Wednesday, 23 July 2025

தலைவணங்குகிறேன் புனிதன், சஞ்சே சார்!

 யார் என்ன சொன்னாலும்  சரி  நீங்கள் செய்கின்ற தொண்டு என்பது  காலத்தால் அழிக்க முடியாதது. 

டாக்டர் புனிதன் அவர்களுக்கும் டாக்டர் சஞ்சே அவர்களுக்கும்  எனது இதயங்கனிந்த வாழ்த்துகள். எல்லாராலும் செய்ய முடியாத சேவையை   நீங்கள் செய்கிறீர்கள். சமூக அக்கறை என்பதெல்லாம்  இப்போது ஏதோ ஓரிருவரிடம்  மட்டுமே உண்டு. அரசியல்வாதிகளிடம் சுத்தமாக இல்லை.  சுயநலமே அவர்களின் சமூக அக்கறை!

உங்கள் இருவரைப் பற்றியும்  பல அவதூறு செய்திகள்  வருகின்றன என்பது நமக்கு வருத்தம் தான். ஆனால் இதனைத் தவிர்க்க முடியாது.  நல்லதைச் செய்தால்  சிலருக்குப் பொறுக்காது.  அவதூறுகளைப் பரப்புவர்களில் பலர் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்!  நாம் படித்த சமூகமாக மாறி வருகிறோம்  என்றாலே  அவர்களுக்கு  வயிறு எரிகிறது!

என்னைக் கேட்டால் நமது மாணவர்கள் உயர்க்கல்வி படிப்பதற்குத் தடையாக இருப்பவர்கள்   நமது அரசியல்வாதிகளும், தனியார் கல்லூரிகளும் தான். அரசியல்வாதிகள் தனியார் கல்லூரிகளிடமிருந்து பல இலட்சங்களைக் கறந்து விடுகின்றனர்! அதனால் தான் அரசாங்கக் கல்லூரிகளிடமிருந்து  நம் மாணவர்களுக்குப்  போதுமான ஆதரவு  கிடைப்பதில்லை. இதில் கலவி அமைச்சை சேர்ந்தவர்களுக்கும் பங்கு உண்டு. வெளியே உள்ளவர்கள் யாரும் நமக்கு எதிரிகள் இல்லை. இந்த மூன்று தரப்பினர் தான் குற்றவாளிகள்.  ஆனால் என்ன செய்ய? எல்லாரும் தங்கள் பிள்ளைகளையே வழக்கறிஞராக வைத்துக் கொண்டு செயல் படுகிறார்கள்!  ஆனால் என்றுமே இவர்களால் தப்பிக்க முடியாது. .

இந்த இரு டாக்டர்களுக்கும் நமது வேண்டுகோள் இது தான். இவர்களுக்கெல்லாம் நீங்கள் பணிந்து விடாதீர்கள். இதெல்லாம் ஒரு நாதாறிக் கூட்டம். நாசம் பண்ணத்தான் தெரியுமே தவிர  நல்லதைச் செய்யத் தெரியாது.  உங்களின் நலனுக்காக நான் பிரார்த்திக்கிறேன். நமது மக்கள் அனைவருமே  உங்கள் மீது அன்பு கொண்டுள்ளனர். நாங்கள் அனைவரும் பிரர்த்திக்கிறோம்.

நல்லதையே செய்யுங்கள். நாடு நம் கைவசம்.

Monday, 21 July 2025

இன்னுமா தூக்கம்?

 தமிழ்ச் சமுதாயத்திடம் நம்மிடம் உள்ள ஒரே கேள்வி:  உங்கள் பிள்ளைகளுக்கு என்று முழுமையான கல்வியைத் தரப் போகிறீர்கள் என்பது தான்.

இன்று 'ஏழை சமுதாயம்' என்று நமக்கு நாமே  நாமகரணம் சூட்டிக் கொண்டாலும் அது உண்மையல்ல. நாட்டில் எல்லா வசதிகளும் உண்டு. ஏழைகள் தங்களது குடும்பத்தை அடுத்த கட்டத்திற்கு  உயர்த்த வேண்டும் என்கிற இலட்சியம் இருந்தாலே போதும். தேவையெல்லாம்  தங்களது பிள்ளைகளுக்குக் கல்வியைக் கொடுத்தால் போதும். 

தோட்டங்களில் அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் நம் இனத்தவர்  ஏறக்குறைய அடிமைகளாகத் தான் இருந்தார்கள். அந்த அடிமை காலத்தில் கூட நமது பிள்ளைகள் படித்து நல்ல பல உத்தியோகங்களுக்குச் சென்றிருக்கிறார்கள். ஆசிரியர்கள், தோட்ட நிர்வாகிகள், கற்றறிருந்த மருத்துவர்கள்,  வழக்கறிஞர்கள், அமைச்சர்கள் - இப்படி பல துறைகளில் தங்களது  முத்திரையப் பதித்திருக்கிறார்கள். அன்று  அடிமை வாழ்க்கை வாழ்ந்த பெற்றோர்களின் விடாமுயற்சிதான் காரணம்.

தோட்டப்புற மாணவர்கள் எதற்கும் இலாயக்கில்லை  என்று யாராலும் குற்றம்   சொல்ல முடியாது. அனைத்தும் பெற்றோர்களின்  கையில் தான். பெற்றோர்கள் கொஞ்சம் தங்கள் பிள்ளைகளின் மீது  அக்கறை காட்டினால் போதும். அந்தக் குடும்பம் அடுத்தக்கட்ட  உயர்வை நோக்கிச்  சென்றுவிடும்.

இன்னும் அந்தப் பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருக்கக் கூடாது. "படித்து  என்னத்தை கிழிக்கப்போகிறான்" என்று சொல்லி ஒரு சிலர்  நம்மிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விட்டனர். இதையெல்லாம் மீறி இப்போது வந்துவிட்டோம்.

கல்வி என்பது பிள்ளைகளுக்குக் கட்டாயம் என்பது நம் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் கல்வியின் அவசியத்தை நமது பெற்றொர்களுக்கு சொல்லிக்கொண்டே இருப்பது நமது அவலம். காலம் அன்று போல் இன்று இல்லை.  நாம் வசிக்கும் இடங்களிலேயே பெரும்பாலான  பள்ளிகள் அமைந்துவிட்டன.  அப்படியே தூரமாக இருந்தாலும்  போக்குவரத்து செலவுகளையும் பல தொண்டூழிய நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டுகின்றன.  அரசாங்கக்  கல்லூரிகளுக்குச் செல்லும்  போது பெரிய அளவில்  செலவுகள் வர வாய்ப்பில்லை.

நீங்கள் குறை சொல்லும்படியாக எதுவும் இல்லை. ஒன்றைப் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்  நாளை உங்கள் பிள்ளை மருத்துவராக வழக்கறிஞராக.   பொறியியளாலராக, அரசாங்க அதிகாரியாக, போலீஸ் அதிகாரியாக ஆவது  உங்களுக்குப் பெருமை தானே? நமது பிள்ளைகளின் திறமைக்கு ஈடாக யாரை சொல்ல முடியும்? அந்த அளவுக்கு  நாம் அறிவுள்ள சமுதாயம்.

பெற்றோர்களே!  விழித்துக் கொள்ளுங்கள். தூங்கியது போதும். பிள்ளைகளைப் படிக்க வையுங்கள்.  இதற்கு நீங்கள் முதல் போட ஒன்றுமில்லை.  தேவையெல்லாம்  கல்வியின் மீதான உங்கள் ஆர்வத்தைக் காட்டினால் போதும். பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பினால் போதும். உங்கள் பிள்ளைகள் கற்றவர்களோடு சீன, மலாய் பிள்ளைகளோடு சரிசமமாக பார்க்கும் நிலை  ஏற்படும். அது தான் நமக்குப் பெருமை.

Friday, 18 July 2025

தயவு செய்து கெடுக்காதீர்கள்

 ஓரு நல்ல காரியம் நடக்கும்போது அதை கெடுக்க ஒரு நாலு பேர் அவசியம்  வருவார்கள்! 

நமது சமுதாயத்தில் இது சகஜம் தான். ஆனால் அந்த சமுதாயம் என்பது தமிழர்கள் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்கள் அறம் சார்ந்து வாழ்பவர்கள். ஒருவனைக் கெடுக்க நமக்கு மனம் வராது. ஆனால் இந்தியர்கள் என்னும் போது தமிழர்கள் மட்டும் அல்லவே! அதனால் அது யாராக இருக்கும் என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறேன்.

எஸ்.பி.எம். தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு  வழிகாட்டிகளாக இருவர்  தங்களின் நேரத்தை அர்ப்பணித்துக்  கொண்டிருக்கிறார்கள். இருவரும் சகோதரர்கள் ஒருவர் மருத்துவர் மற்றவர்  முனைவர். தங்களின் சொந்தப் பணிகளுக்கிடையே  இந்த வழிகாட்டுதலையும் நமது மாணவர்களின் நலன் கருதி  நல்லதொரு பணியாகச் செய்து வருகிறார்கள்.

அவர்கள் செய்து வரும் பணியை இடைபுகுந்து  ஒரு கும்பல்   குழப்பத்தை ஏற்படுத்துகிறது என அறியும் போது   நமக்குக்  கோபம் வரத்தான் செய்யும். நமது இந்திய மாணவர்களுக்கு மெட் ரிகுலேஷன்  கல்வியில் தடையாக இருப்பதும் இந்தக் கும்பல் தான்   காரணம் என்று நான் நினைக்கிறேன்.

யார் யாரோ கல்லூரிகள் நடத்துகிறார்கள். அதில் இந்தியக் கல்வியாளர்களும்  அடங்குவர். அதில் நமக்குப் பெருமை தான். ஆனால் அவர்கள் போலி கல்வியாளர்களாக இருக்கக் கூடாது என்பது தான்  நாம் விரும்புவது. அவர்கள் பெரும்பாலும்  சீன, இந்திய மாணவர்களைத்தான் குறி வைக்கிறார்கள்.  சீன மாணவர்கள் விரும்புவது  கல்வித்தரம் மட்டும் தான். நமது மாணவர்களுக்கு ஏதோ ஒரு பட்டம் என்கிற மனநிலையில் இருக்கிறார்கள். இந்தியர்களால் நடத்தப்படும் உயர்கல்விக்கூடங்கள்  இந்திய மாணவர்களை வைத்து பிழைப்பை  நடத்துவதைத்  தவிர வேறு வழியில்லை. அதனால் தான் சில உள்குத்து வேலைகளை அவர்கள்  கையாள்கிறார்கள்!. மெட் ரிகுலேஷன் கல்வி நமக்கு எதிராகத்தான் ஆரம்பகால முதலே செயல்பட்டு வருகிறது. நமது அரசியல்வாதிகளும் தனியார்  கல்லூரிகளும்  கைகோர்த்துச் செயல்படுகின்றனரோ  என்கிற ஐயம்  நமக்கு உண்டு!  நம்முடைய அரசியல்வாதிகளைப் பற்றி  நாம் அறியாததா!

நம் மாணவர்களுக்கு நம்முடைய அறிவுரை எல்லாம்  உங்களுடைய மேற்கல்விக்கு உண்மையான வழிகாட்டிகளைத் தேர்ந்தெடுங்கள் என்பது தான். அரசாங்க கல்விக் கூடங்களிலேயே  உங்களது  கல்வியைத்  தொடருங்கள்.  தனியார் கல்லூரிகள் 'உங்களுக்கு லோன் ஏற்பாடு செய்கிறோம்' என்று சொல்லி உங்களைக் கடன்காரர்களாக ஆக்குவது தான் அவர்களின் பெரும் பணி! தயவு செய்து அவ்வளவு எளிதில் அவர்களின்  ஏமாற்றுவேலைகளுக்குப் பணிந்து விடாதீர்கள்.

மாணவர்களே ,உங்களது குறிக்கோள்  அரசாங்க கல்லூரிகளாக இருக்கட்டும். பணம் பிடுங்கும் ஆசாமிகளிடம் அகப்பட்டுக் கொள்ளாதீர்கள்.

மாணவர்களுக்கு வழிகாட்டிகளாக விளங்கும்  அந்த இரு டாக்டர்களுக்கும்  இறைவனின் ஆசி என்றென்றும் இருப்பதாக!