Saturday 29 April 2017

சிவ நாடார் உலகின் முதலாவது பணக்காரத் தமிழர்!


உலகத்தில் யார் பெரிய பணக்காரர் என்றால்  அனைவருக்குமே தெரியும், பில் கேட்ஸ் என்று. பல ஆண்டுகளாக அவரை அடிக்க ஆளில்லை! என்ன தான் உலகப் பொருளாதாரத்தில்  வளர்ச்சி, தளர்ச்சி என்றாலும், சரிவு உயர்வு என்றாலும், வீழ்ச்சி மீட்சி என்றாலும் பில் கேட்ஸ் தான் முன்னணியில் நிற்கிறார்! இன்றைய அவரின்  சொத்து மதிப்பு 86 பில்லியன் டாலர். (ஒரு பில்லியன் என்பது 100 கோடி என அறிக)

அது சரி, உலக அளவில் தமிழர் யாரேனும் சொல்லும்படியாக பணக்காரர் வரிசையில் இருக்கிறார்களா? இருக்கிறார்கள். உலக அளவில் முதல் பெரிய கோடான கோடிகளுக்கு அதிபதி  என்றால் அது தமிழ் நாட்டைச் சேர்ந்த சிவ நாடார் தான் அந்தப் பெருமையைப்  பெறுகின்ற முதல் தமிழர்.

சிவ நாடார் அல்லது ஷிவ் நாடார் தமிழ் நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர். தமிழ் வழி கல்வி கற்றவர்.பின்னர் கல்லுரியில் எலக்ட்ரோனிக்ஸ் என்ஜியனியரிங் படித்து அதன் பின்னர் அத்துறையில் டாக்டர்  பட்டமும் பெற்றிருக்கிறார். நல்ல கல்வியாளர்.

சிவ நாடாரின் தந்தை சுப்பிரமணிய நாடார். நீதிபதியாகப் பணியாற்றியவர். தாயார் வாமசுந்தரி தேவி.  வாமசுந்தரி,   நாம் தமிழர் கட்சி நிறுவனரும், தினத்தந்தி நாளிதழின் நிறுவனரும், தமிழர் தந்தை என்று போற்றப்படும் சி.பா. ஆதித்தனார் அவர்களின் சகோதரி.

முதலில் டி.சி.எம். நிறுவனத்தில் சுமார் எட்டு ஆண்டுகள் அவர் பணி புரிந்திருக்கிறார். போதுமான அனுபவங்களைப் பெற்ற பிறகு சொந்தத் தொழில் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் காரணமாக எச்.சி.எல். என்னும் கணினி நிறுவனத்தை நிறுவினார்.  முதலில் எலக்ரோனிக்ஸ் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டார்.வெளி.  நாடுகளிலிருந்து கணினி உதிரி பாகங்கள் இறக்குமதி, சிங்கப்பூரில் கணினி வன்பொருள் விற்பகம். புதிய வடிவமைப்பிலான மடிக்கணினிகள் இப்படி கணினித் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது. நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், பொருளாதார சீர்திருத்தங்கள் அனைத்தும் கணினித் துறைக்குச் சாதகமாக அமைந்தன! மாற்றங்களை நன்கு பயன்படுத்திக் கொண்டார் சிவ நாடார். சுருக்கமாக கணினி தான் அவரது வெற்றியின் திறவுகோள்!

71 வயதாகும்  சிவ நாடாருக்கு  இன்றைய சொத்து மதிப்பு சுமார் 12.3  பில்லியன் என ஃபோர்ப்ஸ்  பத்திரிக்கை குறிப்பிடுகிறது. அதாவது உலகக் கோடீஸ்வரர்கள் 2043 பேரில் சிவ நாடார் 102 - வது இடத்தில் இருக்கிறார்! உலக அளவில் 102 - வது இடத்தில் இருந்தாலும் உலகக் கோடீஸ்வரத் தமிழர்கள் அளவில் அவரே முதலிடத்தில் இருக்கிறார்.

 மலேசியத் தமிழரான ஆனந்தகிருஷ்ணன் இப்போது வெளியிடப்பட்டிருக்கும் பட்டியலில் 2043 கோடீஸ்வரர்களில் 219-வது இடத்தில் இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் முதல் கோடீஸ்வரத் தமிழர் என்னும் நிலையிலிருந்து தள்ளப்பட்டிருக்கிறார். மலேசியக் கோடீஸ்வரர் பட்டியலிலும் அவர் இரண்டாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். இந்தியாவில் அவ்ருடைய நிறுவனத்தின் மீதான வழக்குகளினால் அவருக்கு இந்தப் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது
.

சிவ நாடார் வெளி மாநிலங்களிலோ, வெளி நாடுகளிலோ இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் மறக்காமல் தன் சொந்த ஊரில் நடக்கும் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ளத் தவறுவதில்லை. விடிய விடிய நடக்கும் ஆடல் பாடல்களை ரசித்துப் பார்ப்பதுண்டு  மிக எளிமையான மனிதர் என்று சொல்லப்படுகின்றது.

அவர் இன்னும் பெரிய சாதனைகள் புரிய நாமும் வாழ்த்துவோம்!

No comments:

Post a Comment