Wednesday 3 April 2019

காவல்துறை தான் காரணமா..?

மலேசிய மனித உரிமை ஆணையம் கடுமையான குற்றச்சாட்டை காவல்துறையின் மேல் சுமத்தியிருக்கிறது. 

இதைத் தான் வேலியே பயிரை மேய்கிறது என்பார்கள். மக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறை மக்களையே கடத்திச் செல்லுகின்ற நிலை ஏன் ஏற்படுகிறது என்பது ஆராய வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். 

கிறிஸ்துவ பாதிரியார் ரேமன் கோ மற்றும் அம்ரி சே மாட் இந்த இருவரையும் கடத்தியவர்கள் புக்கிட் அமான், சிறப்புப் பிரிவினரே  என்பதாக சுஹாக்காம்  ஆணையர் மா வெங் குவாய் குறிப்பிட்டிருக்கிறார். 

பாதிரியார் ரேமன் கோ கிறிஸ்துவ மதத்தைப் பரப்பினார் என்பதாக அவர் மீது உள்ள குற்றச்சாட்டு. அதனை அவருடைய குடும்பத்தினர் மறுத்திருக்கின்றனர். அம்ரி சே மாட் இஸ்லாமிய சமயத்தின் ஒரு பிரிவை ஆதரித்தார் என்பதாக அவர் மீது உள்ள ஒரு குற்றச்சாட்டு.  அதனையும் அவரின் குடும்பத்தினர் மறுத்திருக்கின்றனர்.

பொதுவாகவே இது போன்ற குற்றச் செயல்களை புக்கிட் அமான் செய்யாது என நாம் நம்பலாம். ஆனால் அவர்கள் செய்ததற்கான தூண்டுதல் எங்கிருந்தது வந்தது என்பது இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை.

அந்தக் காலக் கட்டத்தில்  உள்துறை  அமைச்சராக இருந்தவர் அகமது ஸாகிட் ஹாமிடி. அவர் தன்னிடமிருந்து புக்கிட் அமானுக்கு இந்த இருவரைப் பற்றியும் எந்த் ஒப்புதலையும் கொடுக்கவில்லை என்பதாகக் கூறியிருக்கிறார். இதில் கடந்த கால அரசாங்கமும் சம்பந்தப்படவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். 

அப்படி என்றால்  புகிட் அமான் தனது  விருப்பம்  போல செயல்படுகிறதா?  அப்படியெல்லாம் அவர்கள்  செயல்பட முடியாது. அவர்கள் செயல்படவும் மாட்டார்கள். அவர்களுக்கு  எங்கிருந்தோ  கட்டளைகள்  வருகின்றன.  கட்டளைகளைத்தான் அவர்கள் செயல்  படுத்துவார்கள்.  

இரண்டு கடத்தல் சம்பவங்களுமே  சமயம்  சம்பந்தப்பட்டவை.  காவல்துறைக்கும் சமயத்திற்கும்   என்ன சம்பந்தம்? ஆனால்  யாருக்கோ சம்பந்தம் இருக்கிறது. அவரகள் காவல்துறையைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.  அதுவும் மேலிடத்திலிருந்து!  அந்த "அவர்கள்" யார் என்பது  தான் நம் முன்னே உள்ளப் பிரச்சனை!

யார் காரணம் என்பது விரைவில்  தெரிய வரும்!

No comments:

Post a Comment