Friday, 1 July 2016
தளரா மனம் வேண்டும்!
வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் தளரா மனம் வேண்டும்!
நமது வாழ்க்கைப் பாதையில் எத்தனையோ இடையூறுகள்; எத்தனையோ தடங்கள்கள்; எத்தனையோ போராட்டங்கள்! இவைகளையெல்லாம் தாண்டித் தான் நமது முன்னேற்றத்திற்கான பாதைகளை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். பாதை கரடுமுரடானது தான்! அதனால் என்ன? நாம் பின்வாங்கவா முடியும்! கன்னத்தில் கைவைத்துக் கொண்டு புலம்பிக் கொண்டா இருக்க முடியும்! அடுத்த காரியத்தைக் கவனிக்க வேண்டியது தான்!
எனக்குத் தெரிந்த ஒரு நண்பர். மின்னியல் துறையில் ஈடுபட்டிருப்பவர். எலக்டிரிகள் வேலைகள் செய்வதில் நல்ல திறமைசாலி. பெரும்பாலும் கடைகள், தொழிற்சாலைகளில் குத்தகை எடுத்துச் செய்பவர். ஒரு முறை தொழிற்சாலை ஒன்றிலிருந்து அவருக்குப் பெரியதொரு வாய்ப்புக் கிடைத்தது. அதுவரையில் அவ்வளவு பெரிய தொகைக்கு யாரும் அவருக்குக் குத்தகைக் கொடுத்ததில்லை. தன்னிடம் உள்ள பணம் பற்றாமல் வெளியே உள்ளவர்களிடம் கடன் வாங்கி அந்த வேலையை முடித்துக் கொடுத்தார். அவர் சில லட்சங்களை அங்குப் போட்டிருந்தார். அவருக்குக் கிடைக்க வேண்டிய பணம் கைக்கு வரும் முன்னரே அந்தத் தொழிற்சாலை தீடீரென மூடப்பட்டு விட்டது. நண்பர் இங்கும் அங்கும் ஓடினார். ஒன்றும் ஆகவில்லை! வங்கியில் தனது நிலையை எடுத்துச் சொன்னார். வங்கியில் அவருக்கு நல்லதொரு ஆலோசனைக் கிடைத்தது. அவர் செய்து வருகின்ற வேலைகள் அனைத்தின் பணமும் நேரடியாக வங்கிக்குச் சென்று அங்கிருந்து அவருடைய கடன்காரர்களுக்குச் செலுத்தப்பட்டது. கடன் கட்டி முடிக்கப்பட்டது.
நண்பரிடம் உழைப்பு இருந்தது. நாணயம் இருந்தது.தொழிலைத் தொடர வேண்டும் என்னும் ஆர்வம் இருந்தது. வேறு என்ன தேவை? நண்பர் இன்று நல்ல நிலையில் இருக்கிறார். அவர் மனம் தளரவில்லை! நம்பிக்கை தளரவில்லை. மனம் சோர்ந்து போகவில்லை.
நாம் ஒவ்வொருவருக்கும் அந்தத் தளரா மனம் வேண்டும். அனைத்தையும் இழந்தாலும் 'நான் அத்தனையையும் மீண்டும் பெறுவேன்' என்னும் நம்பிக்கை வேண்டும். இறை நம்பிக்கை.நம்மீதே நமக்கு நம்பிக்கை.இந்த உலகத்தின் மீது நம்பிக்கை. .அனைத்தும் கூடிவர நமக்குத் தளரா மனம் வேண்டும்!
தளரா மனத்துடன் வாழ்வோம்! வெற்றி பெறுவோம்!
Labels:
கோடிஸ்வரர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
winners dont quit..Quitters dont win.
ReplyDelete