Tuesday 30 August 2016

ஜெகன் ஏன் ஆங்கிலம் பேசுகிறார்?


பொதுவாக வட இந்திய மாநிலங்களிலிருந்து தமிழ்ப்படங்களில் நடிக்க வருபவர்கள் ஆங்கிலத்தில் பேசுவது ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று தான். அவர்களுக்குத் தமிழ் என்பது அந்நிய மொழி. அவ்வளவு தான். தமிழ்ப்படங்களிலிருந்து இந்திப் படங்களுக்கு நடிக்கப் போகிறவர்கள் இந்தி தேசிய மொழியாக இருந்தும் இந்தி,  பள்ளியில் பயிலாதக் காரணத்தால் இவர்களுக்கு இந்தியும் அந்நிய மொழி!

இருந்தாலும்  சினிமா உலகில்  இது  ஒரு  பிரச்சனை  அல்ல! பின்னணிக் குரல் கொடுத்தே எல்லாரையும் தமிழர்களாக்கி விடுவார்கள்!

நகைச்சுவை நடிகர் ஜெகன்,  விஜய் டிவி நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கு பெறுபவர். நிறைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுகிறார். பல நிகழ்ச்சிகளுக்கு அறிவிப்பாளாராக இருக்கிறார். வளர்ந்து வரும் கலைஞர். வாழட்டும்! வளரட்டும்! நமக்கு மகிழ்ச்சியே!

இவர் பங்கு பெரும் நிகழ்ச்சிகளில் அதிகம் ஆங்கிலத்தைப்  பயன்படுத்துகிறார்.  தமிழ் நிகழ்ச்சிகளில் அதிகம் ஆங்கிலம் பயன்படுத்துபவர் இவராகத்தான் இருக்க வேண்டும். இதில் என்ன குற்றம் கண்டீர்? என உங்களுக்குக் கேட்கத் தோன்றும். காரணம் எல்லா நடிகர்களுமே ஆங்கிலத்தைத் தானே பயன்படுத்துகிறார்கள்?

ஆனால் ஜெகன் ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் போது ஒரு குறை தெரிகிறது! அவர் பேசுகின்ற தோரணையை வைத்துப் பார்க்கும் போது அவர் ஏதோ ஒரு காரணத்துக்காக ஆங்கிலம் பேசுகிறார்!அது தான் அவரது குறை!

"எனக்கும் ஆங்கிலம் தெரியும்!" என்பதாக நினைத்துக் கொண்டு அவர் பேசுகிறார்!  இருக்கட்டும்!  நீங்கள் நடிகராகியதற்கு ஆங்கிலம் ஒரு காரணம் இல்லையே!

அவர் பேசுகின்ற ஆங்கிலத்தில் ஏதோ ஒரு செயற்கைத்தன்மை  தெரிகிறது! அவருக்கு ஆங்கிலம் இயற்கையாக வரவில்லை! ஏதோ வலிந்து பேசுகிறமாதிரி பேசுகிறார்!  ஏதோ ஒரு கட்டாயத்தின் பேரில் பேசுகிறாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது!

இவருக்கு ஏன் இந்த வீண் வேலை என்று நாம் நினைப்பதில் தவறில்லை. நாம் சொல்ல வருவதெல்லாம் நீங்கள் நீங்களாகவே இருங்கள். உங்களுக்கு எந்த மொழி சரளமாக வருமோ அந்த மொழியிலேயே உரையாடுங்கள். இப்போதைக்கு ஒரு நடிகராக நீங்கள் நிலைப்பதற்குத் தமிழ் தான் உங்களுக்குக் கை கொடுக்கிறது.

சினிமா உலகில் மிகப்பலர் ஆங்கிலம் தெரிந்தவர்களே.  அதில் ஒன்றும் ஐயப்பாடு இல்லை. அந்தக்கால ஜெமினி கணேசன், இந்தக்கால கமல்ஹாசன், ரஜினி, விவேக் போன்றவர்கள் எல்லாம் ஆங்கிலம் தெரிந்தவர்களே. எங்கு ஆங்கிலம் தேவையோ அங்கே அவர்கள் ஆங்கிலத்தைப் பயன் படுத்தினார்கள்; பயன்படுத்துகிறார்கள். அதைக் குற்றம் என்று யாரும் சொல்லவில்லை.

ஆனால் நீங்கள் தேவையற்ற இடங்களில் எல்லாம் ஆங்கிலம் பேசி உங்களுடைய ஆங்கில அறிவை அனைவரும் பார்த்து அதிசயிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அது தான் உங்கள் குறை.

உங்களுக்கு ஆங்கிலம் தெரிவதால் சராசரி ரசிகனுக்கு அதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை! நீங்கள் படித்த ஆங்கிலம் உங்களுடைய முன்னேற்றத்திற்கு உதவ  வேண்டுமே தவிர வெளி உலகம்  உங்களைப் பெருமைப் படுத்துவதற்காக இருக்கக் கூடாது.

ஆங்கிலம் உலக மொழி. அது தமிழ் சினிமாவின் வழக்கு மொழி அல்ல! ஆங்கிலம் தெரிந்தால் நல்லது. அது மட்டும் அல்ல. மற்ற எந்த மொழிகள் தெரிந்தாலும் அது நமது அறிவை வளர்த்துக் கொள்ள உதவும்.

ஆக,  ஜெகன் அவர்களே! உங்கள் மீது நமக்கு எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை!  நீங்கள் வளர வேண்டும். இப்போதைய நிலையில் தமிழ்ச் சினிமா தான் உங்களை வாழ வைக்கிறது. உங்களுடைய ஆங்கில அறிவை வைத்து தமிழ் ரசிகனை ரொம்பவும் சோதிக்காதீர்கள்!  உங்களுக்கு ஆங்கிலம் தெரியும் என்பதை நாங்கள் ஒத்துக் கொள்ளுகிறோம்!

முடிந்தால் தமிழிலேயே பேசுங்கள்! வாழ்த்துகள்!









No comments:

Post a Comment