Monday 2 July 2018

எங்கே போகிறது அம்னோ...?


நடந்து முடிந்த அம்னோ தேர்தலில் அகமட் ஸாகிட் ஹமிடி தனது இடைக்கால அம்னோ தலைவர் என்கிற நிலையிலிருந்து அம்னோவின் நிரந்திர தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரது பதவி காலம் அடுத்த அம்னோ தேர்தல் வரை  அதாவது 2021 ஆண்டு தேர்தல் வரை நீடிக்கும்.

ஓர் ஆச்சரியமான உண்மை. அம்னோ பேராளர்கள் ஏன் ஸாகிட்டை தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும்? உண்மையைச் சொன்னால் அவர்களுக்கு எப்படி  ஸாகிட்  மேல் அன்பும்  பாசமும் தீடீரெனத்  தோன்றியது?

தேர்தலில்  போட்டியிட்டவர்களில் கைரியும், துங்கு ரசாலியும்  அடங்குவர். இதில் துங்கு ரசாலி மட்டுமே  எந்த  ஊழலிலும் சம்பந்தப்படாதவர் என்று  தாராளமாகச்  சொல்லலாம். அவர்  மட்டுமே  நேர்மையான மனிதர் என்று பலராலும் பாராட்டப்பட்டவர். அம்னோவை ஓரு நேர்மையானக் கட்சியாக,  ஊழற்றக் கட்சியாக அது மீண்டும் ஆட்சியில்  அமர வேண்டும் என்று  கனவு கண்டவர். உண்மையான அம்னோவின் விசுவாசி. ஆனாலும்  துங்கு ரசாலி அம்னோ பேராளர்களால் புறந்தள்ளப்பட்டார்!

ஒன்றை நாம் புரிந்து கொள்ளலாம். அம்னோவுக்கு மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும்  என்னும் நோக்கம் இருப்பதாகத்  தெரியவில்லை. அம்னோவை பிரதமர் டாக்டர் மகாதிர் எத்தனையோ முறை ஊழலில் ஊறிய கட்சி, மலாய்க்காரர்களை ஏமாற்றும் கட்சி என்று  தொடர்ந்து சாடி வந்திருக்கிறார்.  ஆனால் அம்னோ பேராளர்களுக்கு எதுவுமே உறைக்கவில்லை!

இந்த அம்னோ தேர்தலிலும் ஸாகிட் தனது குரு, நஜிப்பிடமிருந்து கற்றுக் கொண்டதை அப்படியே பயன் படுத்தியிருக்கிறார்! ஆமாம் அது பண அரசியல் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்! ஸாகிட் தனது வெற்றிக்காக பேராளார்களுக்குத்  தண்ணிராக செலவு செய்திருக்கிறார் எனச் சொல்லப்படுகிறது. ஆமாம்,  அரசாங்கத்தை இழந்து ஒரு கட்சிக்காக அவர் ஏன் பணத்தை இழக்க வேண்டும்?

என்ன தான் ஆட்சியை இழந்தாலும் அந்தக் கட்சியில் பணம் இன்னும் வலுவாகவே இருக்கிறது என்பதை பேராளர்கள் புரிந்துவைத்திருக்கிறார்கள். சொத்துக்கள் நிறையவே இருக்கின்றன. பேராளர்கள்  பணத்தின் மீதும் அதன் சொத்துக்கள் மீதம்  கண் வைத்திருக்கிறார்கள் என்பது புரிகிறது! அவைகளை  விட்டுவிட்டு வேறு  எங்கும் அவர்கள் ஓடிப்  போகத்  தயாராக இல்லை!

ஸாகிட்  நேர்மையான மனிதர் இல்லை  என்பது பலருக்குத்  தெரியும். பண அரசியலை அவரால் விட முடியாது.   குறைந்த பட்சம் அம்னோ சொத்துக்கள்  மீது அவரது  ஆதிக்கம் இருக்கும் என நம்பலாம். அவரோடு பங்கு போட இப்போது  பலர் அவருக்குத் துணையாக  இருக்கிறார்கள்! அது அவரது பலம்!

அம்னோவின்  பாதை சரியானதாக  இல்லை! தவறான மனிதர்களால் அது வழி நடத்திச் செல்லப்படுகிறது! ஆட்சியைப் பிடிக்க  வேண்டும்  என்னும்  எதிர்பார்ப்பு  இல்லை!

பொறுத்திருப்போம்! வேறு வழி இல்லை!



 

No comments:

Post a Comment