Monday, 31 October 2016
கேள்வி - பதில் (33)
கேள்வி
ஜெயலலிதா - கருணாநிதி உடல் சுகவீனத்திற்கு பில்லி சூனியம் தான் காரணம் என்று இப்போது புதிதாக செய்திகள் வெளியாகின்றனவே! இப்படியும் நடக்குமா?
பதில்
அரசியல்வாதிகள் எதனையும் செய்யத் தயங்காதவர்கள் என்பது பொதுவான ஒரு குற்றச்சாட்டு உண்டு.
இந்தக் குற்றச்சாட்டை எழுப்பியிருப்பவர் ஒரு ஜோதிடர் என்பதாகச் செய்திகள் கூறுகின்றன.
ஜெயலலிதாவுக்கும் ஜோதிடர்களுக்கும் உள்ள தொடர்பை தமிழகமே அறியும். அதில் ஏதும் ரகசியம் இருப்பதாகத் தெரியவில்லை. அவர் செய்கின்ற ஒவ்வொரு காரியமும், ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு செயலும் ஜோதிடர்களின் அறிவுரைப்படி தான் நடக்கின்றன என்பதை ஊரறியும்.
அவரை ஆட்சியில் அமரவைத்த அவருடைய ஜோதிடர்கள் இந்த உடல் சுகவீனத்தைப் பற்றி ஏன் அவரிடம் சொல்லவில்லை? ஏன் அவர்களுக்குத் தெரியவில்லை? ஏன் அவருக்குத் தெரிவிக்கவில்லை?
ஜெயலலிதா கடவுளை நம்பினாரோ, நம்பவில்லையோ ஆனால் அவர் ஜோதிடர்களை அளவுக்கு அதிகமாகவே நம்பினார்! அரசியலை முன் அறிந்த ஜோதிடர்கள் அவருடைய உடல்சுகவீனத்தை ஏன் முன்னறியவில்லை? இப்படிக் கேள்விகளை அடுக்கிக்கொண்டு போகலாம். ஆனால் பதில் தான் இல்லை! நம்மிடம் உள்ள ஒரே பதில்: காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையைத்தான் நாம் நினைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது!
ஜோதிடர்கள் அரசியலைக் கணிக்கலாம் ஆனால் அவர்களால் உடல்நலனைக் கணித்து அறிய முடியாது என்பதைத் தான் இது காட்டுகிறது! அல்லது போகிற போக்கில் இப்படிச் சொல்லிவிட்டுப் போகலாம்: ஜோதிடர்கள் தான் அவரிடம் நெருக்கம் உள்ளவர்கள். பலம், பலவீனம் அறிந்தவர்கள். ஏன் அவர்களிலே ஒருவர் இதனைச் செய்திருக்கக் கூடாது?
கருணாநிதிக்கு இது போன்ற பிரச்சனைகள் இல்லை. அவர் பில்லி, சூனியம், ஏவல் போன்றவைகளில் நம்பிக்கை இல்லாதவர். ஜோதிடரையோ, ஜோதிடத்தையோ நம்பாதவர்! வயதின் காரணமாக சில உபாதைகள் வரும் என்பதை அவர் உணர்ந்தவர். அதனால் அவர் இதனையும் ஒரு பொழுது போக்காக எடுத்துக் கொள்வார்!
நாம் சொல்ல வருவதெல்லாம் ஒன்று தான். இப்போது ஜெயலலிதாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டு வருகிறார்கள். அதுவும் அவர்கள், தாங்கள் சார்ந்த துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள். அவர்களை நம்புங்கள். இதுவே ஒரு சராசரி ஏழைப் பெண்ணாக இருந்தால் ஏதோ ஒரு கோயிலுக்குப் போய், பூசாரி கொடுத்த திருநீற்றை நெற்றியில் பூசிக்கொண்டு வருவார். அடுத்த நாளே அவர் குணமாகிவிடுவார்! பணக்காரர்களுக்கு ஏற்படும் நோய் கொஞ்சம் இழுத்துப் பறித்துக்கொண்டு தான் இருக்கும்! அதுவும் அரசியல்வாதிகளுக்கு ஏற்படும் நோய் மருத்துவர்களிடமும் விதண்டாவாதம் பண்ணிக் கொண்டிருக்கும்!
ஜெயலலிதா அவர்கள் உடல்நலம் பெறுவார். மீண்டும் தனது பணிகளைத் தொடர நாமும் இறைவனை இறைஞ்சுவோம்!
Friday, 28 October 2016
கபாலி - தீபாவளி செய்தி!
தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடுங்கள். நல்ல முறையில் கொண்டாடுங்கள். உற்றார் உறவினர், நண்பர்கள், நமது நலம் விரும்பிகள் அனைவரோடும் சேர்ந்து குதூகலமாக தீபாவளியைக் கொண்டாடுங்கள்.
வீணடிப்பது என்பது நமது சமூகத்தில் மிக அதிகம். ஒர் அளவு தெரியாமல் அதிகமாகச் சமைத்துவிட்டு அதனை அப்படியே குப்பையில் கொட்டுவது என்பது நம்மிடையே அதிகம். முடிந்தால் ஆதரவற்ற இல்லங்களுக்குச் சென்று உங்களது தீபாவளியைக் கொண்டாடுங்கள். ஆதரற்றவர் என்பது எப்போது வேண்டுமானாலும் மாறலாம். கொஞ்சம் புண்ணியத்தையாவது சேர்த்து வைப்போம்.
எல்லாவற்றையும் விட கபாலி என்ன சொன்னார் என்பதை நினைவுறுத்த விரும்புகிறேன்.
பாருங்கள், கபாலி என்ன சொல்லுகிறார் என்று: "நாங்கள் ஆண்ட பரம்பரை இல்லை தான்! ஆனால் ஆள விரும்புகிறவண்டா!"
இதனை மறந்து விடாதீர்கள். நாம் நாட்டை ஆள வந்த சமூகம். ஆள விரும்புகிற சமூகம். ஆள வேண்டியவர்கள் நாம். பிறரை நாம் ஆள விடக்கூடாது! தவறுகள் நேர்ந்திருக்கலாம். ஆனால் அதனைத் தொடர விடக்கூடாது! இதனைத் திருத்துவதற்கு யாரையும் நாம் எதிர்பார்க்க வேண்டாம். நாமே தான் நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும்.
ஆள விரும்புவது என்றால் அனைத்தையும் ஆள வேண்டும். நாடு, வர்த்தகம், மருத்துவம், நீதித்துறை இப்படி அனைத்துத் துறையிலும் நமது கால்கள் உறுதியாக ஊன்றப்பட வேண்டும் நமக்குச் சாக்குப் போக்குகள் வேண்டாம்..
சீனனைப் பாருங்கள். யூதனையும் பாருங்கள். இன்று வர்த்தகம் என்பது அவர்கள் கையில். யூதனைப் பார்க்க முடியாவிட்டாலும் சீனர்களைத் தினசரி நாம் பார்க்கிறோம். அவன் வர்த்தகத்தைப் பாருங்கள். எப்படி செயல்படுகிறான் என்று பாருங்கள். நமது நகரத்தாரிடமிருந்து கடன் வாங்கியவன். இன்று நாம் அவனை அண்ணாந்துப் பார்க்கிறோம்!
தமிழர் சமூகம் கொடிகட்டி வாழ்ந்த சமூகம். அந்தப் பெருமையை மீட்டெடுக்க நாம் உழைக்க வேண்டும். உயர்ந்த வாழ்க்கை வாழ வேண்டும்.நாம் ஆள வேண்டும்! ஆள்கின்ற சமுகமாக மாற வேண்டும்.
இந்தத் தீபாவளி பெருநாளில் "நாம் உயர்வோம்!" என்று உறுதிமொழி எடுப்போம்!
தீபாவளி வாழ்த்துகள்!
Wednesday, 26 October 2016
தீபாவளி எச்சசரிக்கை!
காலையில் ஒரு சொற்பொபொழிவைக் கேட்க நேர்ந்தது.
இது தீபாவளி காலம் என்பதால் நான் கேட்டதை உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன்.
இப்போதெல்லாம் கண்களில் லென்ஸ் (Contact Lens) - தொடுவில்லை -போடுவது என்பது மிகவும் சாதராணமாகப் போய் விட்டது. தங்களுக்குக் கண் தெரியவில்லை என்பதை யாரும் காட்டிக் கொள்ள விரும்பவில்லை! அதனால் லென்ஸ் போடுகின்ற பழக்கம் அதிகரித்து வருகிறது.
இதனையெல்லாம் யாரும் தவறு என்று சொல்லப் போவதில்லை. பணம் கொஞ்சம் கூடுதலாகப் போட வேண்டியிருக்கும். அவ்வளவு தான்.
தொடுவில்லை போடுவதால் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என்பது பற்றி இங்கே நாம் பேசப்போவதில்லை.
ஆனால் திருவிழாக் காலங்களில் இந்தத் தொடுவில்லை போடுகிறவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது தான் நமது நோக்கம்.
தீபாவளி போன்ற பெருநாட்களில் நாம் பலகாரங்கள் செய்வதில் நிறைய ஈடுபாடு காட்டுகிறோம். பலகாரகங்கள் மட்டும் அல்ல, விதவிதமாகச் சமைப்பது இன்னும் பல. நெருப்பு, புகை, தணல் என்று இவைகளோடு தான் நிறைய போராட்டங்கள் நமது பெண்கள் நடத்த வேண்டியுள்ளது.
இந்த நேரத்தில் தொடுவில்லையைப் பயன் படுத்துகிற பெண்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்துகின்ற அந்தத் தொடுவில்லைகள் பிளாஸ்டிக்கால் ஆனது. நெருப்புக்கு உருகும் தன்மை உள்ளது அப்படி உருகும் போது அது உங்களின் கருவிழிகளை நிரந்தரமாகக் குருடாக்கிவிடும்.
நீங்கள் அடுப்படி வேலைகளில் ஈடுபட்டிருக்கும் போது முடிந்தவரையில் அந்தத் தொடுவில்லைகளைக் கழட்டி வைத்து விடுங்கள். அதுவே உங்களுக்குப் பாதுகாப்பு.
கண்கள் நமக்கு மிக முக்கியமான உறுப்பு. அதனை இழந்துவிடலாகது. முடிந்தவரை நமது கண்களுக்கு நாம் பாதுகாப்புக் கொடுப்போம்.
மகிழ்ச்சியோடு தீபாவளியைக் கொண்டாடுவோம்.
.
Subscribe to:
Posts (Atom)