Sunday 5 August 2018

நமது பெற்றோர்கள் பணக்காரர்கள் அல்ல...!

முதலில் இதனை - முக்கியமான ஒன்றை - நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்தியப் பெற்றோர்கள் பணக்காரர்கள் அல்ல. ஒரு சிலர் பணக்காரராக இருக்கலாம். ஒரு  சிலர்  - மேல்தட்டு நடுத்தர குடும்பங்களாக இருக்கலாம்.  இவர்களால் தனியார் கல்லூரிகளில், தனியார் பல்கலைக்கழகங்களில்  பிள்ளைகளைப் படிக்க வைக்கக் கூடிய ஆற்றல் உள்ளவர்களாக இருக்கலாம்.

ஆனால் பெரும்பாலான இந்திய குடும்பங்கள் அப்படி ஆற்றல் உள்ளவர்களாக இல்லை என்பது நிதர்சனம்.  

மாணவர்கள் ஏழ்மை நிலையில் உள்ள பெற்றோர்களை "தனியார் கல்லூரிகள்  தான்  படிப்பேன்" என்று அடம் பிடித்து அவர்கள் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்த பணத்தை கல்வியின் பெயரால் காசைப் பாழாக்குவதை பரவலாக நாம் பார்க்கிறோம்.  இவர்கள் இப்படி அடம் பிடிப்பதற்குக் காரணம் அவர்கள் பள்ளி நண்பர்கள் எங்கு படிக்கிறார்களோ அங்கு தான் நானும் படிப்பேன் என்று ஏதோ ஒரு "ஆட்டு மந்தைப்" புத்தி இவர்களிடம் உள்ளது.

உயர் கல்வி என்பது மிகவும் நல்ல விஷயம்.  பள்ளி நண்பர்கள் என்னும் போது எல்லாமே ஏதோ ஒரு தமாஷான விஷயமாக மாறிவிடுகிறது! கல்வியில் கவனம் செலுத்தினால் பாராட்டலாம். ஆனால் அவர்கள் அப்படி செய்வதில்லை என்பது தான் வருத்தத்திற்கு உரியது. காரணம் இந்தத் தனியார் பள்ளிகளில் பெரும்பாலும் இந்திய மாணவர்களாகவே இருக்கின்றனர். கல்வி ஏதோ "ஜாலி" என்கிற நிலைமைக்குப் போய்விடுகிறது.

அதுவே அரசாங்கக் கல்லூரியாக இருந்தால் பல இன மாணவர்கள்.  பல  ஆயிரம் மாணவர்கள். கல்வியும் தரமான கல்வியாக இருக்கும். கல்விக்கான செலவும் குறையும். பெற்றோர்கள் தனியார் பள்ளிகளுக்கு இனி முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்பதே நமது வேண்டுகோள்.

அரசாங்கம் கல்வி பயில இந்திய மாணவர்களுக்கு உதவிகள் செய்கின்றன. அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இனி அரசாங்கம் கொடுப்பதில்லை என்கிற பேச்சுக்கே இடம் இல்லை.

மாணவர்களே! உங்கள் பெற்றோர்களைப் பணத்திற்காக கசக்கிப் பிழியாதீர்கள். ஆம்! தனியார் கல்லுரிகள் என்றாலே பெற்றோர்களுக்குப் பாரம் தான்.  

அரசாங்கக் கல்லூரிகள் என்றாலே குறைவான செலவு. தரமானக் கல்வி. வாழ்த்துகள்!

No comments:

Post a Comment