Thursday 17 November 2016

அம்மா! நீங்கள் நலமா?


அம்மாவை நினைத்தால் நமக்கு இன்னும் தலை சுற்றிக்கொண்டு தான் இருக்கிறது!

தமிழக முதல்வர் அம்மா அவர்கள் உடல்நிலை தேறி வருகிறார், வருகிறார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களே தவிர மற்றபடி உண்மை நிலவரம் தெரிந்தபாடில்லை!

இன்று தமிழகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் அம்மாவின் ஆசியோடும், அம்மாவின்  ஆலோசனையின் பேரிலும் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று செய்திகள் கூறுகின்றன. அப்படியென்றால் அம்மா படுத்தப்படுக்கையாக இருக்கிறார் என்றெல்லாம்  சொல்லமுடியாது.

அவர் தெளிவாகத்தான் இருக்கிறார். தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று அவரால் புரிந்துகொள்ள முடிகிறது. தனது அமைச்சர்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று ஆலோசைனைகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார். எல்லாமே சரியாகத்தான் இருக்கிறது.

ஆனாலும் இதுவரை அவரைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்பட வில்லை!

சமீபத்தில் வெளியான அறிக்கையில் தமிழக வாக்காளர்களை அவருடைய கட்சிக்கு வாக்கு அளிக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். மக்கள் செய்த பிரார்த்தனைகளினால்  தான் தேறி வருவதாகவும், விரைவில் பணிக்குத் திரும்புவேன் என்றும் கூறியிருக்கிறார்!

ஆனால் அப்படி என்ன தான் தேறிவருகிறார் என்று யாராலும் கணிக்கமுடியவில்லை! அப்பொல்லோ மருத்துவமனையை விட அவரது ஜோஸ்யர்கள் சொல்லுவதைத்தான் நாம் நம்ப வேண்டியிருக்கிறது! எல்லாவற்றையும் கணித்து சொல்லுபவர்கள் அவர்கள் தான்! முதல்வரும் மருத்துவர்களைவிட ஜோஸ்யர்களைத்தான் அதிகம் நம்புபவர் என்பது அனைவரும் அறிந்தது தான்!

ஜோஸ்யர்கள் அவர் சீக்கிரம் குணமடைந்து வீடு திரும்புவார் என்று எல்லாவற்றையும் கணக்குப்போட்டுத் தான்  சொல்லியிருக்கிறார்கள்! ஆனால் லண்டன் டாக்டரோ இன்னும் சிறப்பான சிகிழ்ச்சை வேண்டுமென்றால் லண்டனுக்கு வாங்கோ என்று அழைப்பு விடுத்திருக்கிறார்!

ஆனாலும் இதுவரை அவரைப்பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை!

அப்பல்லோ மருத்துவமனையோ இப்படி ஒரு நிலைமை அவர்களுக்கு வரும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். ஐம்பது ஆண்டு காலம் திராவிடக்கட்சிகள் தமிழகத்தை ஆட்சி செய்திருக்கின்றன. ஆனால் ஒரு முதல்வருக்கு மருத்துவம் பார்க்க ஒர் அரசாங்க மருத்துவமனைக் கூட தகுதியானதாக இல்லை!

இப்போதைய,  முதல்வரின் புகலிடம் அப்பல்லோ மருத்துவமனை தான்! நூல்நிலையத்தை இடித்து அதனை மருத்துவமனை ஆக்கினார். அது ஏன் என்பது இப்போது தான் நமக்குப் புரிகிறது! அது அவருக்கு முன்னரே புரிந்துவிட்டது!

இப்போது மருத்துவமனை வீடாகிவிட்டது! அப்பல்லோவுக்கு தலைவலி, திருகுவலி எல்லாம் சேர்ந்து கொண்டது! அப்பல்லோவின் மருத்துவ 'பில்' கோடிகளுக்கு வரலாம்! அது ஒரு பிரச்சனை அல்ல! தமிழன் சாராயத்தைக் குடித்தே அரசாங்கத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறான்!  இப்போது தனது குடும்பம் அழிந்தாலும் பரவாயில்லை அம்மாவைக் காப்பாற்ற வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறான்! சாராயப்பணம் சரியான வழிகாட்டும் என நாமும் எதிர்பார்ப்போம்!

ஆனாலும் அம்மாவின் நிலைமை என்னவென்று இன்னும் நமக்குத் தெரியவில்லையே! தனது மேல் இருக்கும் ஊழல் குற்றச்சாட்டு ஒரளவு தணிந்த பின்னர் தான் அம்மாவின் உடல்நிலை சரியாகுமா? அதுவரை மருத்துவமனை தான் - அல்லது வீடாகக்கூட இருக்கலாம் - அவர் நிரந்தர ஓய்வில் இருப்பாரா? அவருடைய  உடல்நிலைமைக்கும் ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஏதும் தொடர்புகள் இருக்கின்றனவா என்பது போகப் போகத்தான் தெரியும்!

இப்படியெல்லாம் நினைப்பதற்கு நாம் காரணமல்ல. சசிகலா,  முதல்வரை தனது இரும்புப்பிடியில் வைத்திருக்கிறார் என்று சொல்லப்படுவதால் தான் இப்படியெல்லாம் நாம் நினைக்க வேண்டியிருக்கிறது! இதுவரை அவரை யாரும் பார்க்க சசிகலா அனுமதிக்கவில்லை! அப்படியென்றால்.......?

இப்போது நாம் கேட்பதெல்லாம்: அம்மா! நீங்கள் நலமா?


No comments:

Post a Comment