Friday, 6 January 2017

எலிகளின் அட்டகாசம்..இங்கேயுமா...?


ஆபத்து, அவசரம் என்றால் எங்கே போவோம்? அதுவும் இரவு நேரத்தில்..? நமக்கு தெரிந்தது எல்லாம்'செவன்  இலவன்' கடைகள் தாம். இருபத்து நான்கு மணி நேர சேவை தரும் இந்தக் கடைகள் நாடெங்கிலும் பரந்தும் விரிந்தும் மக்களுக்குத் தேவையான - ஆபத்துக்கும், தேவைக்கும் உதவி வருகின்றன.

அவர்களின் சேவைகளை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. அந்த இரவு வேலைகளில் வேறு எங்கும் கிடைக்காதப் பொருள்கள் - குறிப்பாக உணவுப் பொருள்கள் - அங்கு தான் கிடைக்கின்றன. அவர்கள் தருகின்ற சேவைகளில் நாம் பெருமைப் படுகிறோம்.

ஆனாலும் இப்போது வலைத் தளங்கலில் பரபரப்பாகப் பரவிக் கொண்டிருக்கும் ஒரு செய்தி நம்மைத் திகைக்க வைக்கிறது.  7-Elevan என்றாலே சுத்தத்திற்குப் பேர் போனது. அதன் சுத்தமும், பொருள்கள் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் நேர்த்தியும், அதன் குளு குளு சுற்றமும் ஒரு நிமிடம் நம்மை கிரங்கடித்து விடும்!


இந்த நிலையில் செவன் இலவனில் இப்படி எலியாரும் வருகையாளர்களில் ஒருவர் என்றால் நம்மால் ஜீரணிக்க முடியவில்லை தான். அதுவும் நாம் சாப்பிடுகின்ற உணவுப் பொருள்களை எலியாரும் சாப்பிடுகிறார் என்றால் .... கொஞ்சம் மனதுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கிறது!

இதைவிட நம்மை அஞ்ச வைப்பது  எலி கழிக்கும் சிறுநீர் தான். அது சாப்பிட்டுப் போட்டதை  நாம் சாப்பிடுவது நல்லதல்ல. அதுவே விஷம் தான். ஆனால் சிறுநீர் என்றால் அது மரணத்தைச் சம்பவிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் இது ஏதோ அரிதான ஒரு நிகழ்ச்சி என்கிறார்கள் அந்த நிறுவனத்தார்.  நம்மால் எதையும் நம்ப முடியவில்லை. அந்த வலைப்பதிவாளர் இதனைப்படம் பிடித்துப் போடவில்லை என்றால் இது வெளியே வந்திருக்காது. இந்த பாமா (எலி) விஜயம் தொடர்கதையாகத்தான் இருந்திருக்கும்!

"ஒன்னுமே புரியலே உலகத்திலே!" என்று நாமும் சந்திரபாபு மாதிரி பாடிக்கொண்டு,  தலையை ஆட்டிக் கொண்டே போக வேண்டியது தான்! எத்தனை சட்டங்களைக் கொண்டு வந்தாலும் ஒரு சிலரைத் திருத்த முடியாது என்பார்கள்.

கிளானா ஜெயாவில் உள்ள இந்த 7-Eleven னும் ஒன்று! திருந்தாத ஜென்மங்கள் இருந்து என்ன லாபம்?


Wednesday, 4 January 2017

கேள்வி - பதில் (41)


கேள்வி

சசிகலாவிற்கு அடிமட்டத்தில் எதிர்ப்புக்கள் காணப்படுகிறதே! இதனை அவர் எப்படி சமாளிக்கப்போகிறார்?

பதில்

ஆமாம்! பல இடங்களில் அ.தி.மு.க. தொண்டர்கள் அவருடைய சுவரொட்டிகளைக் கிழித்து போடுவதாக செய்திகள் வருகின்றன.

ஆனால் சசிகலாவிற்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையே அல்ல. முதல்வர் பன்னீர்செல்வமே அடங்கிப்போனார் என்றால் இந்தத் தொண்டர்கள் எம்மாத்திரம்? 

காவல்துறை அவர் பக்கம். அவர் சொல்லுவதை அப்படியே அவர்கள் நிறைவேற்றுவார்கள். அத்தோடு மட்டுமா? மன்னார்குடி என்பது அவருடைய ரௌடிக்கும்பல். மதுரையில் எப்படி ஒர் அஞ்சாநெஞ்சரோ அதே போல தமிழ் நாட்டுக்கு மன்னார்குடி ஓர் அஞ்சாநெஞ்சர்!

சசிகலாவிற்கு எந்தப் பிரச்சனைகள் வந்தாலும் அந்தப் பிரச்சனைகளைச் சமாளிக்கும் திறன் இந்த மன்னார்குடி கும்பலுக்கு உண்டு.

அடிமட்டத்தில் எங்கிருந்து எதிர்ப்பு வருகிறது என்று முதலில் ஆராய்வார்கள். பின்னர் அங்குள்ள வட்டம், மாவட்டம் அனைத்தையும் அலசுவார்கள். முதலில் பணத்தைக் கொடுத்து சரி பண்ண முயலுவார்கள். அதாவது சின்னம்மா தான் அம்மாவின் வாரிசு என்று அவர்களுக்கு ஓர் அழுத்தத்தைக் கொடுப்பார்கள். அடுத்த தேர்தலில் அவர்களுக்கும் ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்று பேரம் பேசுவார்கள்.

ஏற்றுக் கொண்டால் தொண்டனுக்கு நல்ல காலம். அந்த நல்ல செய்தியோடு பணமும் கிடைக்கும். ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அத்தோடு அவனது அரசியல் எதிர்காலம் ஒன்றுமில்லாமல் போகும்!

சசிகலா ஜெயலலிதா வழி வந்தவர்.  முப்பாதாண்டுகள் அவரோடு இருந்தவர். ஆக, கடைசிவரை அவருக்குக் கை கொடுத்தது அராஜகம் தான். அதனை அவர் எப்படியெல்லாம் கையாண்டார் என்பது சசிகலா நன்கு அறிந்தவர். ஆனால் அதே அராஜகம் கடைசியில் அவர் உயிருக்கே ஆபத்தாக அமைந்தது! வாள் எடுத்தவன் வாளால் சாவான் என்பார்கள்! அது தான் அவருக்கு நடந்தது!

சசிகலாவால் எல்லாப் பிரச்சனைகளையும் சமாளிக்க முடியும். ஆனால் வழி நேர்மையாக இருக்காது! அவருடைய வழி என்பது அராஜகம் தான்!

Sunday, 1 January 2017

இனிய புத்தாண்டே வருக!


அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

பிறந்துவிட்டது புத்தாண்டு! இந்தப் புத்தாண்டை இன்னொரு புதிய ஆண்டாக எடுத்துக் கொண்டு காலத்தை வீணடிக்காதீர்கள்.

இந்த ஆண்டை உங்களுக்குச் சாதனை ஆண்டாக மாற்றி அமையுங்கள். என்ன தான் சாதனை?

நீங்கள் நினைத்தவை நடந்தேற வேண்டும். உங்கள் திட்டங்கள் நிறைவேற வேண்டும். புத்தாண்டில் பல தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்று உறுதிமொழி எடுத்திருப்பீர்கள். பல என்று இல்லாவிட்டாலும் சிலவாவது இருக்க வேண்டும். அந்தச் சிலவற்றில் மிகவும் முக்கியம் என்று நீங்கள் எதனை நினைக்கிறீர்களோ குறிப்பாக அதனையாவது நிறைவேற்ற முயற்சி எடுங்கள்.

பலவற்றை கையில் வைத்துக் கொண்டு எதனைச் செயல்படுத்தலாம் என்று நேரத்தை வீணடிப்பதைவிட ஒன்றை கையில் வைத்துக் கொண்டு அதனை நிறைவேற்ற முழு மூச்சோடும், முழு வீச்சோடும் செயல்படுங்கள்.

அப்படியே இரண்டு மூன்று திட்டங்களை இவ்வாண்டு அவசியம் நிறைவேற்ற வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் ஒவ்வொரு திட்டத்துக்கும் எத்தனை மாதங்கள் தேவை என்று அதற்குத் தேவையான மாதங்களை ஒதுக்கி உங்களது திட்டங்களை நிறைவேற்ற முயலுங்கள்.

நீங்கள் நினைக்கும் திட்டங்களை மனதில் அடக்கி வைத்துக் கொண்டு 'இதோ, அதோ' என்று மனத்தை அலைய விடாதீர்கள்.

இன்றே அதற்கான முயற்சிகளில் ஈடுபட ஆரம்பித்து விடுங்கள்> ஒவ்வொரு நாளும் உங்கள் திட்டம் நிறைவேற என்ன செய்திருக்கிறீர்கள் என்று படுக்கைக்குப் போகும் முன்னர் எழுதி வையுங்கள். சும்மா மனதிலேயே போட்டு கணக்குப் பண்ணி வைத்திருந்தால் கணக்குத் தவறாகப் போகும்! எழுதி வையுங்கள். எழுதி வைத்தால் எத்துணைத் தூரம் கடந்திருக்கிறீர்கள் என்று ஒரு  தெளிவு கிடைக்கும். படிப்படியாக ஒரு முன்னேற்றம் தெரியும். அந்த முன்னேற்றம் தான் நமக்கு உற்சாகத்தைதைக் கொடுக்கும்.

சென்ற ஆண்டு எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் நமது கணக்கைத் தவறாகப் போட்டிருப்போம்.. அதனை இந்த ஆண்டு சரி படுத்துவோம்.

முடிந்து போனவைகளைப் பற்றி புலம்ப வேண்டாம். நடந்தால் நல்லது. நடக்காவிட்டால் அதனைவிட நல்லது என்னும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.சென்ற ஆண்டின் தவறுகளை இந்த ஆண்டு திருத்த முயற்சிப்போம்.

நாம் நமது காரியங்களைச் செய்வதற்கு யார் யாரையோ எதிர்பார்த்து ஏமாற வேண்டாம். நமது முயற்சிகளைச் செய்து கொண்டு போகும் போது மற்றவர்கள் உதவி தன்னால் வரும் என்பது  தான் பிறரின் அனுபவம்.

நல்லதை எடுத்துக் கொள்ளுவோம். நல்லதைச் செய்வோம். நல்லதையே நினைப்போம். இந்த ஆண்டிலும் நல்லதே நடக்கும்!