Tuesday, 30 August 2016
பாராட்டுங்கள்! பாராட்டப்படுவீர்கள்!
அனைவரையும் பாராட்டுங்கள்! நீங்களும் பாராட்டப்படுவீர்கள்!
மற்றவர்கள் நல்லதைச் செய்யும் போது அவர்களைப் பராட்டுங்கள். பாராட்டும் போது மற்றவர்கள் உங்களை நாடி, தேடி வருவார்கள். பாராட்டு என்பது மிகவும் சக்தி வாய்ந்தது!
வீட்டிலே நல்ல உணவு, மனைவியைப் பாராட்டுங்கள். உணவகத்திலே நல்லதொரு தேநீர், பரிமாறுபவரைப் பாராட்டுங்கள். பள்ளியில் மகன் கணக்குப் பாடத்தில் முப்பது மார்க்குகள் தான் வாங்கினானா? அவனையும் பாராட்டுங்கள். அந்தப் பாராட்டுதல்களுக்காகவே அடுத்த முறை அறுபது மார்க்குகள் வாங்கி உங்களை மகிழ்ச்சி படுத்துவான்!
இந்த உலகமே பாராட்டுதலுக்காக ஏங்கித் தவிக்கிறது! அடிதடி மூலமோ, ஒருவரை ஏசுவதன் மூலமோ நாம் நினைக்கின்ற வேலைகள் செய்து முடிக்கப்படலாம். ஆனால் அதில் ஒரு நிறைவு இருக்காது. அதிலே ஒரு திருப்தி இருக்காது.
ஒரு வெற்றிகரமான வர்த்தகர். நிறைய வேலையாள்கள் அவருடைய நிறுவனத்தில். பொதுவாக பல நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் வருவதும் போவதுமாக இருப்பார்கள்! ஆனால் அவருடைய நிறுவனத்தில் வருவது மட்டுமே! போவது என்பது ஒய்வு பெறும் போது மட்டுமே! அப்படி என்ன தான் அவர் செய்கிறார்? வேலை ஆட்களைத் தட்டிக் கொடுப்பார். வேலை சரியாக இருந்தால் தாராளமாகப் பாராட்டுவார்! இப்படிப் பாராட்டுவதால் அவருக்கு என்ன இலாபம்? அந்த வேலையாள் இன்னும் அதிகமாக, இன்னும் சிறப்பாக தனது வேலையைச் செய்வார்! வேலை சிறப்பாக அமையும் போது அந்த வர்த்தகருக்கு விற்பனையும் கூடுகிறது. வேலையாளுக்கு ஊதிய உயர்வும் கிடைக்கிறது. எல்லாமே ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உடையவைகள் தாம்!
இதனையே அதட்டல், உருட்டல் மூலம் செய்து பாருங்கள். திருப்தியற்ற வேலை; அரைகுறை வேலை! நேரத்தோடு செய்து முடிக்க முடியாமை! வேலையாள் மாற்றம்! சம்பளக் குறைப்பு! இப்படி தொடர்ந்து கொண்டே இருக்கும்!
பாராட்டுவதற்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை! இலஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை! ஒரு இன்சொல் போதும்! அனைத்துத் தடைகளையும்
தகர்த்து எறிந்து விடும்!
பராட்டுவது என்பது எவ்வளவு வலிமையானது என்பதை இந்நேரம் புரிந்து கொண்டிருப்பீர்கள்.
மற்றவர்களைப் பாராட்டுங்கள்; பாராட்டுக்கள் உங்களைத் தேடிவரும்!
ஜெகன் ஏன் ஆங்கிலம் பேசுகிறார்?
பொதுவாக வட இந்திய மாநிலங்களிலிருந்து தமிழ்ப்படங்களில் நடிக்க வருபவர்கள் ஆங்கிலத்தில் பேசுவது ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று தான். அவர்களுக்குத் தமிழ் என்பது அந்நிய மொழி. அவ்வளவு தான். தமிழ்ப்படங்களிலிருந்து இந்திப் படங்களுக்கு நடிக்கப் போகிறவர்கள் இந்தி தேசிய மொழியாக இருந்தும் இந்தி, பள்ளியில் பயிலாதக் காரணத்தால் இவர்களுக்கு இந்தியும் அந்நிய மொழி!
இருந்தாலும் சினிமா உலகில் இது ஒரு பிரச்சனை அல்ல! பின்னணிக் குரல் கொடுத்தே எல்லாரையும் தமிழர்களாக்கி விடுவார்கள்!
நகைச்சுவை நடிகர் ஜெகன், விஜய் டிவி நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கு பெறுபவர். நிறைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுகிறார். பல நிகழ்ச்சிகளுக்கு அறிவிப்பாளாராக இருக்கிறார். வளர்ந்து வரும் கலைஞர். வாழட்டும்! வளரட்டும்! நமக்கு மகிழ்ச்சியே!
இவர் பங்கு பெரும் நிகழ்ச்சிகளில் அதிகம் ஆங்கிலத்தைப் பயன்படுத்துகிறார். தமிழ் நிகழ்ச்சிகளில் அதிகம் ஆங்கிலம் பயன்படுத்துபவர் இவராகத்தான் இருக்க வேண்டும். இதில் என்ன குற்றம் கண்டீர்? என உங்களுக்குக் கேட்கத் தோன்றும். காரணம் எல்லா நடிகர்களுமே ஆங்கிலத்தைத் தானே பயன்படுத்துகிறார்கள்?
ஆனால் ஜெகன் ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் போது ஒரு குறை தெரிகிறது! அவர் பேசுகின்ற தோரணையை வைத்துப் பார்க்கும் போது அவர் ஏதோ ஒரு காரணத்துக்காக ஆங்கிலம் பேசுகிறார்!அது தான் அவரது குறை!
"எனக்கும் ஆங்கிலம் தெரியும்!" என்பதாக நினைத்துக் கொண்டு அவர் பேசுகிறார்! இருக்கட்டும்! நீங்கள் நடிகராகியதற்கு ஆங்கிலம் ஒரு காரணம் இல்லையே!
அவர் பேசுகின்ற ஆங்கிலத்தில் ஏதோ ஒரு செயற்கைத்தன்மை தெரிகிறது! அவருக்கு ஆங்கிலம் இயற்கையாக வரவில்லை! ஏதோ வலிந்து பேசுகிறமாதிரி பேசுகிறார்! ஏதோ ஒரு கட்டாயத்தின் பேரில் பேசுகிறாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது!
இவருக்கு ஏன் இந்த வீண் வேலை என்று நாம் நினைப்பதில் தவறில்லை. நாம் சொல்ல வருவதெல்லாம் நீங்கள் நீங்களாகவே இருங்கள். உங்களுக்கு எந்த மொழி சரளமாக வருமோ அந்த மொழியிலேயே உரையாடுங்கள். இப்போதைக்கு ஒரு நடிகராக நீங்கள் நிலைப்பதற்குத் தமிழ் தான் உங்களுக்குக் கை கொடுக்கிறது.
சினிமா உலகில் மிகப்பலர் ஆங்கிலம் தெரிந்தவர்களே. அதில் ஒன்றும் ஐயப்பாடு இல்லை. அந்தக்கால ஜெமினி கணேசன், இந்தக்கால கமல்ஹாசன், ரஜினி, விவேக் போன்றவர்கள் எல்லாம் ஆங்கிலம் தெரிந்தவர்களே. எங்கு ஆங்கிலம் தேவையோ அங்கே அவர்கள் ஆங்கிலத்தைப் பயன் படுத்தினார்கள்; பயன்படுத்துகிறார்கள். அதைக் குற்றம் என்று யாரும் சொல்லவில்லை.
ஆனால் நீங்கள் தேவையற்ற இடங்களில் எல்லாம் ஆங்கிலம் பேசி உங்களுடைய ஆங்கில அறிவை அனைவரும் பார்த்து அதிசயிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அது தான் உங்கள் குறை.
உங்களுக்கு ஆங்கிலம் தெரிவதால் சராசரி ரசிகனுக்கு அதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை! நீங்கள் படித்த ஆங்கிலம் உங்களுடைய முன்னேற்றத்திற்கு உதவ வேண்டுமே தவிர வெளி உலகம் உங்களைப் பெருமைப் படுத்துவதற்காக இருக்கக் கூடாது.
ஆங்கிலம் உலக மொழி. அது தமிழ் சினிமாவின் வழக்கு மொழி அல்ல! ஆங்கிலம் தெரிந்தால் நல்லது. அது மட்டும் அல்ல. மற்ற எந்த மொழிகள் தெரிந்தாலும் அது நமது அறிவை வளர்த்துக் கொள்ள உதவும்.
ஆக, ஜெகன் அவர்களே! உங்கள் மீது நமக்கு எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை! நீங்கள் வளர வேண்டும். இப்போதைய நிலையில் தமிழ்ச் சினிமா தான் உங்களை வாழ வைக்கிறது. உங்களுடைய ஆங்கில அறிவை வைத்து தமிழ் ரசிகனை ரொம்பவும் சோதிக்காதீர்கள்! உங்களுக்கு ஆங்கிலம் தெரியும் என்பதை நாங்கள் ஒத்துக் கொள்ளுகிறோம்!
முடிந்தால் தமிழிலேயே பேசுங்கள்! வாழ்த்துகள்!
Saturday, 27 August 2016
ரஜினியின் ரகசியம் என்ன?
பொதுவாகவே ரஜினியை அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் அனைவரும் அவர் பழகுவதற்கு ஓர் அற்புதமான மனிதர் என்று சொல்லுகிறார்கள். அவரைப் புகழ்ந்து தள்ளுகிறார்ககள் என்றே சொல்லலாம்!
ஏன்? எதற்காக? இவர்கள் இப்படிப் பேசுகிறார்கள் என்று பார்க்கும் போது ஒரே ஒரு விஷயம் தான் நமது கவனத்திற்கு வருகிறது.
மற்றவர்கள் அவரைப்பற்றித் திரும்ப திரும்ப சொல்லுகின்ற ஒரே விஷயம் ஒன்றே ஒன்று தான். அது தான் "பராட்டு" என்கின்ற ஒரே சொல்.
நல்லதைப் பாராட்டுகின்ற ஒரு தன்மை அவருக்கு உண்டு, மனிதன் எந்த நிமிடத்திலும் மனம் மாறலாம்! அதனால் உடனிருப்பவர்கள் செய்கின்ற நல்ல செயல்களை உடனே பாராட்டுகின்ற நல்ல குணம் அவரிடம் உண்டு!
அவருடன் வேலை செய்கின்ற ஒவ்வொருவரையும் அவர் பாராட்டுகிறார். சிறப்பாக நடிக்கிறார்களா உடனே பாராட்டு! சிறியவர், பெரியவர் என்று பார்ப்பதில்லை! புதியவர் பழையவர் என்று பேதமில்லை! சிறப்பான நடிப்பைக் கொடுத்தால், சிறப்பானப் பாடலைக் கொடுத்தால், சிறப்பான இசையைக் கொடுத்தால் உடனே அவர்களைப் பாராட்டு மழையில் நினைத்து விடுவார்!
அது தான் ரஜினி!
பாராட்டு என்பது ஒரு பெரிய உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது! அனைவராலும் விரும்பப்படுவது! பாராட்டை விரும்பாதவர் யாருமில்லை. நாம் அனைவருமே மற்றவரின் பாராட்டுதல்களுக்காகக் காத்துக் கிடக்கிறோம்.
நாம் வேலை செய்கின்ற இடத்தில் கிடைக்கின்ற சம்பளத்தில் மட்டும் நாம் திருப்தி அடைந்து விடுவதில்லை. அங்கும் ஒரு பாராட்டுத் தேவைப்படுகிறது. நமது மேலதிகாரியின் பாராட்டுதல் நமக்குத் தேவையாய் இருக்கின்றது! ஒரு சிலரைப் பற்றி நாம் பேசும்போது "தட்டிக்கொடுத்தே வேலை வாங்குவார்" என்கிறோமே! அது என்ன தட்டிக்கொடுத்து? அது தான் அந்தப் பாராட்டுதல்!
பராட்டுதலுகளுக்காக ஒவ்வொவரும் ஏங்குகிறோம்! நமது வீட்டில், சுற்றுப்புறத்தில, வேலை செய்யுமிடத்தில, நண்பர்கள் வட்டாரத்தில் இப்படி எல்லா இடங்களிலும் நமக்குப் பாராட்டுதல்கள் தேவைப்படுகின்றன!
ரஜினி அதனைப் பிரமாதமாக செய்கிறார். அவர் செய்ய வேண்டிய அவசியமே இல்லை! ஆனாலும் செய்கிறார்! அவர் ஒரு சுப்பர் ஸ்டார்! கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர். அது அவருக்குத் தேவை தானா என்று பலர் நினைக்கலாம். அவர் செய்யத்தான் வேண்டும். மற்றவர்களை மட்டும் அவர் உற்சாகப்படுத்தவில்லை. அப்படிப் பாராட்டுவதன் மூலம் அவரும் உற்சாமடைகிறார்! பணம் மட்டும் உற்சாகத்தைக் கொண்டு வந்து விட முடியாது! சக மனிதனுடான நமது உறவுகளும் உற்சாகத்தைக் கொண்டு வர வேண்டும்.
ரஜினியின் அந்த ரகசியத்தை நாமும் பின்பற்றுவோம்! உங்களுக்கு எனது பாராட்டுக்கள்!
Subscribe to:
Posts (Atom)