Sunday, 5 July 2020

டாக்டர் மகாதிரை இனி நாம் நம்பலமா?

முன்னாள் பிரதமர் மகாதிரை மக்கள் இன்னும் நம்புகிறார்களா?

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவரின் செல்வாக்கு என்பது இன்னும் ஓரிரு சிறிய அளவிலான வயதானவர்களிடம் இருக்கத்தான் செய்கிறது என்பதில் சந்தேகமில்லை. 

அவருடைய 22 ஆண்டு கால ஆட்சியின் போது தகுதி இல்லாதவர்களை எல்லால் தூக்கிவிட்டவர்களில் பலர் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களுடைய ஆதரவு இருக்கத்தான் செய்யும்.

ஆனால் இந்தியர்களைப் பொறுத்தவரை இந்திய சமுதாயம் எந்தப் பயனையும் பெறவில்லை. அவருக்கு ம.இ.கா. தலைவர்கள் உடந்தையாக இருந்து தங்களைத் தாங்களே வளர்த்துக் கொண்டார்கள்!

14-வது பொதுத் தேர்தல் நடந்த போது, முன்னாள் பிரதமர் என்னும் வகையில்,  டாக்டர் மகாதிருக்குப் பெரும் அளவில் அவருக்கு ஆதரவுக் கொடுத்தார்கள் என்பது உண்மை தான். காரணம் நஜிப் பிரதமராக இருந்த காலத்தில் நாட்டில் ஊழல் என்பது கட்டுக்கு அடங்கமால் போனது அனைத்து மக்களும், ஒவ்வொரு மலேசியனும். அறிந்த உண்மை!

அந்த நேரத்தில் தான் டாக்டர் மகாதிரின் ஆதரவு எதிர்கட்சியினருக்குத் தேவையாக இருந்தது. அவர் வயதானவர், ஆற்றலுள்ளவர், பேச்சுத் திறன் மிக்கவர் என்கிற வகையில் தான் அவரை எதிர்க்கட்சியினர் பயன்படுத்திக் கொண்டனர். அவர் திறமைசாலி என்பது அனைவரும் அறிந்தது தான்.

ஆனால் பதவிக்கு வந்த பின்னர், மீண்டும் பிரதமராக வந்த பின்னர், அவர் தனது பழைய பாணி அரசியலையே பின்பற்றத் தொடங்கினார் என்பது தான் சோகம்.  அதனால் யாருக்கும் பயன் இல்லாமல் போய்விட்டது. அவர்கள் சாதிக்க வேண்டும் என்று நினைத்த எதனையும் அவர்களால் சாதிக்க இயலவில்லை! 

கடைசியில் அனைத்தையும் பாழாக்கிவிட்டர் டாகடர் மகாதிர். இப்போது இதனை வயது கோளாறு என்று சொல்லலாமா? அது மட்டும் அல்ல. இனி அவருக்கு அரசியல் இலாயக்கில்லை என்கிற நிலைமையும் ஏற்பட்டு விட்டது!  இனி அவரை நம்புகிற மாதிரி ஒன்றும் இல்லை. 

இப்போது மக்களிடையே ஏதோ கோமாளி போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டார்! இனி அவர் அரசியல் கோமாளி என்று தாரளாமாகச் சொல்லலாம்!

டாக்டர் மகாதிர் அவர்களுக்கு இனி அரசியலில் எதிர்காலமில்லை. கிடைத்த வாய்ப்பையும் இழந்து விட்டார். 

இனி மலேசிய அரசியலில் அவரால் பேச முடிந்ததெல்லாம் இனப் பிரச்சனை மட்டும் தான்.  சீனர்கள் பணக்காரர்கள் என்று சொல்லலாம். அதைத் தவிர பேச அவருக்கு ஒன்றுமில்லை!

டாக்டர் மகாதிருக்கு வயதாகி விட்டது. நாம் நம்பும்படியாக அவர் என்றுமே நடந்து கொண்டதும் இல்ல! இனி நம்ப அவரிடம் ஒன்றுமில்லை!

Saturday, 4 July 2020

எனது இரங்கல்கள்


நான் கலைத்துறையைச் சேர்ந்தவன் அல்ல என்பதை முதலிலேயே  சொல்லிவிடுகிறேன்.

  நமது நாட்டில் கலையை வளர்த்தவர்கள் பலர் உண்டு. அவர்கள் மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் எப்போதும் உண்டு.

காரணம் நமது கலைகளை வளர்ப்பதில் அவர்கள் தான் தூணாக விளங்குகின்றனர். 

கடைசியாக நமது கலைஞர்கள் வரிசையில் நடிகர் காந்திநாதன் தனது 72-ம் வயதில் இயற்கை எய்தினார் என அறிந்து வருத்தமடைகிறேன். அவர் உடல் நலக் குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக "வணக்கம் மலேசியா" இணையதளம் கூறுகிறது.

அவர் நடித்த ஓரிரு படங்களை பார்த்திருக்கிறேன் என்பதைத் தவிர மற்றபடி அவரைப் பற்றி நான் எதுவும் அறிந்திருக்கவில்லை.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார்?


இன்றைய பிரதமர் முகைதீன் யாசின்,  கூட்டணிக் கட்சிகளிடையே ஏற்பட்ட குளறுபடியில் பிரதமராக வந்தவர்!

அவர் பிரதமராக வருவார் என்று யாரும் நினைத்துப் பார்த்ததுக் கூட இல்லை! எல்லாக் காலங்களிலும் அவர்  - பிரதமர் பதவிக்கு வர முடியாதபடி - ஒதுக்கியே வைக்கப்பட்டிருந்தவர்.  அப்போதெல்லாம் சொல்லப்பட்ட காரணங்கள அவருக்கு ஆங்கிலம் சரளமாக வராது என்பது தான்!  ஏதோ உள் நோக்கம் இருந்திருக்கலாம்.  அவர் ஓரு பட்டதாரி. அது எப்படி ஆங்கிலம் வராமல் போகும்? 

ஆனாலும் அவர் பிரதமர் ஆனார். அவர் அடுத்த தேர்தல் வரை பிரதமராகத் தொடர்வதற்கு வாய்ப்புக்கள் நன்றாகவே இருக்கின்றது. எதிர்ப்பவர்கள் இப்போதைக்கு யாருமில்லை!

அது சரி. அடுத்த 15-வது பொதுத் தேர்தல் வரும்போது அவர் நிலை என்னவாகும்? 

இப்போதைக்கு அவரைப் பிரதமர் வேட்பாளாராக அம்னோவும், பாஸ் கட்சியும் ஆதரவு தெரிவிக்கின்றன. 

இதனைக் கூட ஒரு தற்காலிக ஏற்பாடு என்று சொல்லலாம்.  அது ஒரு சரியான ஏற்பாடு என்று சொல்லுவதற்கில்லை. அவரைப் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லி அம்னோவும் பாஸ் கட்சியும் கூடி கும்மியடிப்பார்களே தவிர, மற்றபடி இந்த ஏற்பாடு எந்த நன்மையும் முகைதீனுக்குக் கொண்டு வரப் போவதில்லை! 

பாஸ் கட்சி அமைச்சரைவையில் தனது நிலையை மேம்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்களே தவிர  அவர்கள் கீழே இறங்கி வர மாட்டார்கள்! மத்திய ஆட்சியில் தங்களது பங்கு அதிகமாகவே இருக்க வேண்டும் என்பது தான் அவர்களது குறிக்கோளாகவே இருக்கும்!

அம்னோ கட்சியினரோ பிரதமர் பதவிக்குத் தான் வரிந்து கட்டிக்கொண்டு நிற்பார்களே தவிர அதனை விட்டுக் கொடுப்பதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்!  தனது நீண்ட பாரம்பரியத்தை அம்னோவால் விட்டுக் கொடுக்க முடியாது.  மற்றவர்களுக்கு விட்டுக் கொடுப்பதை அவர்கள் அவமானமாகக் கருதக் கூடியவர்கள்!

இப்போது, உடனடியாக,  ஆட்சி கலைக்கப்பட வேண்டும் என்பது தான் அம்னோவின் திட்டம்.   அதற்காக ஒரு தற்காலிக ஏற்பாடாக "அதை ஏற்றுக் கொள்ளுகிறோம்! இதை ஏற்றுக் கொள்ளுகிறோம்!" என்பதையெல்லாம் அவர்கள் பேசி வருகிறார்கள். 

ஆட்சி கலைந்த பின்னர், அடுத்த தேர்தல் வரும் என்று உறுதிப்படுத்திவிட்டால், இந்தக் கூட்டம் முற்றிலுமாக தன்னை மாற்றிக்  கொள்ளும்!  அதில் சந்தேகமில்லை!

அடுத்த பொதுத் தேர்தலில் யார் பிரதமர் வேட்பாளாராக இருக்கக் கூடும்?  ஒரு பக்கம் அன்வார் இப்ராகிம் அதில் எந்த மாற்றமும் இல்லை.  ஆனால் ஆளுங்கட்சி சார்பில்? 

ஆளுங்கட்சி அரசியலில் இன்னும் தெளிவில்லை! இன்னும் குழப்பம் நீடிக்கிறது!