ஒன்றைக் கொடுத்து இங்கும் அங்கும் அலைய விடுவார்!

Thursday, 1 August 2024

ஒரு முடிவுக்கு வாருங்கள்!

அரசியல்வாதிகளால் எதுவும் ஆகப்போவதில்லை  என்று தெரிந்தும்  நாம் ஏன் மரியாதைக் கொடுத்து மாலை போட்டு அவர்களை உயரத்தில் வைக்க வேண்டும்?

அவர்கள் இடத்தில் அவர்கள் இருக்கட்டும். நம் இடத்தில் நாம் இருப்போம். அவர்கள் நம் தயவினால் பதவி பெற்றவர்கள்.  அதனை நாம் மனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.  நாம் அவர்களிடம் ரொம்பவும் பணிந்து, தாழ்ந்து, குனிந்து  போவதால் அவர்கள் ஏதோ உயர்ந்தவர்கள் போலவும்  நாம் தாழ்ந்தவர்கள் போலவும் ஒரு சிலர் செய்கின்ற செய்கைகளினால்  அவர்களுக்கும் தலைக்கனம்  கூடிவிடுகிறது.

நாம் மட்டும் தான் இந்த அளவுக்கு அவர்களுக்கு மரியாதைக் கொடுக்கிறோம்.  சீனர்களோ, மலாய் இனத்தவரோ  இது போன்று அடிமை போன்று ஒட்டி உறவாடுவதில்லை.   அப்படியிருந்தும் நமக்குத் தான் எப்போதும் நாமம் போடுகின்றனர்   அவர்களுக்கு எப்போதும் ராஜ மரியாதை தான்.

கூனிக் குறுகும் போதே அவன் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறான்.  இவனை ஏமாற்றுவது எளிது  என்பது அவனுக்குப் புரிந்து விடுகிறது.  அரசியல்வாதிகளைக் கண்டால் அவனுக்கு உள்ள மரியாதையைக் கொடுங்கள். அதற்காக உங்களுடைய மரியாதையைத் தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

இன்று நாட்டில் உள்ள அத்தனை அவலங்களும்  யாரால் ஏற்பட்டவை? அனைத்துக்கும் காரணமானவர்கள்  அரசியல்வாதிகள் தான்.   ஒரு பிரச்சனையையும்  அவர்களால்  தீர்த்து  வைக்க முடியவில்லை.  எல்லாமே தற்காலிகத் தீர்வு தான்.  அதனால் தான் அத்தனை பிரச்சனைகளும்  இப்போது நம்மை அலைக்கழிக்கின்றன.

தமிழ்ப்பள்ளிகள் தனியார் நிலத்தில் உள்ளனவா? அதனை ஏன் சட்டப்படி  அந்த உரிமையை மாற்றுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கோவில்களுக்கும் இதே பிரச்சனை தான்.  தனியார் நிலம் என்றால் மாற்றுங்கள்.  மெட்ரிகுலேஷன் நுழைவுக்கு நஜிப் காலத்தில் 2200 இடங்கள்  ஒதுக்கப்பட்டன. அவர் நல்லவர், வல்லவர் தானே? ஏன் அப்போதே சட்டமாகக் கொண்டுவரவில்லை? அதற்கான முயற்சிகளை ஏன் மேற்கொள்ளவில்லை?

நாம் அரசியல்வாதிகளிடம் கடுமையாக நடந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால்  நமது உரிமைகள் அனைத்தும் காற்றில் பறக்க விட்டுவிடுவார்கள்! அதனால் அவர்களை நம்ப வேண்டாம்!