Sunday, 3 July 2016
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!
எந்த வல்லவனைப் பற்றி இந்தப் பழமொழி சொல்லப்பட்டது என்று எனக்குத் தெரியாது! ஆனால் எனக்குத் தெரிந்த இரண்டு வல்லவர்களைப் பற்றி இங்கு நான் சொல்லுகிறேன்.
ஒருவர் எனது நண்பர். பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். கொஞ்சம் வசதி குறைவானவர். அவரது மாமனார் குடும்பம் சுமார் நூறு மைலுக்கு அப்பால் இருந்தார்கள். அங்கு போய் வர வேண்டும் என்றால் அவருக்கு ஒரு நாள் வீணாகிவிடும். வாரத்தில் ஒரு நாள் தான் அவருக்கு விடுமுறை.
அவர் வேலை செய்த இடத்தில் ஒரு கார் அவர் கண்ணில் அகப்பட்டது. ஏறக்குறைய குப்பையில் போட்டுவிட்டார் அதன் உரிமையாளர். அதன் உரிமையாளரிடம் பேசி ஒரு இருநூறு வெள்ளிக்கு அந்தக்காரை வாங்கினார். பழைய சாமான் வாங்குபவர்கள் அவ்வளவு தான் அதனை மதிப்பீடு செய்திருந்தார்கள்! நண்பர் காரை வாங்கியதும் அதற்கு என்ன என்ன பொருள்கள் தேவையோ அவைகளைப் பழைய சாமான்கடைகளுக்குச் சென்று அனைத்தையும் வாங்கினார். ஒரு வாரத்தில் காரை ஓடுகின்ற நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டார்! அதன் பின்னர் வாரம் ஒருமுறை மாமனார் வீட்டிற்குப் போய் வந்துவிடுவார்! போகும் போதும் வரும் போதும் இடையில் நிறுத்தி கார் இஞ்சினைச் சுத்தப்படுத்துவார்! அதன் பின்னர் சுகப்பயணமே!
இன்னொரு நண்பர். ஒரு வெள்ளைக்காரன் காலத்துக் கார் வைத்திருந்தார்! அந்தக் காரை யாருக்கும் இயக்கவும் தெரியாது! பழுது அடைந்து விட்டால் அந்தக் காரை இங்கிலாந்துக்கு த் தான் அனுப்ப வேண்டும்! அப்படி ஒரு நிலைமை! அந்தக் காரில் அவர் குடும்பத்தோடு நாடு புராவும் சுற்றி வருவார்! ஒரு பிரச்சனை இல்லை! காரின் உள்ளே இங்கும் அங்குமாக சில டப்பாக்களை வைத்திருப்பார்! ஒவ்வொரு டப்பாவிலும் எதாவது 'சொட் சொட்' என்று எண்ணைய் ஊற்றிக் கொண்டிருக்கும்! கொஞ்சம் தூரம் சென்றதும் அந்த டப்பாக்களைச் சுத்தம் செய்துவிட்டு மீண்டும் பயணம் தொடரும்! அவர் இருக்கும் வரை அந்தக் கார் அவரோடு இருந்தது! அதன் பிறகு அது பழைய சாமான் வாங்குபவர்களிடம் அடைக்கலமாகி விட்டது!
என்னைக் கேட்டால் புல்லையும் ஆயுதமாகப் பயன்படுத்தவர்கள் இவர்கள் தான்! இதற்கெல்லாம் கொஞ்சம் "ஜி.டி.நாயுடு' மூளை வேண்டும். அவ்வளவு தான்!
இந்தத வல்லவர்களைப் பற்றி எழுதக் காரணம் நான் 17 ஆண்டுகளாகப் பயன்படுத்திய எனது புதிய கார் இப்போது குப்பைக் காராக மாறிப்போய் அதனையும் ஓர் இளைஞர் மலிவான விலையில் வாங்கி இப்போது பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்!
நம்மிடையே வல்லவர்களுக்கும் பஞ்சம் இல்லை! புற்களுக்கும் பஞ்சமில்லை!
Friday, 1 July 2016
தளரா மனம் வேண்டும்!
வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் தளரா மனம் வேண்டும்!
நமது வாழ்க்கைப் பாதையில் எத்தனையோ இடையூறுகள்; எத்தனையோ தடங்கள்கள்; எத்தனையோ போராட்டங்கள்! இவைகளையெல்லாம் தாண்டித் தான் நமது முன்னேற்றத்திற்கான பாதைகளை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். பாதை கரடுமுரடானது தான்! அதனால் என்ன? நாம் பின்வாங்கவா முடியும்! கன்னத்தில் கைவைத்துக் கொண்டு புலம்பிக் கொண்டா இருக்க முடியும்! அடுத்த காரியத்தைக் கவனிக்க வேண்டியது தான்!
எனக்குத் தெரிந்த ஒரு நண்பர். மின்னியல் துறையில் ஈடுபட்டிருப்பவர். எலக்டிரிகள் வேலைகள் செய்வதில் நல்ல திறமைசாலி. பெரும்பாலும் கடைகள், தொழிற்சாலைகளில் குத்தகை எடுத்துச் செய்பவர். ஒரு முறை தொழிற்சாலை ஒன்றிலிருந்து அவருக்குப் பெரியதொரு வாய்ப்புக் கிடைத்தது. அதுவரையில் அவ்வளவு பெரிய தொகைக்கு யாரும் அவருக்குக் குத்தகைக் கொடுத்ததில்லை. தன்னிடம் உள்ள பணம் பற்றாமல் வெளியே உள்ளவர்களிடம் கடன் வாங்கி அந்த வேலையை முடித்துக் கொடுத்தார். அவர் சில லட்சங்களை அங்குப் போட்டிருந்தார். அவருக்குக் கிடைக்க வேண்டிய பணம் கைக்கு வரும் முன்னரே அந்தத் தொழிற்சாலை தீடீரென மூடப்பட்டு விட்டது. நண்பர் இங்கும் அங்கும் ஓடினார். ஒன்றும் ஆகவில்லை! வங்கியில் தனது நிலையை எடுத்துச் சொன்னார். வங்கியில் அவருக்கு நல்லதொரு ஆலோசனைக் கிடைத்தது. அவர் செய்து வருகின்ற வேலைகள் அனைத்தின் பணமும் நேரடியாக வங்கிக்குச் சென்று அங்கிருந்து அவருடைய கடன்காரர்களுக்குச் செலுத்தப்பட்டது. கடன் கட்டி முடிக்கப்பட்டது.
நண்பரிடம் உழைப்பு இருந்தது. நாணயம் இருந்தது.தொழிலைத் தொடர வேண்டும் என்னும் ஆர்வம் இருந்தது. வேறு என்ன தேவை? நண்பர் இன்று நல்ல நிலையில் இருக்கிறார். அவர் மனம் தளரவில்லை! நம்பிக்கை தளரவில்லை. மனம் சோர்ந்து போகவில்லை.
நாம் ஒவ்வொருவருக்கும் அந்தத் தளரா மனம் வேண்டும். அனைத்தையும் இழந்தாலும் 'நான் அத்தனையையும் மீண்டும் பெறுவேன்' என்னும் நம்பிக்கை வேண்டும். இறை நம்பிக்கை.நம்மீதே நமக்கு நம்பிக்கை.இந்த உலகத்தின் மீது நம்பிக்கை. .அனைத்தும் கூடிவர நமக்குத் தளரா மனம் வேண்டும்!
தளரா மனத்துடன் வாழ்வோம்! வெற்றி பெறுவோம்!
அப்பாடா! அடையாள அட்டை கிடைத்தது!
நமது நாட்டில் அடையாள அட்டைக் கிடைப்பது என்பது சாதாராண விஷயம் அல்ல!
இந்த நாட்டிலேயே பிறந்து, வளர்ந்து பேரன், பேர்த்திகள் எடுத்தவர்கள் கூட கடைசிவரை அடையாள அட்டை இல்லாமலேயே பலர் இறந்து போனார்கள்! அந்த அளவுக்குக் கடினமான நடைமுறைகள் நடப்பில் உள்ளன.
இப்போது ஒரு பள்ளி மாணவிக்கு அடையாள அட்டைக் கிடைத்திருப்பது அவருக்கு நல்ல காலம் என்றே தோன்றுகிறது. தனது 12-ம் வயதிலிருந்து முயற்சி செய்து இப்போது தனது 18-வது வயதில் அவருக்கு அடையாள அட்டைக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்போது வெளியான எஸ்..பி.எம். தேர்வில் 10ஏ க்கள் பெற்றிருப்பதில் அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
அந்த மாணவியின் பெயர் .வோங் நெய் சின். சீனத் தம்பதியினரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட ஒரு இந்தியப் பெண். அவரின் இந்தியப் பெற்றோர்கள் பிறந்த ஒரு மாதத்திலேயே அவர்களிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு போனவர்கள் போனவர்கள்தான்! குழந்தையின் பிறப்பிதழ் இல்லாத நிலையில் பலவித போரட்டங்களுக்குப் பிறகு இப்போது தான் அவர்களுக்கு ஒரு தீர்வு பிறந்திருக்கிறது! வாழ்த்துகள்!
இந்த நேரத்தில் ஒன்றை நினைத்துப் பார்க்கிறேன். தமிழ் நாட்டில் பிறந்து ஒரு மாதத்தில் மலேசியாவுக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு குழந்தை - அடையாள அட்டைக்காக - எத்தனையோ ஆண்டுகள் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. காரணம் தேசிய மொழியில் தேர்ச்சி பெறவில்லையாம். அந்தப் பெண் பள்ளிப்படிப்பை முடித்து, பல்கலைக்கழகம் போய் பட்டமும் பெற்று வந்துவிட்டார். ஒரு மாதக் குழந்தையாய் எப்போது வந்தாரோ அதிலிரிந்து வெளி நாடுகளுக்கு - ஏன் அருகிலிருக்கும் சிங்கபூருக்குக் கூட - அவரால் போக முடியவில்லை. அதனைக் காரணமாக வைத்து தனக்குக் குடியுரிமை கொடுக்கமாட்டார்களோ என்பதனால் அவர் வெளி நாடுகளுக்குப் போவதைத் தவிர்த்தார். பட்டதாரியானப் பின்னரும் அவருக்கு வேலை கிடைப்பதில் சிக்கல். ஆனாலும் அதன் பின்னர் தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக அவர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அதன் பின்னரே பல முயற்சிகளுக்குப் பின் அவருக்குக் குடியுரிமைக் கொடுக்கப்பபட்டது எனத் தெரிந்து கொண்டேன்.
குடியுரிமை, அடையாள அட்டை என்பதெல்லாம் இந்தியர்களுக்குச் சாதாரண விஷயமல்ல. அதனால் எச்சரிக்கையாய் இருங்கள்!
வோங் நெய் சின்னுக்கு மீண்டும் நமது வாழ்த்துகள்!
Subscribe to:
Posts (Atom)