Tuesday, 3 July 2018

புதிய அமைச்சரவை சரியா...?


பிரதமர் டாக்டர் மகாதிர் முழுமையான அமைச்சரவையை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார். புதிய அமைச்சர்கள் பதவியேற்றிருக்கின்றனர்.  ஒரு வேளை துணை அமைச்சர்கள் இன்னும் இருக்கலாம். 

இப்போது புதிதாக பதவி ஏற்றிருக்கும் அமைச்சர்களைப் பற்றியும் இன்னும் ஒரு சிலருக்கு பதவி கிடைக்காதது பற்றியும் வெளியே எதிரொலிகள் எப்படி இருக்கின்றன?

குறிப்பாக ஜ.செ.க. வும், பி.கே.ஆரும் தங்களது அதிருப்தியைத்  தெரிவித்திருக்கின்றன.  நாடாளுமன்றத்தில் பி.கே.ஆர். அதிகமானத் தொகுதிகளை வைத்திருக்கும் கட்சி. அதனை அடுத்து ஜ.செ.கட்சி அதிகமான தொகுதிகளைக் கொண்டிருக்கின்றது. ஆனால் இந்த இரு கட்சிகளுமே  அமைச்சரைவையில் தங்களது கட்சிகளுக்குக்  குறைவான இடமே ஒதுக்கப்பட்டிருப்பதாக குறைபட்டுக் கொள்கின்றன! 

ஆனாலும் ஒன்றை நாம் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும். இது பிரதமர் எடுத்த முடிவு. அதுவும் தீர்க்க ஆராய்ந்த பின்னர் எடுக்கப்பட்ட முடிவு. அதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வெறும் நிகழ்காலத்துக்கான ஒரு முடிவாக நாம் இதனைக் கருதக் கூடாது. இது ஒரு நீண்ட காலத்துக்கான ஒரு திட்டம். அப்படித்தான் அது இருக்க வேண்டும் என்று பிரதமர் கருதுகிறார். அதில் தவறு இருப்பதாக நினைக்கத் தேவை இல்லை.

ஜனநாயக செயல் கட்சி எப்போதுமே இன அடிப்படையில் சிந்திக்கின்ற ஒரு கட்சி. அது அப்படித்தான் வளர்க்கப்பட்டிருக்கிறது!  அமைச்சரவையில் அதிகமான சீனர்களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என அவர்கள் நினைப்பதில் தவறு இல்லை. காரணம் அவர்களின் வாக்கு வங்கி என்பது எப்போதுமே சீனர்களின் பக்கமிருந்து தான் அதிகம்!  அவர்கள் மலேசியர்கள் என்று சொன்னாலும் அது சீனர்களைத்தான் குறிக்கும்!

டாக்டர் மகாதிர் மலாய் பிரதிநிதித்துவம் அதிகம் இருக்க வேண்டும் என நினைப்பவர். அதற்குக் காரணங்கள் உண்டு. வருங்காலங்களில் அம்னோ, பாஸ் கட்சியினரின் குறை கூறல்களைத் தவிர்க்க வேண்டும் அன அவர் நினைக்கலாம். மேலும் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அனைவரும் திறைமையானவர்கள் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

அமைச்சரவை  சிறப்பாகச் செயல்பட வாழ்த்துவோம்!

இரண்டு இலட்சம் பேருக்கு குடியுரிமை...!


மிகவும் நல்லதொரு செய்தியை உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகைதின் யாசின் அறிவித்துள்ளார். நீண்ட நாள் எதிர்பார்க்கப்பட்ட ஒரு செய்தி. பாரிசான் அரசாங்கமும், ம.இ.கா.வும் அக்கறை காட்டவில்லை1 இன்றைய பக்காத்தான் அரசாங்கம் ஏற்கனவே அவர்களது தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி அதனைச் செயல் வடிவில் கொண்டு வந்து விட்டார்கள்.

வரவேற்கிறோம்! இதனை ஒரு சாதாரண செய்தியாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது. எத்தனை ஆண்டுகள்,  எத்தனை ஆண்டுகள் நம் மக்கள் இதற்காகக் காத்திருந்தனர். ஒன்றா, இரண்டா. .. முப்பது, நாற்பது ஆண்டுகள் இழுக்கடிக்கப்பட்டு ஒரு சிலருக்கு அறுபது  வயதில்,  ஒரு சிலருக்கு எழுபது  வயதில் .....என்ன என்ன கொடுமைகள்..... வேலை கிடைக்காமல்.......குறைவான ஊதியத்தில்..... முதலாளி என்ன சொன்னலும் ஆமாஞ்சாமி போட்டுக்கொண்டு ... சே! என்ன வாழ்க்கை!  ஆனால் இவர்களுடைய ஆத்திரம், கோபம், வேதனை - எதனையுமே ஆட்சியிலிருந்தவர்கள் கண்டு கொள்ளவில்லையே! நம்மைப் பொருத்தவரை நாம் இன்னும் குற்றவாளி ம.இ.கா. தான் என்று அடித்துச் சொல்லுகின்ற நிலைமையில் தான் இருக்கிறோம்! காரணம் பதவியில் இருந்தவன் தனக்குப் பெண்டாட்டிகளையும், பங்களாக்களையும் தான் கூட்டிக் கொண்டு போனானே தவிர களத்தில் இறங்கி வேலை செய்யத் தயாராய் இல்லை!

நிரந்திர அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த சிவப்பு அடையாள அட்டைகள் வைத்திருக்கும் மலேசியர்களுக்கு இப்போது நீல  நிற அடையாள அட்டைகள் கிடைக்கும் என நம்பிக்கையான செய்தி மனதை குளிர வைக்கிறது.

இன்னும் குடியுரிமை கிடைக்காத மலேசியர் பலருக்கு குடியுரிமை கிடைக்கும் என்னும் நம்பிக்கையும் ஏற்பட்டிருக்கிறது. 

நூறு  நாள்களில் இந்தப் பிரச்சனைகளைக் களைவோம் என்னும் தேர்தல் வாக்குறுதி நிச்சயமாக நடக்கும் என நம்புகிறோம். இந்தப் பிரச்சனைக்கு முற்றிலுமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். உள் நாட்டில் பிறந்தவனை நாடற்றவன் என்று கேலி செய்வதை இனி மேலும் நாம் சகித்துக் கொண்டிருக்க முடியாது.

டான்ஸ்ரீ மொகைதீனின் இந்த அறிவிப்பை மனமார வரவேற்கிறோம்! வாழ்த்துகள்!

Monday, 2 July 2018

எங்கே போகிறது அம்னோ...?


நடந்து முடிந்த அம்னோ தேர்தலில் அகமட் ஸாகிட் ஹமிடி தனது இடைக்கால அம்னோ தலைவர் என்கிற நிலையிலிருந்து அம்னோவின் நிரந்திர தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரது பதவி காலம் அடுத்த அம்னோ தேர்தல் வரை  அதாவது 2021 ஆண்டு தேர்தல் வரை நீடிக்கும்.

ஓர் ஆச்சரியமான உண்மை. அம்னோ பேராளர்கள் ஏன் ஸாகிட்டை தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும்? உண்மையைச் சொன்னால் அவர்களுக்கு எப்படி  ஸாகிட்  மேல் அன்பும்  பாசமும் தீடீரெனத்  தோன்றியது?

தேர்தலில்  போட்டியிட்டவர்களில் கைரியும், துங்கு ரசாலியும்  அடங்குவர். இதில் துங்கு ரசாலி மட்டுமே  எந்த  ஊழலிலும் சம்பந்தப்படாதவர் என்று  தாராளமாகச்  சொல்லலாம். அவர்  மட்டுமே  நேர்மையான மனிதர் என்று பலராலும் பாராட்டப்பட்டவர். அம்னோவை ஓரு நேர்மையானக் கட்சியாக,  ஊழற்றக் கட்சியாக அது மீண்டும் ஆட்சியில்  அமர வேண்டும் என்று  கனவு கண்டவர். உண்மையான அம்னோவின் விசுவாசி. ஆனாலும்  துங்கு ரசாலி அம்னோ பேராளர்களால் புறந்தள்ளப்பட்டார்!

ஒன்றை நாம் புரிந்து கொள்ளலாம். அம்னோவுக்கு மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும்  என்னும் நோக்கம் இருப்பதாகத்  தெரியவில்லை. அம்னோவை பிரதமர் டாக்டர் மகாதிர் எத்தனையோ முறை ஊழலில் ஊறிய கட்சி, மலாய்க்காரர்களை ஏமாற்றும் கட்சி என்று  தொடர்ந்து சாடி வந்திருக்கிறார்.  ஆனால் அம்னோ பேராளர்களுக்கு எதுவுமே உறைக்கவில்லை!

இந்த அம்னோ தேர்தலிலும் ஸாகிட் தனது குரு, நஜிப்பிடமிருந்து கற்றுக் கொண்டதை அப்படியே பயன் படுத்தியிருக்கிறார்! ஆமாம் அது பண அரசியல் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்! ஸாகிட் தனது வெற்றிக்காக பேராளார்களுக்குத்  தண்ணிராக செலவு செய்திருக்கிறார் எனச் சொல்லப்படுகிறது. ஆமாம்,  அரசாங்கத்தை இழந்து ஒரு கட்சிக்காக அவர் ஏன் பணத்தை இழக்க வேண்டும்?

என்ன தான் ஆட்சியை இழந்தாலும் அந்தக் கட்சியில் பணம் இன்னும் வலுவாகவே இருக்கிறது என்பதை பேராளர்கள் புரிந்துவைத்திருக்கிறார்கள். சொத்துக்கள் நிறையவே இருக்கின்றன. பேராளர்கள்  பணத்தின் மீதும் அதன் சொத்துக்கள் மீதம்  கண் வைத்திருக்கிறார்கள் என்பது புரிகிறது! அவைகளை  விட்டுவிட்டு வேறு  எங்கும் அவர்கள் ஓடிப்  போகத்  தயாராக இல்லை!

ஸாகிட்  நேர்மையான மனிதர் இல்லை  என்பது பலருக்குத்  தெரியும். பண அரசியலை அவரால் விட முடியாது.   குறைந்த பட்சம் அம்னோ சொத்துக்கள்  மீது அவரது  ஆதிக்கம் இருக்கும் என நம்பலாம். அவரோடு பங்கு போட இப்போது  பலர் அவருக்குத் துணையாக  இருக்கிறார்கள்! அது அவரது பலம்!

அம்னோவின்  பாதை சரியானதாக  இல்லை! தவறான மனிதர்களால் அது வழி நடத்திச் செல்லப்படுகிறது! ஆட்சியைப் பிடிக்க  வேண்டும்  என்னும்  எதிர்பார்ப்பு  இல்லை!

பொறுத்திருப்போம்! வேறு வழி இல்லை!