Tuesday 22 November 2016

நஜிப்: போராட்டம் போலியானது!


'பெர்சே' யின் இன்றைய (19.11.2016) ஐந்தாவது பேரணி போலியானது என தனது வலைப்பதிவில் வர்ணித்திருக்கிறார் பிரதமர் நஜிப்!

இதுவரை நடந்த  பேரணிகள் அனைத்தும்  எதிரணியினர் செய்த ஏற்பாடுகள் தான்!  மக்களால் தேர்ந்தெதெடுக்கப்பட்ட  ஓர் அரசை கவிழ்ப்பது தான் அவர்கள் நோக்கம் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

ஆனால் அவர் சொல்லும்: "மக்கள் அரசாங்கத்திடம் சேவையைத் தான் எதிர்பார்க்கிறார்கள்"  என்று சொல்லுவது தான் நமக்குக் கொஞ்சம் நெருடுகிறது!

பிரதமர் சேவை என்று எதனைக் குறிப்பிடுகிறார்?  விலைவாசிகள் எக்கச்சக்கமாக ஏறிவிட்டன. அரசாங்கம் எதனையும் கட்டப்படுத்த முடியும் என்னும் நிலையில் இல்லை என்று தான் சராசரி மனிதன் நினைக்கிறான்.

பெட்ரோல் விலை 15 காசு ஏற்றப்பட்டது சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது. இதனை ஒட்டி எல்லா விலைகளும் ஏறி விட்டன.

சமையல் எண்ணைய் விற்பனையில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று சும்மா அமைச்சர்கள் அறிக்கைவிட்டால் போதாது. உண்மையில் இப்போது எண்ணைய் கிடைக்கவில்லை என்பது தான் உண்மை! பிலாஸ்டிக் பைகளில் விற்கப்படும் விலை குறைவான எண்ணைய் இப்போது முற்றிலுமாகக் கிடைக்கவில்லை. எத்தனையோ ஏழைகள், நடுத்தரக் குடும்பங்கள் இந்தக் குறைந்த விலை சமையல் எண்ணையைத் தான் பயன் படுத்துகிறார்கள். உண்மையைச் சொன்னால் கடந்த ஐந்து, ஆறு மாதங்களாக இந்த எண்ணைய் முற்றிலுமாக கடைகளிலிருந்து அகற்றப்பட்டுவிட்டது!அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை!

இன்னொன்று குழந்தைகளின் பால் மாவு என்பது இன்னொரு முக்கியமான விஷயம். அதன் விலை கிடுகிடு என்று ஏறிக்கொண்டே போனால் குடும்பங்கள் எப்படி அதனைத் தாக்குப்பிடிக்க முடியும்?  விலை குறையும் என்னும் சாத்தியமே இல்லாமல் தலைதெறிக்க அதன் விலை ஏறிக்கோண்டிருக்கிறது! இதற்கு யார் பொறுப்பு?

அடுத்த மாதத்திலிருந்து சமையல் எரிவாயு (gas cylinder) விலை இன்னும் ஏழு வெள்ளி அதிகரிக்கப் போவாதாக இப்போது பேசுப்படுகிறது. கடைக்காரர்களே இதனைச் சொல்லுகிறார்கள். ஆக, அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும்! இதன் விலை ஏற்றம் இன்னும் அதிகமானப் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆனால் பிரதமர் நஜிப் அவர்கள் மக்கள் சேவையைத் தான் எதிர்பார்க்கிறார்கள் என்கிறார். அவர் எதனைச் சேவை என சொல்ல வருகிறார் என்பது நமக்கு இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது!

இப்படி விலை ஏற்றத்தை கண்டும் காணாதது போல் இருக்கும் பிரதமர் கொஞ்சம் மக்கள் பக்கம் திரும்பி தனது சேவையைச் சரியான வழியில் கண்காணித்து மக்களின் பிரச்சனைகளைக் கவனித்தால் நாம் அவரைப் போற்றலாம், புகழலாம்! 

பிரதமர் அவர்களே! உங்களிடம் நாங்கள் சேவையை எதிர்பார்க்கிறோம். சேவையில் போலி வேண்டாம்!

No comments:

Post a Comment