Wednesday, 3 April 2019

காவல்துறை தான் காரணமா..?

மலேசிய மனித உரிமை ஆணையம் கடுமையான குற்றச்சாட்டை காவல்துறையின் மேல் சுமத்தியிருக்கிறது. 

இதைத் தான் வேலியே பயிரை மேய்கிறது என்பார்கள். மக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறை மக்களையே கடத்திச் செல்லுகின்ற நிலை ஏன் ஏற்படுகிறது என்பது ஆராய வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். 

கிறிஸ்துவ பாதிரியார் ரேமன் கோ மற்றும் அம்ரி சே மாட் இந்த இருவரையும் கடத்தியவர்கள் புக்கிட் அமான், சிறப்புப் பிரிவினரே  என்பதாக சுஹாக்காம்  ஆணையர் மா வெங் குவாய் குறிப்பிட்டிருக்கிறார். 

பாதிரியார் ரேமன் கோ கிறிஸ்துவ மதத்தைப் பரப்பினார் என்பதாக அவர் மீது உள்ள குற்றச்சாட்டு. அதனை அவருடைய குடும்பத்தினர் மறுத்திருக்கின்றனர். அம்ரி சே மாட் இஸ்லாமிய சமயத்தின் ஒரு பிரிவை ஆதரித்தார் என்பதாக அவர் மீது உள்ள ஒரு குற்றச்சாட்டு.  அதனையும் அவரின் குடும்பத்தினர் மறுத்திருக்கின்றனர்.

பொதுவாகவே இது போன்ற குற்றச் செயல்களை புக்கிட் அமான் செய்யாது என நாம் நம்பலாம். ஆனால் அவர்கள் செய்ததற்கான தூண்டுதல் எங்கிருந்தது வந்தது என்பது இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை.

அந்தக் காலக் கட்டத்தில்  உள்துறை  அமைச்சராக இருந்தவர் அகமது ஸாகிட் ஹாமிடி. அவர் தன்னிடமிருந்து புக்கிட் அமானுக்கு இந்த இருவரைப் பற்றியும் எந்த் ஒப்புதலையும் கொடுக்கவில்லை என்பதாகக் கூறியிருக்கிறார். இதில் கடந்த கால அரசாங்கமும் சம்பந்தப்படவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். 

அப்படி என்றால்  புகிட் அமான் தனது  விருப்பம்  போல செயல்படுகிறதா?  அப்படியெல்லாம் அவர்கள்  செயல்பட முடியாது. அவர்கள் செயல்படவும் மாட்டார்கள். அவர்களுக்கு  எங்கிருந்தோ  கட்டளைகள்  வருகின்றன.  கட்டளைகளைத்தான் அவர்கள் செயல்  படுத்துவார்கள்.  

இரண்டு கடத்தல் சம்பவங்களுமே  சமயம்  சம்பந்தப்பட்டவை.  காவல்துறைக்கும் சமயத்திற்கும்   என்ன சம்பந்தம்? ஆனால்  யாருக்கோ சம்பந்தம் இருக்கிறது. அவரகள் காவல்துறையைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.  அதுவும் மேலிடத்திலிருந்து!  அந்த "அவர்கள்" யார் என்பது  தான் நம் முன்னே உள்ளப் பிரச்சனை!

யார் காரணம் என்பது விரைவில்  தெரிய வரும்!

நேரடி ஒளிபரப்பு...!

நாட்டைக்  கொள்ளையடித்த குற்றத்திற்காக இன்று நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்!

பத்து ஆண்டுகளுக்கு முன்னர்  இதே தினத்தில் (3-4-2009)  அன்று பிரதமராக பதவியேற்ற நஜிப் இன்று அதே தினத்தில் குற்றவாளிக் கூண்டில் ஒர் ஊழல்வாதியாக கூண்டேற்றப் படுகிறார்! 

குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படும் முதல் மலேசியப் பிரதமர் என்கிற பெயரும் நஜிப்புக்குத் தான் கிடைத்திருக்கிறது!  ஊழலில் தந்தை என்றே அவரைக் குறிப்பிடலாம்!  அவர் மட்டும் ஊழல் செய்யவில்லை நாட்டில் உள்ள அரசாங்க வேலையாள்களையும்  ஊழல் செய்வதை அவர் அனுமதித்தார்! அதனால் தான் இன்று நாட்டில் எல்லா மட்டத்திலும் ஊழல் நீக்கமற நிறைந்துவிட்டது!   அவர் அரசாங்க  ஊழியர்களின் ஊழலை கண்டு கொள்ளாததற்கு அவர் செய்து வந்த ஊழல் தான் காரணம்!

இன்று அவர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகிறார். இந்த வழக்கை மக்கள் காணுமாறு தொலைக்காட்சியில் நேரடியாக  ஒளிபரப்புச்  செய்ய  வேண்டும்  என்பதாக  பலர் அபிப்பிராயப்படுகின்றனர். அதில் தவறில்லை என்றாலும் அது பற்றி நஜிப் என்ன சொல்லு,கிறார்? 


"தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்வதை நான் விரும்புகிறேன்" என்கிறார்  நஜிப்!  இதன் மூலம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப் பார்க்கிறார் அவர். எப்படி? நேரடி ஒளிபரப்பு என்பது நடக்காது என்பது நமக்கே தெரிந்திருக்கும் போது  நாட்டின் பிரதமராக பத்து ஆண்டுகள் பதவி வகித்த அவருக்குத் தெரியாதா? தெரியும்!  ஆனால் தான் குற்றமற்றவர் என்பதை இதன் மூலம் அவர் சொல்லிக் காட்ட விரும்புகிறார்!  எனக்கும் ஒன்றும் பயமில்லை! நான் ஒன்றும் குற்றம் செய்யவில்லை! நேரடியாக ஒளிபரப்புங்கள்! மக்கள் முடிவு செய்யட்டும்! இது தான் ஆரம்பத்திலிருந்தே அவர் சொல்லி வருகின்ற தாரகமந்திரம்!

நஜிப்பின் நிலைமையில் அவர் அப்படித் தான் பேசியாக வேண்டும்!  தலைக்கு மேலே வெள்ளம் வந்த பிறகு சாண் போனால் என்ன முழம் போனால் என்ன  என்னும் நிலைமையில், தான் அவர் இருக்கிறார்!  அவருடைய பேச்சில் ஒரு குற்றவாளியின் அம்சங்கள் அனைத்தும் இருக்கின்றன.  வெளியே வீரம் உள்ளே நடுக்கம். இது தான் அவரின் இன்றைய நிலை.

எது எப்படி இருப்பினும் மக்களின் ஆசை நிறைவேறாது. தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு என்பது நடக்காது. நமது ஆசையில் மண்!  நஜிப்புக்கு வெளியே வீரனாக காட்டிக் கொள்ள ஓர் அரிய சந்தப்பம்!

Monday, 1 April 2019

கேள்வி - பதில் (96)

கேள்வி
வருகிற இந்தியத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் நிலைமை எப்படி இருக்கும்?

பதில்

பொதுவாக தமிழ் நாட்டை எடுத்துக் கொண்டால் நாம் தமிழர் கட்சிக்கு எந்த செல்வாக்கும் கிடைக்கக் கூடாது என்பதில் பலர் அக்கறை காட்டுகின்றனர். அவர்களில் அரசியல்வாதிகள் முன்னணியிலும் பத்திரிக்கை ஊடகங்கள் அனைத்தும் நாம் தமிழர் கட்சிக்கு எதிராகவும் இருக்கின்றனர்.  அவர்கள் எதிராக இருக்கக் காரணம் அவர்கள் தமிழர்கள் இல்லை. ஊடகங்களும் தமிழர்களால் நடத்தப்படவில்லை. தமிழர்கள் என்றாலே அச்சம் கொள்கின்றனர்!

நாம் தமிழர் கட்சி பொது மக்களின் பார்வைக்குக் கொண்டு செல்லுவதில் இணையத் தளங்கள் தான் பெரும் பங்காற்றுகின்றன!  தமிழர்களுக்கு இந்த வழியை விட்டால் வேறு வழியில்லை. சொந்த நாட்டிலேயே அடிமைகளைப் போல வாழ வேண்டிய ஓரு சூழல் தமிழர்களுக்கு ஏற்பட்டுவிட்டது!

தேர்தலை எடுத்துக் கொண்டால் நாம் தமிழர் கட்சிக்கு  ஏற்ற  சூழல் இன்னும் உருவகவில்லை என்றே தோன்றுகிறது. 

நூறு விழுக்காடு  வாக்களிப்பு  வேண்டும் என்று ஆங்காங்கே விழிப்புணர்வை  பள்ளி மாணவர்கள் , பொது  இயக்கங்கள் மக்களுக்கு  ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.  அதே  சமயத்தில்  இலஞ்சம்  இல்லா  தேர்தல்  வேண்டும்  என்று  அவர்கள்  சொல்லவில்லை.  அப்படி   என்றால்  இலஞ்சத்தை  அவர்கள்  ஆதரிப்பதாகவே  எண்ணத்  தோன்றுகிறது!

இலஞ்சம் வேண்டும், நூறு விழுக்காடு வாக்களிப்பு  வேண்டும் என்பது   திராவிடக் கட்சிகளுக்கு  இலாபம்!

நாம் தமிழர் கட்சி  வெற்றி  பெற  ஒரே  வழி தான் உண்டு.  இலஞ்சம்  இல்லா தேர்தல் வேண்டும். அது ஒன்று போதும் அவர்கள் வெற்றி பெற. அவர்களுடைய வேட்பாளர்கள்  மிகத் தகுதி  வாய்ந்த  வேட்பாளர்கள்.  அவர்கள்  குண்டர் கும்பல்களின் தலைவர்கள் இல்லை!  மற்ற கட்சிகளை எடுத்துக்  கொண்டால்  ரௌடிகள்,  கொலைகாரர்கள்,     கொள்ளையடித்தவர்கள், ஜெயிலுக்குப் போய்விட்டு வந்தவர்கள் தான் முன்னணியில் இருக்கின்றனர்!

இலஞ்சம் இல்லா தேர்தல் வரும் வரை நாம் தமிழர் கட்சி பொறுத்திருக்க  வேண்டும். அந்த நாள் வரும்.  

அது வரை காத்திருப்போம்!