Sunday 3 July 2016

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!


எந்த வல்லவனைப் பற்றி இந்தப் பழமொழி சொல்லப்பட்டது என்று எனக்குத் தெரியாது! ஆனால் எனக்குத் தெரிந்த இரண்டு வல்லவர்களைப் பற்றி இங்கு நான் சொல்லுகிறேன்.

ஒருவர் எனது நண்பர். பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். கொஞ்சம் வசதி குறைவானவர். அவரது மாமனார் குடும்பம் சுமார் நூறு மைலுக்கு அப்பால் இருந்தார்கள். அங்கு போய் வர வேண்டும் என்றால் அவருக்கு ஒரு நாள் வீணாகிவிடும். வாரத்தில் ஒரு நாள் தான் அவருக்கு விடுமுறை.

அவர் வேலை செய்த இடத்தில் ஒரு கார் அவர் கண்ணில் அகப்பட்டது. ஏறக்குறைய குப்பையில் போட்டுவிட்டார் அதன் உரிமையாளர். அதன் உரிமையாளரிடம் பேசி ஒரு இருநூறு வெள்ளிக்கு அந்தக்காரை வாங்கினார். பழைய சாமான் வாங்குபவர்கள் அவ்வளவு தான் அதனை மதிப்பீடு செய்திருந்தார்கள்! நண்பர் காரை வாங்கியதும் அதற்கு என்ன என்ன பொருள்கள் தேவையோ அவைகளைப் பழைய சாமான்கடைகளுக்குச் சென்று அனைத்தையும் வாங்கினார். ஒரு வாரத்தில் காரை ஓடுகின்ற நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டார்! அதன் பின்னர் வாரம் ஒருமுறை மாமனார் வீட்டிற்குப் போய் வந்துவிடுவார்! போகும் போதும் வரும் போதும் இடையில் நிறுத்தி கார் இஞ்சினைச் சுத்தப்படுத்துவார்! அதன் பின்னர் சுகப்பயணமே!

இன்னொரு நண்பர். ஒரு வெள்ளைக்காரன் காலத்துக் கார் வைத்திருந்தார்! அந்தக் காரை யாருக்கும் இயக்கவும் தெரியாது! பழுது அடைந்து விட்டால் அந்தக் காரை இங்கிலாந்துக்கு த் தான் அனுப்ப வேண்டும்! அப்படி ஒரு நிலைமை! அந்தக் காரில் அவர் குடும்பத்தோடு நாடு புராவும் சுற்றி வருவார்! ஒரு பிரச்சனை இல்லை! காரின் உள்ளே இங்கும் அங்குமாக சில டப்பாக்களை வைத்திருப்பார்! ஒவ்வொரு டப்பாவிலும் எதாவது  'சொட் சொட்' என்று எண்ணைய் ஊற்றிக் கொண்டிருக்கும்! கொஞ்சம் தூரம் சென்றதும் அந்த டப்பாக்களைச் சுத்தம் செய்துவிட்டு மீண்டும் பயணம் தொடரும்! அவர் இருக்கும் வரை அந்தக் கார் அவரோடு இருந்தது! அதன் பிறகு அது பழைய சாமான் வாங்குபவர்களிடம் அடைக்கலமாகி விட்டது!

என்னைக் கேட்டால் புல்லையும் ஆயுதமாகப் பயன்படுத்தவர்கள் இவர்கள் தான்! இதற்கெல்லாம் கொஞ்சம் "ஜி.டி.நாயுடு' மூளை வேண்டும். அவ்வளவு தான்!

இந்தத வல்லவர்களைப் பற்றி எழுதக் காரணம் நான்  17 ஆண்டுகளாகப் பயன்படுத்திய எனது புதிய கார் இப்போது குப்பைக் காராக மாறிப்போய் அதனையும் ஓர் இளைஞர் மலிவான விலையில் வாங்கி இப்போது பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்!

நம்மிடையே வல்லவர்களுக்கும் பஞ்சம் இல்லை! புற்களுக்கும் பஞ்சமில்லை!

1 comment:

  1. the original story is from Ramayan..how grass blade became a weapon in the hands of Rama.great Sanskrit poem/sloka...used to ragg/tease juniors at IIT in my days.

    ReplyDelete