சென்ற வாரம் இந்திய சமுதாயத்திற்கான பத்தாண்டு வியூகப் பெருந்திட்டத்தை ம.இ.கா.வின் கூட்டமொன்றில் நமது மலேசியப் பிரதமர் "இது வெட்டிப் பேச்சல்ல! இது நிஜம்!" என தமிழில் சொல்லி இந்நாட்டு இந்தியர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்திருக்கிறார்.
இந்தப் பெருந்திட்டத்தைப் பற்றிப் பல விமர்சனங்கள் எழுந்தாலும் "இது எதற்கும் உதவாத பெருந்திட்டம்" என்பதாக ஒதுக்கிவிட முடியாது.
நான் எந்த அவநம்பிக்கையையும் விதைக்க விரும்பவில்லை. நம்பிக்கையோடு தான் நாம் இந்தப் பெருந்திட்டத்தை எதிர்கொள்ள வேண்டும். அதுவும் பிரதமரால் ஏற்றுக்கொள்ளப் பட்ட ஒரு திட்டம் என்றால் அது அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு திட்டம் என்பதாகவே அது பொருள்படும்.
இப்போது நம்மிடையே உள்ள குறைபாடுகள் எல்லாம் இந்த மாபெரும் திட்டத்தை ம.இ.கா. எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது தான்.
இது நாள் வரை ம.இ.கா. கடந்தகாலங்களில் அறிமுகப்படுத்திய எந்த ஒரு திட்டமும் மக்களைப் போய் சேரவில்லை என்பது தான் அவர்கள் மீது உள்ள குற்றச்சாட்டு. நமக்கு அதிகம் தெரிந்த, நம்மால் அதிகம் பேசப்பட்ட ஒரு விஷயம் என்றால் அது தமிழ்ப்பள்ளிகளின் சீரமைப்புப் பணிகள் என்பது தான். அல்லது புதிய கட்டடங்கள்.
கோடிக்கணக்கில் பண உதவி கிடைத்தும் தமிழ்ப் பள்ளிகள் எந்தப் பயனையும் அடையவில்லை! கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை! ம.இ.கா.வே நமக்கு ஒரு அவநம்பிக்கையை ஏற்படுத்திவிட்டது!
இன்றைய "மக்கள் ஓசை" ஞாயிறு இதழில் தலைமை ஆசிரியர் எம்.இராஜன் அவர்கள் இந்தப் பெருந்திட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது "யார் கண்டார்கள்...? 10 ஆண்டுகளில் இந்த மறுமலர்ச்சி என்ற ஒரு லட்சியத் தடத்தில் நாம் சாதிப்பது ஒரு பாதியாவது இருக்காதா? ...சில நெல்மணிகளாவது உதிர்க்காமலா போய்விடும்?" என்கிறார்!
அவரின் நம்பிக்கை வார்த்தைகளை நாமும் ஏற்கிறோம். ஆனால் நான் வேறு ஒரு கண்ணோட்டத்தில் இதனைப் பார்க்கிறேன். இந்தப் பெருந்திட்டத்தின் வளர்ச்சி எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது என்பது மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும். ஒவ்வொரு நூறு நாள்களுக்கும், ஒவ்வொரு பத்து மாதத்திற்கும் எந்த அளவுக்கு திட்டங்கள் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும். ம.இ.கா. இதனைச் செயல்படுத்த உடனடியாகக் களத்தில் இறங்க வேண்டும்.
தலைவர்கள் சண்டை போடலாம்! தறுதலைகள் எனப் பெயர் எடுக்கலாம்! பைத்தியங்களாகத் திரியலாம்! அது அவர்களது உரிமை! ஆனால் ம.இ.கா. தலைமையகத்தில் ஒரு குழு அமைத்து இதற்கானத் தொடர் வெலைகள் நடந்தாக வேண்டும். திட்டங்கள் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பது கண்காணிக்கப்பட வேண்டும். இது இந்நாட்டு இந்தியர்களின் உரிமை. இனி மேலும் மூடி மறைக்க இதில் ஒன்றுமில்லை. அரசாங்கம் ஒரு திட்டத்தைக் கொடுத்திருக்கிறது. அது செயல்படுத்தப்பட வேண்டும். அதனை ம.இ.கா. கண்காணிக்க வேண்டும்.
பிரதமர் இவ்வளவு செய்தும் ம.இ.கா. அதனைக் கண்காணிக்கத் தவறினால், இன்னும் ஏனோ தானோ போக்கைக் கடைப் பிடித்தால் - ம.இ.கா. வை மன்னிக்க வாய்ப்பே இல்லை! தலைவர்கள் வரலாம்! போகலாம்! ஆனால் இந்தியர்களுக்கு எனக் கொடுக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்! அவைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இனி என்ன செய்யலாம்? அடுத்த நூறு நாள்களில் என்ன முன்னேற்றம்; அடுத்த பத்து மாதங்களில் என்ன முன்னேற்றம்? அடுத்த தேர்தலுக்கு முன் என்ன முன்னேற்றம்? இவைகள்: எல்லாம் மக்கள் மன்றத்திற்கு வர வேண்டும்.
ஒன்றுமே செய்யாமல் வெறும் வாய்ச்சவடால் பண்ணுவதும், வாயால் வடைசுடுவதும் போதும் போதும் என்றாகி விட்டது! இது ம.இ.கா.விற்கு ஒர் அக்கினிப்பரிட்சை! கடைசி வாய்ப்பு!
என்ன ஆகிறது பார்க்கலாம்!
Sunday, 30 April 2017
Saturday, 29 April 2017
சிவ நாடார் உலகின் முதலாவது பணக்காரத் தமிழர்!
உலகத்தில் யார் பெரிய பணக்காரர் என்றால் அனைவருக்குமே தெரியும், பில் கேட்ஸ் என்று. பல ஆண்டுகளாக அவரை அடிக்க ஆளில்லை! என்ன தான் உலகப் பொருளாதாரத்தில் வளர்ச்சி, தளர்ச்சி என்றாலும், சரிவு உயர்வு என்றாலும், வீழ்ச்சி மீட்சி என்றாலும் பில் கேட்ஸ் தான் முன்னணியில் நிற்கிறார்! இன்றைய அவரின் சொத்து மதிப்பு 86 பில்லியன் டாலர். (ஒரு பில்லியன் என்பது 100 கோடி என அறிக)
அது சரி, உலக அளவில் தமிழர் யாரேனும் சொல்லும்படியாக பணக்காரர் வரிசையில் இருக்கிறார்களா? இருக்கிறார்கள். உலக அளவில் முதல் பெரிய கோடான கோடிகளுக்கு அதிபதி என்றால் அது தமிழ் நாட்டைச் சேர்ந்த சிவ நாடார் தான் அந்தப் பெருமையைப் பெறுகின்ற முதல் தமிழர்.
சிவ நாடார் அல்லது ஷிவ் நாடார் தமிழ் நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர். தமிழ் வழி கல்வி கற்றவர்.பின்னர் கல்லுரியில் எலக்ட்ரோனிக்ஸ் என்ஜியனியரிங் படித்து அதன் பின்னர் அத்துறையில் டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறார். நல்ல கல்வியாளர்.
சிவ நாடாரின் தந்தை சுப்பிரமணிய நாடார். நீதிபதியாகப் பணியாற்றியவர். தாயார் வாமசுந்தரி தேவி. வாமசுந்தரி, நாம் தமிழர் கட்சி நிறுவனரும், தினத்தந்தி நாளிதழின் நிறுவனரும், தமிழர் தந்தை என்று போற்றப்படும் சி.பா. ஆதித்தனார் அவர்களின் சகோதரி.
முதலில் டி.சி.எம். நிறுவனத்தில் சுமார் எட்டு ஆண்டுகள் அவர் பணி புரிந்திருக்கிறார். போதுமான அனுபவங்களைப் பெற்ற பிறகு சொந்தத் தொழில் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் காரணமாக எச்.சி.எல். என்னும் கணினி நிறுவனத்தை நிறுவினார். முதலில் எலக்ரோனிக்ஸ் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டார்.வெளி. நாடுகளிலிருந்து கணினி உதிரி பாகங்கள் இறக்குமதி, சிங்கப்பூரில் கணினி வன்பொருள் விற்பகம். புதிய வடிவமைப்பிலான மடிக்கணினிகள் இப்படி கணினித் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது. நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், பொருளாதார சீர்திருத்தங்கள் அனைத்தும் கணினித் துறைக்குச் சாதகமாக அமைந்தன! மாற்றங்களை நன்கு பயன்படுத்திக் கொண்டார் சிவ நாடார். சுருக்கமாக கணினி தான் அவரது வெற்றியின் திறவுகோள்!
71 வயதாகும் சிவ நாடாருக்கு இன்றைய சொத்து மதிப்பு சுமார் 12.3 பில்லியன் என ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை குறிப்பிடுகிறது. அதாவது உலகக் கோடீஸ்வரர்கள் 2043 பேரில் சிவ நாடார் 102 - வது இடத்தில் இருக்கிறார்! உலக அளவில் 102 - வது இடத்தில் இருந்தாலும் உலகக் கோடீஸ்வரத் தமிழர்கள் அளவில் அவரே முதலிடத்தில் இருக்கிறார்.
மலேசியத் தமிழரான ஆனந்தகிருஷ்ணன் இப்போது வெளியிடப்பட்டிருக்கும் பட்டியலில் 2043 கோடீஸ்வரர்களில் 219-வது இடத்தில் இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் முதல் கோடீஸ்வரத் தமிழர் என்னும் நிலையிலிருந்து தள்ளப்பட்டிருக்கிறார். மலேசியக் கோடீஸ்வரர் பட்டியலிலும் அவர் இரண்டாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். இந்தியாவில் அவ்ருடைய நிறுவனத்தின் மீதான வழக்குகளினால் அவருக்கு இந்தப் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது
.
சிவ நாடார் வெளி மாநிலங்களிலோ, வெளி நாடுகளிலோ இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் மறக்காமல் தன் சொந்த ஊரில் நடக்கும் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ளத் தவறுவதில்லை. விடிய விடிய நடக்கும் ஆடல் பாடல்களை ரசித்துப் பார்ப்பதுண்டு மிக எளிமையான மனிதர் என்று சொல்லப்படுகின்றது.
அவர் இன்னும் பெரிய சாதனைகள் புரிய நாமும் வாழ்த்துவோம்!
Friday, 28 April 2017
கேள்வி - பதில் (44)
கேள்வி
தமிழ் நாட்டில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஒரு நிரந்திர ஆட்சி அமையுமா?
பதில்
நிரந்தர ஆட்சி அமைய வாய்ப்பிருந்தாலும் இரு அணிகளுக்குள்ளே இருக்கும் பூசல்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை! தீர்வு காணப்பட்டாலும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க விடுமா என்பதும் கேள்விக் குறியே!
முடிந்தவரை அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு சாகட்டும்; நாம் வெளியே இருந்தே வேடிக்கப் பார்ப்போம் என்பது தான் பா.ஜ.கா.வின் நிலை! அவர்களுக்குள் தீர்வு காணாததால் நாங்கள் ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வந்தோம் என்று தமிழ் நாட்டு மக்களுக்கு பின்னர் அறிக்கை விடுவார்கள்!
இந்த இரு அணிகளுக்குள்ளும் யார் பதவிக்கு வந்தாலும் அதனால் தமிழக மக்களுக்கு என்ன பயன் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். எந்தப் பயனும் இருக்காது என்பதே எனது அபிப்பிராயம்!
பன்னீர்செல்வம், தான் அம்மா ஆட்சியைத்தான் கொண்டு வருவேன் என்று பிடிவாதமாக இருக்கிறார்! அம்மா எப்படிப்பட்டவர் என்பதைத் தமிழகம் மட்டும் அல்ல இந்தியாவே அறியும்! அவர் எவ்வளவு பெரிய ஊழல்வாதி என்பதை நாடே அறியும்! கோடி கோடியாக ஊழல் செய்து குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது! இன்று அவர் உயிரோடு இருந்தால் சசிகலாவிற்குப் பதிலாக அவர் இன்று பார்பன அக்ராகர சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்!
இப்படி ஒரு ஊழல்வாதியை முன்னுதாரணமாகக் கொண்டு தான் நான் செயல்படுவேன் என்றால் என்ன அர்த்தம்? அதன்படி அவர் செயல்பட்டுக் கொண்டும் இருக்கிறார். காவேரி நீர் தமிழகத்திற்குக் கிடைக்கவில்லை, கர்னாடக மாநிலம் தண்ணிரைத் தடுப்பதற்காக அணைகள் கட்டிக் கொண்டிருக்கின்றது.. அந்த அணைகள் கட்டுவதற்காக தமிழ் நாட்டில் இருந்து தான் மணல் கொள்ளயடிக்கப் படுகின்றது! அதற்கு இப்போதும் கர்நாடகாவிற்கு மணல் அனுப்பிக் கொண்டிருப்பது அவர் குடும்பமும் ஒன்று! அம்மா செய்ததையே இவரும் செய்கிறார்! எப்படி காவேரி பிரச்சனைத் தீரும்!
எடப்பாடி பழனிசாமி மன்னார்குடி மாஃபியா குடும்பத்தோடு சம்பந்தப்பட்டவர்! தமிழ் நாட்டையே சுரண்டியவர்கள். தமிழ் நாட்டு மணலை வைத்தே பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்கள்! சசிகலாவின் அக்காள் மகனான தினகரனுடன் கைகோர்த்துக் கொண்டிருப்பவர்! இடைத் தேர்தலில் தினகரன் தனது சொத்து மதிப்பு ருபாய் 70,000 இலட்சம் என்று சொன்னவர். ஆனால் இரட்டை இலை சின்னத்திற்காக ருபாய் 50 கோடி இலஞ்சம் கொடுத்தவர்.
இவர்களால் தமிழ் நாட்டுக்கு என்ன நல்லது நடக்கப் போகிறது? இவர்கள் பதவிக்கு வருவதன் மூலம் வருங்காலங்களில் தமிழ் நாட்டு மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கூட கிடைக்காது் இப்போதே இது தெரிய ஆரம்பித்து விட்டது!
ஜனாதிபதி ஆட்சி வருவதன் மூலம் என்ன நடக்கும் என்பதும் புரியவில்லை! நடுவண் அரசு தமிழகத்திற்கு எதிராகவே தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. விவசாயிகள் பிரச்சனை ஆகட்டும், மீனவர் பிரச்சனை ஆகட்டும், நெடுவாசல் பிரச்சனை ஆகட்டும் - எதுவுமே தமிழகத்தின் நலனுக்குச் சாதகமாக இல்லை.
ஆனாலும் நம்பிக்கையோடு இருப்போம்! நல்லதே நடக்கும் என நம்புவோம்! நல்லாட்சி மலரும் என நம்புவோம்! நான்கு ஆண்டுகள் என்ன நானூறு ஆண்டுகள் ஆனாலும் தமிழன் தலை நிமிர்வான்! தமிழகமும் தலை நிமிரும்!
Subscribe to:
Posts (Atom)
