Wednesday, 3 February 2021

ம.இ.கா. வை வாழ்த்துகிறோம்!

     

                            பனிச்சறுக்கு இளம்  வீராங்கனை ஸ்ரீ அபிராமி சந்திரன்

நமது நாட்டை பெருமையுறச் செய்யும் இளம் பனிச்சறுக்கு வீராங்கனை ஸ்ரீஅபிராமி சந்திரனுக்கு ம.இ.கா. கை கொடுத்திருக்கிறது.  ம.இ.கா. வை வாழ்த்துகிறோம்!

உடனடி உதவியாக ரிங்கிட் 20,000 வெள்ளி நிதியுதவியை  அளித்திருக்கிறது.  அது மட்டும் அல்லாமல் இனி வரும் எட்டாண்டு காலத்திற்கு அவருக்குத் தேவையான நிதி ஏற்பாடுகளையும் ம.இ.கா.  செய்திருப்பதாக "வணக்கம் மலேசியா"   இணையதளம் கூறுகிறது. அத்தோடு விசா ஏற்பாடுகளையும் அவருக்கும் அவரது பெற்றோர்களுக்கும்  ம.இ.கா. செய்திருப்பதாக அந்த செய்தித் தளம் கூறுகிறது. 

அபிராமியின் தந்தை சந்திரன் தனது மகளின் பனிச்சறுக்குப் போட்டிக்காக பல தியாகங்கள் செய்து அவரை உலக அளவில் வீராங்கனையாகக் கொண்டு வர பல முயற்சிகள் எடுத்து வருகிறார்.

உண்மையைச் சொன்னால் நமது நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சு அவருக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்திருக்க வேண்டும்.  ஆனால் அவர்கள் ஏன் செய்யவில்லை என்பதற்கு அவர்களுக்கு நிறைய காரணங்கள் உண்டு.  ஏன் அவர்கள் செய்ய வேண்டும் என்பதற்கு நமக்கும் நிறைய காரணங்கள் உண்டு.

ஆனால் யார் செய்தாலும், வருகிற 2024 ஆண்டு, தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால  ஒலிம்பிக் போட்டியில் அவர் வெற்றி பெற்றால் பெருமை என்னவோ அது மலேசியாவுக்குத் தான்.

இந்த நேரத்தில் நாம் அந்தக் குழந்தை, ஸ்ரீஅபிராமியைப் பாராட்டுகிறோம்.  அவரைப் புரிந்து கொண்ட அவரது தந்தை சந்திரனை வெகுவாகப் பாராட்டுகிறோம். 

மீண்டும் மீண்டும் நாம் சொல்ல வருவதெல்லாம்:  பெற்றோரின் அரவணைப்பு இருந்தால் எந்தக் குழந்தையாலும் சாதனைகள் புரிய முடியும். மாற்றுக் கருத்து இல்லை.

இந்த நேரத்தில் ம.இ.கா.வையும் மனதாரப் பாராட்டுகிறோம்! வாழ்த்துகள்!

 

Tuesday, 2 February 2021

என்ன ஜென்மமடா, இவர்!

 ஜாகிர் நாயக் பற்றி பேசும் போதெல்லாம் நமக்கு ஏனோ பற்றிக் கொண்டு வருகிறது!  அப்படி ஒரு தனிப்பிறவி அவர்!

ஒரு சமய அறிஞரின் பணி என்ன என்பதை மிகவும் வித்தியாசமான முறையில் செயல்படுத்துவது தான் அவரைப் பற்றியான குற்றச்சாட்டு!

மக்களிடையே ஒற்றுமை, சமாதானம் போன்றவைகளை மறந்து பயங்கரவாதம்,  வன்மம் இவற்றை விதைப்பது தான் அவருடைய சமயப்பணி! இதைத்தான் மக்கள் வெறுக்கிறார்கள்.

நமது மலேசிய நாட்டில் தஞ்சம் அடைந்திருக்கும் அவருக்கு இங்கு வந்தும் அவருடைய வன்மம் தீர்ந்த பாடில்லை. பயங்கரவாதம் அவர் இரத்தத்தில் ஊறி விட்டதால் அதனை மாற்றிக் கொள்ள இயலவில்லை!

ஜாகிர் நாயக் ஓர் இஸ்லாமிய அறிஞர் என்கிறார்கள். மலேசியாவில் உள்ளவர்கள் அவரைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்கள்! அறிஞர்கள் இங்கு இலாததால் அவர் இஸ்லாமிய உலகின் விடிவெள்ளியாக பார்க்கப்படுகிறார்! இது தான் நமது நாட்டின் கோணம்!

ஆனால் இப்படிப்பட்ட மாபெரும் அறிஞரான இவரை இஸ்லாமிய நாடுகள்  அனைத்தும்  ஏன் புறக்கணிக்கின்றன என்பது தான்  மாபெரும் புதிர்! இஸ்லாமிய நாடுகளான வங்காளதேசம், பாக்கிஸ்தான், இரான், காத்தார், சௌதி அரேபியா  போன்ற நாடுகள் இவரை ஏற்றுக்கொள்ளவில்லை!  ஒரு வேளை அங்கு இவரைவிட சிறந்த மார்க்க அறிஞர்கள் இருக்கலாம். இன்னொன்று பயங்கரவாதத்தை அவர்கள் ஊக்குவிக்கவில்லை என்பதாகவும் இருக்கலாம்!

அப்படியென்றால் மலேசியா பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றதா என்றால் அப்படியும் இல்லை. ஆனால் இந்நாட்டில் இந்து சமயத்தினர் இருக்கின்றனர், இந்து கோவில்கள் இருக்கின்றன. இந்த இரண்டுமே அவருக்குப் போதும்! தனது வாழ்நாளின் பிறவிப்பயன்  அனைத்துமே பூர்த்தியாகி விடும் என்று அவர் கருதுகிறார்!

இந்நாட்டில் கோவில்கள் உடைபடுகின்றன  என்றால் அவருக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாகவே நினைக்கின்ற அளவுக்கு இப்போதைய நிலைமை! கெடாவில் தைப்பூச விடுமறை மறுப்பிற்கும்  இவருக்கும் கூட தொடர்புகள் இருக்கலாம்!

இப்படி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதில் இவர் வல்லவர்,  இவர் நிபுணர் - இப்படித்தான் இவரைப்பற்றியான நமது அனுபவம்!

நமக்குத் தெரிந்ததெல்லாம் மனிதனாகப் பிறந்தால் நாலு பேருக்கு அல்லது நாலு நாடுகளுக்கு நல்லது செய்ய வேண்டும். இப்படி மக்களிடையே குழப்பத்தையும், வன்மத்தையும் ஏற்படுத்தினால்  அவர் எப்படி அறிஞர் ஆவார் என்கிற கேள்வி எழுவது இயல்பு தான்!

நம்மைப் பொறுத்தவரை அவர் நல்ல மனிதனாக வாழ வேண்டும். குழப்பம், வன்மம் எல்லாம் அவர் தனது குடும்பத்தில் வைத்துக் கொள்ளட்டும்! நாட்டுக்குள் கொண்ட வர வேண்டாம் என்பதே!