Friday, 23 May 2025

ஐம்பது காசுக்கு முடிவெட்டினோம்! (36)


முன்பு காலத்தில்  முடிவெட்ட ஐம்பது காசு என்பது  என்ன அதிசயமா என்று கேள்வி எழலாம். 

அப்படி எல்லாம் சொல்ல இயலாது.  நான் முடி வெட்டிக்கொள்ள  ஆரம்பித்த காலத்தில்  ஐம்பது காசுக்கு  வெட்டியதாக ஞாபகமில்லை. நான் வெட்டுவது பெரும்பாலும்  முடிவெட்டும் நிலையங்களாக இருந்ததினால்  அங்கே ஐம்பது காசுக்கு வேலையில்லை. ஒரு வேளை குழந்தைகளுக்கு  இருந்திருக்கலாம்.

ஆனால் எங்கள் பள்ளியில் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். பள்ளியிலேயே  ஒருவர் கடை திறந்தார்.  அங்கே முடி வெட்டினால் ஐம்பது காசு திட்டத்தைக் கொண்டு வந்தார்.  அது  மாணவர்களுக்கு வரப்பிரசாதமாகவே அமைந்தது.  அவரது கடையில் எப்போதும் கூட்டமாகவே  இருக்கும். பள்ளி மாணவர்களுக்கு முடி வெட்டுவது ஒரே மாதிரி தான்.  வித விதமாக இருக்க வாய்ப்பில்லை.

ஒருவர் தான் முடி வெட்டுவார். இப்போது நினைத்துப் பார்க்கும் போது வியப்பைத் தருகிறது. அந்தப் பெரியவர் முயற்சி எடுத்து பள்ளியோடு பேச்சுவார்த்தை நடத்தி  கடை போட்டாரே அதனைப் பாராட்டத்தான் வேண்டும். இப்போது  அது போன்ற முயற்சிகள் வங்காள தேசிகளிடம் கைமாறி விட்டதோ என்று தோன்றுகிறது. வேலையே தெரியாமல் தொழில் செய்கிறார்கள்!  கேட்டால் அது "அவர்கள் சாமர்த்தியம்"  என்கிறார்கள்!



அறிவோம்:  பொதுவாக எண்களை, அதாவது 0 1 2 3 4 5 6 7 8 9  என்னும்   எண்களை அரபு எண்கள் என்கிறோம்.   அது எங்கள் நாட்டு எண்கள்  இல்லை  என்று  அரபு நாடுகள் சொல்லிவிட்டன. அது இந்து நாட்டிலிருந்து  வந்த எண்கள் என்று சொல்கின்றன. இந்து நாடு என்றால் இந்தியா.  அது தமிழர்கள்   பயன்படுத்திய எண்கள்  என்று  இன்றுவரை தமிழ் நாடு அரசு வெளிப்படையாகச் சொல்லவில்லை.  திராவிடர்கள்  தமிழ் நாட்டை ஆண்டால் இது தான்  நடக்கும்!

Thursday, 22 May 2025

காலணிகளுக்கு இ;லாடம் (35)

 

இலாடங்கள் என்னும் போது நமக்குத் தெரிந்தது எல்லாம் குதிரைக்கு இலாடம் அடிப்பது தான்.  இப்போது மாடுகளுக்கும்  அடிக்கப்படுகிறது  என்பதும் தெரிய வருகிறது.

சரி  பள்ளி மாணவர்களுக்கும்  இந்த இலாடத்துக்கும் என்ன சம்பந்தம்?  நாங்கள் இடைநிலைப் பள்ளியில் படிக்கும் போது  காலில்  தோல் சப்பாத்துகள் அணிவது  வழக்கம்.  இன்றைய நிலை எனக்குத் தெரியவில்லை.

தோல் சப்பாத்துகள் அணியும் போது  எங்கள் பள்ளி அருகிலேயே   ஒரு சீனர்  சப்பாத்துகளுக்கு இலாபம் அடித்துக் கொடுப்பார், இலாடம் என்றால்  மேலே படத்தில் உள்ளது போல் இருல்லாது. அது சிறு சிறு  துண்டுகளாக இருக்கும். அதில் இரண்டு துண்டுகளை  சப்பாத்தின் அடிபாகத்தில் இரு பக்கமும் அடித்துக் கொடுப்பார்.  நான்கு இடத்திலும் அடித்துக் கொடுதால்  நடக்கும் போது சத்தம் பயங்கரமாக இருக்கும்! அதனால் இலாடங்கள் இரண்டே போதுமானவை. 

இப்படி  இலாடம் அடிப்பது சப்பாத்துகள்  நீண்ட நாள்  உழைக்கும்  என்கிற  காரணம் தான்.  வேறு காரணங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.  மேலும் அன்று  இடைநிலைப் பள்ளிகள்  என்றால்  நீண்ட காற்சட்டை  அணிவதும், தோல் சப்பாத்துகளை அணிவதும்  தொடக்கப் பள்ளிகளூக்கும் இடைநிலைப் பள்ளிகளுக்கும் உள்ள வேறுபாட்டை காண்பிக்கத் தான்..




பின் குறிப்பு:  கண்களில் உள்ள குறைபாடுகளினால்  சரியாக செயல்பட முடியவில்லை. மன்னிக்கவும்.  (கோடிசுவரன்)

Sunday, 11 May 2025

ஐந்தடிஜோசியக்காரன்! (34)


 அந்தக் காலகட்டத்தில் ஐந்தடி ஜோசியர்கள்  அதிகம்.  அடிக்கடி தோட்டப்புறங்களுக்குப் படையெடுப்பார்கள். காரணம் ஏமாறும் தமிழர் கூட்டம் தோட்டங்களில் தான் இருந்தார்கள்!

எங்கள் வீட்டில் ஜோசியம் பார்க்கும் பழக்கம் இல்லை.  எப்படியோ ஒரு முறை  ஜோசியர் ஒருவர்  என் கையைப் பிடித்து அவரே ஜோசியம் சொல்ல ஆரம்பித்துவிட்டார். வேறு வழியில்லை. ஆரம்பிக்கும் போதே தூண்டிலை வலிமையாக போட்டுவிட்டார்!  "இவனுக்கு ராஜ யோகம்!  இங்கிலாந்து அரசர்  பிறந்த நேரத்தில்  தான் இவனும் பிறந்திருக்கிறான்! வருங்காலத்தில் பெரிய ஆளாக ஆகா! ஓகோ! என்று வருவான்! என்று பொளந்து  தள்ளிவிட்டார்!   அவருக்குக் கூலி கிடைத்துவிட்டது! அது தானே அவருக்கு வேண்டும்?

இது எப்போது நடந்தது என்பது எனக்குத் தெரியாது.  பிற்காலத்தில் ஏதையோ பற்றி பேசும்போது  என் தாயார் இது பற்றி சொன்னார். அப்போது கூட எனக்கு ஏழு எட்டு வயது இருக்கும், அவ்வளவு தான். ஆனாலும் ஏதோ ஒன்று அது என்னுள்ளே அப்படியே  தங்கிவிட்டது! அதனால் தான் ஒருவன் ஜோசியனாக இருந்தாலும்  ஒரு நல்ல விஷயத்தைச் சொன்னால்  அது அப்படியே மனதில் படிந்துவிடுகிறது! அந்த ஜோசியர் அப்படி ஒன்றும் உண்மையைச் சொல்லிவிடவில்லை. ஆனால்  கேட்க சந்தோஷமாகத் தானே  இருந்தது?  அதனால் தானே மறக்க முடியவில்லை?  அதனால் தான் ஜாதகம் சொல்லும் போது சாதகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள் பெரியவர்கள்.


   
அறிவோம்: ஜாதகம்,  ஜோதிடம், ஜோசியம், நாடி ஜோசியம்,மரத்தடி ஜோசியம், ஐந்தடி  ஜோசியம், கிளி ஜோசியம், மூச்சு ஜோசியம், தாயக்காய்,  பகடைகாய் - என்று ஜாதகத்தையே கேலிக்குரியதாக  ஆக்கிவிட்டார்கள்!  இது ஓர் உன்னதமான கலை.  அது தமிழர்களின் கலை தான். இந்த உயரிய கலையை நாம் கேலி செய்துவிட்டு அந்தப்பக்கம் போய்  சீனர்களின் ஃபெங் சூய் (Feng Shui)  பார்க்கிறோம்! சீனர்களின் பல கலைகள்  நம்மிடமிருந்து  போனவைகள் தான்! நம்முடைய மூலத்தை நாம் மறந்து விட்டோம்! நம்முடைய கலைகளையே பிறரிடமிருந்து நாம் இப்போது கற்றுக் கொண்டிருக்கிறோம்!