பனிச்சறுக்கு இளம் வீராங்கனை ஸ்ரீ அபிராமி சந்திரன்
நமது நாட்டை பெருமையுறச் செய்யும் இளம் பனிச்சறுக்கு வீராங்கனை ஸ்ரீஅபிராமி சந்திரனுக்கு ம.இ.கா. கை கொடுத்திருக்கிறது. ம.இ.கா. வை வாழ்த்துகிறோம்!
உடனடி உதவியாக ரிங்கிட் 20,000 வெள்ளி நிதியுதவியை அளித்திருக்கிறது. அது மட்டும் அல்லாமல் இனி வரும் எட்டாண்டு காலத்திற்கு அவருக்குத் தேவையான நிதி ஏற்பாடுகளையும் ம.இ.கா. செய்திருப்பதாக "வணக்கம் மலேசியா" இணையதளம் கூறுகிறது. அத்தோடு விசா ஏற்பாடுகளையும் அவருக்கும் அவரது பெற்றோர்களுக்கும் ம.இ.கா. செய்திருப்பதாக அந்த செய்தித் தளம் கூறுகிறது.
அபிராமியின் தந்தை சந்திரன் தனது மகளின் பனிச்சறுக்குப் போட்டிக்காக பல தியாகங்கள் செய்து அவரை உலக அளவில் வீராங்கனையாகக் கொண்டு வர பல முயற்சிகள் எடுத்து வருகிறார்.
உண்மையைச் சொன்னால் நமது நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சு அவருக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஏன் செய்யவில்லை என்பதற்கு அவர்களுக்கு நிறைய காரணங்கள் உண்டு. ஏன் அவர்கள் செய்ய வேண்டும் என்பதற்கு நமக்கும் நிறைய காரணங்கள் உண்டு.
ஆனால் யார் செய்தாலும், வருகிற 2024 ஆண்டு, தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் அவர் வெற்றி பெற்றால் பெருமை என்னவோ அது மலேசியாவுக்குத் தான்.
இந்த நேரத்தில் நாம் அந்தக் குழந்தை, ஸ்ரீஅபிராமியைப் பாராட்டுகிறோம். அவரைப் புரிந்து கொண்ட அவரது தந்தை சந்திரனை வெகுவாகப் பாராட்டுகிறோம்.
மீண்டும் மீண்டும் நாம் சொல்ல வருவதெல்லாம்: பெற்றோரின் அரவணைப்பு இருந்தால் எந்தக் குழந்தையாலும் சாதனைகள் புரிய முடியும். மாற்றுக் கருத்து இல்லை.
இந்த நேரத்தில் ம.இ.கா.வையும் மனதாரப் பாராட்டுகிறோம்! வாழ்த்துகள்!
No comments:
Post a Comment