Wednesday, 7 May 2025

தலையாட்டி அண்ணன்! (33)

 

இது ஒரு வருத்தத்திற்கு  உரிய சம்பவம். எனது நோக்கம் எல்லாம் நமது தமிழ் மக்கள் எப்படியெல்லாம் என்னவென்றே  தெரியாத  வியாதிகளை எல்லாம் அனுபவித்திருக்கிறார்கள் என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவது தான்.

அப்போது தான் அந்த அண்ணன் வேலைக்குச் சேர்ந்திருந்தார். லோரி ஓட்டுநர் வேலை.  ஆனல் அவரிடம் ஒரு குறை தெரிந்தது.  தலையை ஆட்டிக்கொண்டே இருப்பார். தலையை ஆட்டி ஆட்டி ஆகாயத்தையே பார்த்துக் கொண்டிருப்பார்.  ஏதோ ஒரு வியாதி.  அப்போதெல்லாம்  இது என்ன வியாதி என்று கண்டுபிடிக்கவே மருத்தவர்கள் இல்லை. என்ன செய்ய?   அன்றைய தமிழனின் தலைவிதி  என்று தான் எடுத்தக்கொள்ள வேண்டும்.

அந்த அண்ணன் நீண்ட நாள் வேலை  செய்ய முடியவில்லை. லோரி விபத்தில் இறந்து போனார். எனக்குத் தெரிந்தது இந்த ஒரு சம்பவம் தான், ஆனால் அன்றைய மலாயாவில் எத்தனை பேர் இப்படி இறந்தார்களோ?

எனது நண்பன், கோவிந்தசாமி என்று பெயர்.  அவன் கூட இரண்டு கால்களிலும் சிறங்கு வந்து வீட்டிலேயே  முடங்கிக் கிடந்தான். பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தபோது  அவனுக்கு எல்லாம் சரியாகிவிட்டது. ஒரு வேளை நவீன மருத்துவம் அவனைக் குணமாகிவிட்டது என்றே நினைக்கிறேன்.



அறிவோம்:  அன்றைய வியாதிகள் எல்லாம் சரியான, சத்தான உணவுகள் இல்லாததால் வந்தவை.  விஷக்கடிகளால் வந்தவை.  இன்று கூடுதலான சத்தான உணவுகள்,  குப்பை உணவுகள் - இவைகளால் புற்று நோய், இதயக் கோளாறுகள், இனிப்புநீர் போன்ற வியாதிகளால்  அவஸ்தைப் படுகின்றோம்.  ஆக வியாதிகள் நிரந்தரம். காலத்திற்கு ஏற்ப மாறுபவை!


Sunday, 4 May 2025

பாட்டி வைத்தியம் (32)


 பாட்டி வைத்தியம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் என்ன செய்ய?  இப்போது படித்தவர்கள் அதிகமாகி விட்டதால் அதன் மௌசு,   இளசுகளிடையே குறைந்துவிட்டது. ஆனாலும் இன்னும் பாட்டி வைத்தியம்  உயிர்ப்புடன் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. மங்கிப்போய் விடவில்லை என்பது ஆறுதல்.

இது என் தாயார் சொன்னது. நான் பதினெட்டு மாதக் குழந்தையாக இருந்த போது  ஏற்பட்ட ஒரு வியாதி. உடல் முற்றிலுமாக செயல் இழந்துவிட்டது. படுத்த படுக்கை தான்.  போர்ட்டிக்சன். மருத்துவனைக்குக் கொண்டு சென்ற  போது டாக்டர் "ஊகூம், இவன்பிழைக்க மாட்டான்" என்று கைவிரித்து விட்டாராம்.

அப்போது பக்கத்து வீட்டு பாட்டி ஒருவர் காட்டுக்குச் சென்று அங்கிருந்து இலைதழைகளைக்  கொண்டுவந்து  அவைகளைக் கொதித்தண்ணீரில் அவித்து பின்னர் அந்தத்  தண்ணீரால் உடல் முழுவதும் நீவி விட்டாராம். பல மாதங்கள் படுத்தே கிடந்தே நான் ஒரு சில மணி நேரங்களில் எழுந்து உட்கார்ந்து விட்டேனாம்!  என் தாயார் சொன்ன இலைதழைகளில்  கத்தாழை (Aloe Vera)  யும் ஒன்று. இன்றும் நாம் இந்தக் கற்றாழையை ஏதோ ஒரு வகையில்  பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம்.

சரி அதென்ன பாட்டி வைத்தியம்? இது தமிழரிடையே பாரம்பரியமாக வருவது. உலகின் மூத்த குடி என்னும் பெருமை உள்ள மக்களான நமக்கு  எந்தவொரு மருத்துவமும் அறியாமலா வாழ்ந்து வந்தோம்?  அதன்  பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டோம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.



அறிவோம்:  வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் - வாசல் தோறும் வேதனை இருக்கும் - வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை -  எதையும் தாங்கும் இதயம் இருந்தால்  இறுதி வரைக்கும்  அமைதி இருக்கும்  - ஏழை மனதை மாளிகை ஆக்கி  இரவும் பகலும் காவியம் பாடு -  நாளைப் பொழுதை இறைவனுக்கு அளித்து -  நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு - உனக்கும் கீழே உள்ளவர்  கோடி  - நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு 

கவிஞர் கண்ணதான்









Thursday, 1 May 2025

நாக்குப்பூச்சி! (31)

 

இன்றைய தலைமுறையினருக்கு  நாக்குப்பூச்சி என்றால் என்னவென்று தெரிய வாய்ப்பில்லை! 

அது அந்த அளவுக்குத் தேவைப்படவில்லை. ஆனால் அந்த காலகட்டத்தில் நான் வசித்தசெண்டயான் தோட்டத்தில்  அது கட்டாயம் என்கிற நிலைமையில் இருந்தது.  அது ஏன் என்பது தெரியவில்லை.  

பிரச்சனை என்பது இது தான். மாதத்திற்கு  ஒரு முறை சிறுவர்களுக்கு  வயிற்றைச் சுத்தம் செய்வதற்காக  விளக்கெண்ணய்  கொடுப்பார்கள்.   ஒவ்வொரு மாதமும் இது நடக்கும்.  மற்ற தோட்டங்களில் இப்படி நடந்ததா என்று எனக்குத் தெரியாது. ஆனால் இந்த தோட்டத்தில்  மட்டும் அந்த அநியாயம் நடந்தது!  அதைக் குறையாகப் பார்த்தாலும்  விளக்கெண்ண்யை சாப்பிட்டுவிட்டு உட்கார்த்தால்  நீட்டு நீட்டு நாக்குப்பூச்சிகள் வந்து விழுவது மட்டும் உறுதி.

இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தால் சீனி அதிகம் சாப்பிடுவதால் வருகிற  கோளாறு என்கிறார்கள்.  அந்த கஷ்ட காலத்தில் சீனி அப்படியென்ன கொட்டியா கிடந்திருக்கும்?அது சரியோ தவறோ  நாக்குப்பூச்சி என்பது உண்மை!

விளக்கெண்ணெய் எங்கிருந்து வந்தது என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் மாதாமாதம் வந்து கொண்டிருந்தது என்பது மட்டும் உண்மை.  தோட்ட நிர்வாகம் கொடுத்ததா என்பது தெளிவில்லை. அந்தத் தோட்டத்தை விட்டு வெளியேறிய பின்னர் இந்த விளக்கெண்ணெய் பிரச்சனை எழவில்லை!  ஏன்? அதன் பின்னர் விளக்கெண்ணெய் சாப்பிட்டதாக நினைவில் இல்லை.





அறிவோம்: ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோ ஒரு பிரச்சனை மனிதகுலத்தை  ஆட்டிப்படைக்கத் தான் செய்யும்.  ஆனால் அவற்றுகெல்லாம் மனிதன் தீர்வைக் காணாமல் இருந்ததில்லை. அப்போதும் சரி இப்போதும் சரி எல்லாவற்றுக்கும் தீர்வுகள் உண்டு.