Sunday, 5 August 2018

குழந்தை திருமணங்கள்...

பால்ய  திருமணங்களுக்கான காரணங்கள் பல. பெரும்பாலும் அவை பொருளாதாரச் சம்பந்தப்பட்டவை.  

நமது நாட்டிலும் இந்தத் திருமணங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன என்று அறியும் போது கேட்பதற்கு வேதனையைத் தருகிறது.

சமீபத்தில்  வெளி உலகிற்கு தெரிய வந்த திருமணம் என்றால் - 11 வயது சிறுமி  41 வயது ஆடவர்  -செய்த  ஒரு திருமணம். இதனைத் திருமணம் என்று சொல்லலாமா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. இது சில்மிஷம் அல்லவா?

இந்தியர்களிடையே  இது போன்ற திருமணங்கள் நடைபெறுவதில்லை. ஆனாலும் நடைபெறுவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இவைகள் பெற்றோர்களால் பார்த்துச் செய்யப்படுகின்ற திருமணங்கள் அல்ல. பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே "ஓடிப்போய்" நடக்கின்ற திருமணங்கள்!

இப்போது,  இது போன்ற பால்ய திருமணங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்பதாக ஆங்காங்கே எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியிருக்கின்றன.  ஆனாலும் பக்காத்தான் அரசாங்கம் சரியான முடிவை எடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது! 

இதில் தடுமாற என்ன இருக்கிறது? பதினோரு வயது சிறுமியைத் திருமணம் செய்து கொள்ளுவது என்பது ஒரு பாலியல் கொடுமை. அது தொடர வேண்டுமா என்பது தான் கேள்வி.  அந்தச் சிறுமி படிக்க வேண்டிய வயதில் இருப்பவள்.  ஓடி ஆடி விளையாடுகின்ற வயது. சின்ன சின்ன சந்தோஷங்களை அனுபவிக்க வேண்டிய வயது. சிரித்து, மகிழ்ந்து சிறுவர், சிறுமியரோடு விளையாடும் வயதினள். இந்த வயதில்  "திருமணம்" என்று சொல்லி அவளைக் கட்டிப் போடுவது மிகவும் கொடுமை.

அரசாங்கம் மௌனம் சாதிப்பதை விட்டுவிட்டு உடனடியாக இதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும். சட்டம் இயற்ற வேண்டும்.  இது போன்ற திருமணங்களைத் தடை செய்ய வேண்டும். இதற்கெல்லாம் மத சாயம் பூசுவது மிகத் தவறு.

எந்த நாட்டிலும் இல்லாத அதிசயங்கள் நமது நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றன. 

குழந்தை திருமணங்கள் வேண்டாம்! தடை செய்க!

நமது பெற்றோர்கள் பணக்காரர்கள் அல்ல...!

முதலில் இதனை - முக்கியமான ஒன்றை - நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்தியப் பெற்றோர்கள் பணக்காரர்கள் அல்ல. ஒரு சிலர் பணக்காரராக இருக்கலாம். ஒரு  சிலர்  - மேல்தட்டு நடுத்தர குடும்பங்களாக இருக்கலாம்.  இவர்களால் தனியார் கல்லூரிகளில், தனியார் பல்கலைக்கழகங்களில்  பிள்ளைகளைப் படிக்க வைக்கக் கூடிய ஆற்றல் உள்ளவர்களாக இருக்கலாம்.

ஆனால் பெரும்பாலான இந்திய குடும்பங்கள் அப்படி ஆற்றல் உள்ளவர்களாக இல்லை என்பது நிதர்சனம்.  

மாணவர்கள் ஏழ்மை நிலையில் உள்ள பெற்றோர்களை "தனியார் கல்லூரிகள்  தான்  படிப்பேன்" என்று அடம் பிடித்து அவர்கள் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்த பணத்தை கல்வியின் பெயரால் காசைப் பாழாக்குவதை பரவலாக நாம் பார்க்கிறோம்.  இவர்கள் இப்படி அடம் பிடிப்பதற்குக் காரணம் அவர்கள் பள்ளி நண்பர்கள் எங்கு படிக்கிறார்களோ அங்கு தான் நானும் படிப்பேன் என்று ஏதோ ஒரு "ஆட்டு மந்தைப்" புத்தி இவர்களிடம் உள்ளது.

உயர் கல்வி என்பது மிகவும் நல்ல விஷயம்.  பள்ளி நண்பர்கள் என்னும் போது எல்லாமே ஏதோ ஒரு தமாஷான விஷயமாக மாறிவிடுகிறது! கல்வியில் கவனம் செலுத்தினால் பாராட்டலாம். ஆனால் அவர்கள் அப்படி செய்வதில்லை என்பது தான் வருத்தத்திற்கு உரியது. காரணம் இந்தத் தனியார் பள்ளிகளில் பெரும்பாலும் இந்திய மாணவர்களாகவே இருக்கின்றனர். கல்வி ஏதோ "ஜாலி" என்கிற நிலைமைக்குப் போய்விடுகிறது.

அதுவே அரசாங்கக் கல்லூரியாக இருந்தால் பல இன மாணவர்கள்.  பல  ஆயிரம் மாணவர்கள். கல்வியும் தரமான கல்வியாக இருக்கும். கல்விக்கான செலவும் குறையும். பெற்றோர்கள் தனியார் பள்ளிகளுக்கு இனி முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்பதே நமது வேண்டுகோள்.

அரசாங்கம் கல்வி பயில இந்திய மாணவர்களுக்கு உதவிகள் செய்கின்றன. அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இனி அரசாங்கம் கொடுப்பதில்லை என்கிற பேச்சுக்கே இடம் இல்லை.

மாணவர்களே! உங்கள் பெற்றோர்களைப் பணத்திற்காக கசக்கிப் பிழியாதீர்கள். ஆம்! தனியார் கல்லுரிகள் என்றாலே பெற்றோர்களுக்குப் பாரம் தான்.  

அரசாங்கக் கல்லூரிகள் என்றாலே குறைவான செலவு. தரமானக் கல்வி. வாழ்த்துகள்!

Friday, 3 August 2018

என்ன ஆனார்கள்...?

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன சிலர் -  ஒரு வகையில் சமயத் தொடர்பு உடையவர்கள் என்று சொல்லலாம் - அவர்கள் என்ன ஆனார்கள் என்று இதுவரையில்  தெரியவில்லை!

உடனடியாக நமது கண் முன்னால் நிற்பது இந்திரா காந்தியின் கடைசி மகள் பிரசன்னா திக்‌ஷா! அப்பனையும் காணோம்! மகளையும் காணோம்! காவல்துறையோ "உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்!" என்கிறார்கள்! காவல்துறை சொல்லுவதைத் பார்த்தால் இவர்கள் மலேசியாவில் தான் இருக்கிறார்களா என்கிற சந்தேகமே எழுகிறது!  பிரசன்னாவின் தந்தை பத்மநாபன் எங்கு இருக்கிறார் என்கிற விபரமே காவல் துறைக்குத் தெரியவில்லையாம்! அவர் எங்காவது பிச்சை எடுக்கட்டும் பரவாயில்லை. ஆனால் மகளைக் காப்பாற்றும் பொறுப்பு அவருக்கு இருக்க வேண்டுமே! மகளைப் பள்ளிக்கு அனுப்பும் பொறுப்பும் அவருக்க இருக்க வேண்டுமே! இது ஒரு சமய மாற்றம் என்பதால் காவல்துறையால் கண்டு பிடிக்க முடியவில்லை என்று தான் நமக்குத் தோன்றுகிறது!

ரேமண்ட் கோ, ஒரு கிறிஸ்துவ சமயப்போதகர். அவர் எல்லா மதத்தினருக்கும் - அவர்கள் ஏழைகள் என்றால் - உதவுபவர் என்று பலராலும் பாராட்டப்பெற்றவர். ஆனாலும் அவர் முஸ்லிம்களை மதம் மாற்றம் செய்கிறார் என்பதாகக் கூறி அவர் சார்ந்த அனைத்து இல்லங்களையும் சோதனை இட்டனர். அப்படி மாற்றம் செய்ததற்கான அடையாளங்கள் எதுவும்  இல்லை! அதன் பின்னரே அவர் கடத்தப்பட்டார்.  அதுவும்  இராணுவம் துணை கொண்டு அவர் கடத்தப்பட்டார் என்பதாக CCTV மூலம் நமக்குத் தெரியவருகிறது. அவரைப் பற்றியான தகவலும் இது வரை வந்தபாடில்லை. சமயம் சார்ந்த விஷயம் என்பதால் காவல்துறை இன்னும் தடுமாறிக் கொண்டிருக்கிறதாகவே நமக்குத் தோன்றுகிறது!

இதில்  அம்ரி சேமாட்  என்பவர்,பெர்லிஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர்,  மாறுபட்ட இஸ்லாமிய போதனைகளைப் போதிப்பவர் என்பதாகக் கூறி அவர் காவல்துறையைச் சார்ந்தவர்களாலேயே கடத்தப்பட்டார் என்பதாகச் சொல்லப்படுகிறது! காவல்துறை இன்னும் தடுமாறிக் கொண்டிருக்கிறது!

இதனிடையே ஜோஷுவா, ரூத் இருவரும் கணவர் மனைவியர், கிறிஸ்துவ சமயப்போதர்கள், திடீரென நவம்பர் மாதம் முப்பதாம் தேதி 2016  அன்று காணமற் போனார்கள். அதுவே அவர்களது கடைசி நாள்.  இருவரும் இஸ்லாமிய மதத்திலிருந்து கிறிஸ்துவ சமயத்தைத் தழுவியவ்ர்கள் என்று சொல்லப்படுகிறது. காவல்துறையின் தடுமாற்றம் நமக்குப் புரிகிறது!

இவை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் சமயம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள். அதனால் தான் காவல்துறையின் தடுமாற்றம்! ஆனாலும் தவறு என்றால் தண்டனை தரலாம். கடத்திக் கொண்டு போக யாருக்கும் உரிமையில்லை.

இவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்கும் என எதிர்பார்ப்போம்! அதுவரை பொறுத்துத் தான் ஆக வேண்டும்!