Thursday, 3 February 2022

ஓடி ஒளிய ஒன்றுமில்லையே!

 


ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர், , அசாம் பாக்கி  மலேசியப் பங்கு சந்தையில்  அவர் பங்கு  வாங்கியது  பற்றியான சர்ச்சை நாளுக்கு நாள்  மலேசியர்களிடையே பேசுபொருளாக  மாறிக் கொண்டு வருகிறது!

அந்த குற்றச்சாட்டில் நூறு விழுக்காடு உண்மை இருக்கிறது என்று யாரும் சொல்ல வரவில்லை. சந்தேகம் இருக்கிறது. அவ்வளவு தான்.

அந்த சந்தேகத்தைப் போக்குவது அசாம் பாக்கியின் கையில் தான் இருக்கிறது. அதனை அவர் செய்து விட்டுப்போகலாம். ஆனால் அதனைச் செய்வதை அவர்  கௌரவக் குறைச்சலாகப் பார்க்கிறார்.

அசாம் பாக்கி மிகப் பெரிய பதவியில் இருப்பவர். இப்படி அவர் மீது குற்றம் சாட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றுதான். என்பது நமக்குப் புரிகிறது.

ஆனால் நாட்டில் யார் மீது வேண்டுமானாலும் குற்றம் சாட்டலாம். நாட்டின் பிரதமர் கூட சட்டத்தின் முன் சமம் தான்.   அப்பாற்பட்டவர் அல்லர். அதனால் தான்  முன்னாள் பிரதமர்  பல வழக்குகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்!

அசாம் பாக்கியின் பிரச்சனையில்  திடீர் திடீரென திருப்பங்கள் ஏற்படுகின்றன!  இது தான் இங்குள்ள பிரச்சனை.

அவரை யார் குற்றம் சாட்டுகிறார்களோ அவர்கள் தான் போலிசாரால் விசாரிக்கப்படுகின்றனர்!  ஓரிரு தினங்களுக்கு முன்னர் லலிதா குணரத்னம் என்பவர் எழுதிய கட்டுரையை ஒட்டி போலிஸார் அவரை விசாரித்திருக்கின்றனர். சுமார் நான்கு மணி நேரம். இன்னும் பலர் அமைதியான ஊர்வலங்களில் கலந்து கொண்டவர்கள் விசாரிக்கப்படுகின்றனர். எதிர்கட்சியினர்   விசாரிக்கப்படுகின்றனர். ஆனால் சம்பந்தப்பட்டவர் இதுவரை சம்பந்தப்படாதவராகவே போலிஸார் கண்களுக்குத் தெரிகின்றார்!

ஆக,  அசாம் பாக்கியைத் தவிர ஊரில் உலகில் உள்ளவர்கள் எல்லாம்  விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்!          

நாம் சொல்ல வருவதெல்லாம் இது தான்: நாங்கள் அசாம் பாக்கியை நம்புகிறோம்.     மடியில் கனமில்லையென்றால் ஓடி ஒளிய ஒன்றுமில்லையே!                                                                                                                                                      

Wednesday, 2 February 2022

தங்க அணிகலன்கள் வேண்டாமே!

 


இன்றைய நிலையில்  Food Panda என்றால் அறியாதவர் நம்மில் யாரும் இருக்க முடியாது. வேலை இல்லாதவர் எல்லாம் சிரமமான காலக்கட்டத்தில் உணவு வினியோகிப்பதை  ஒரு வேலையாகவே எடுத்துக் கொண்டு செய்து வருகிறார்கள்.

இந்த வேலையில் ஈடுபட்டிருப்பவர்களில்  பெரும்பாலும் மலாய், இந்திய இளைஞர்கள் தான். அது போல ஒரு சில பெண்களும் இந்த உணவு விநியோகத்தைச் செய்து வருகின்றனர். சீனர்கள் பெரும்பாலும் இந்தப் பக்கம் வருவதில்லை. குறைவான சம்பளம் என்றால்  அவர்கள் எட்டிக்கூட  பார்க்கமாட்டார்கள்! அது தான் அவர்கள் இயல்பு.

சமீபத்தில் ஒரு பெண் விநியோகிப்பாளர் தான் உணவு விநியோகம் செய்யப் போகும் போது இரு வெளிநாட்டு ஆடவர்  தனது  மோட்டார் சைக்களை வழிமறித்து, பாராங் கத்தியைக் காட்டி,  தான் அணிந்திருந்த தங்க வளையல்களைக் கொள்ளையடித்துச் சென்றதாக புகார் அளித்திருக்கிறார்.

நம் நாட்டில் நிறையவே வெளிநாட்டவர்கள் இருக்கிறார்கள். வேலை இல்லை என்றால் திருடத்தான் செய்வார்கள்.  அவர்களில்  பலருக்குக் குடும்பங்கள் உண்டு. அப்படி இல்லையென்றால் கூட அவர்களுக்குச்  சாப்பாடு வேண்டும். இவர்களின் வாழ்வாதாரத்திற்கு அரசாங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும்.

நமது ஆண்களோ, பெண்களோ ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். தங்க நகைகள் போடுவதைத்  தவிருங்கள். அதுவும் இந்தியப் பெண்களுக்கு நகைகள் என்றால் உயிர். அதெல்லாம் இப்போது மாறிக்கொண்டு வருகிறது.  கொள்ளையடிக்கும் கூட்டம் தொடர்ந்து கொடுத்த தொல்லைகள், கொலை சம்பவங்கள் - இப்படி தொடர்ந்தாற் போல வந்த, வருகின்ற ஆபத்துக்கள் -  இதனையெல்லாம் நமது பெண்கள் புரிந்து கொண்டனர்.  அதனால் தங்க நகைகள் என்றாலே வெறுக்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர்.

தங்கம் கஷ்டத்திற்கு உதவும் என்கிற தத்துவம் எல்லாம் உதவாது. ஒரு வேளை கொள்ளையடிப்பவனின் கஷ்டத்திற்கு உதவலாம்!

அதனால் பெண்களே!  தங்க நகைகளை அணிவதைத் தவிருங்கள். எம்மாம் பெரிய பதவியில் இருந்தாலும் அது உங்களுக்கு ஆபத்தைக் கொண்டு வரும் என்பதை மறந்து விடாதீர்கள்!  நீங்கள் வங்கி லாக்கரில் போட்டு வைத்திருப்பதற்காக  நகைகள் வாங்கினால், அதனால் உங்களுக்கு இலாபம் இருக்கும் என்று நினைத்தால்,  தாராளமாக வாங்குங்கள்!

யாருக்கும் நட்டமில்லை!

Tuesday, 1 February 2022

சீனப் புத்தாண்டு வாழ்த்துகள்!

 


மலேசியர்களில்  ஒரு பிரிவினர் சீனப் புத்தாண்டை கொண்டாடினாலும் அது என்னவோ மலேசியர்களுக்கான விழாவாகத்தான் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு புலி ஆண்டு என்பதால் இன்னும் கொஞ்சம் வித்தியாசம் உண்டு.

புலி துணிச்சலான விலங்கு என்பது தான் நமது பொது அபிப்பிராயம்.   அந்த துணிச்சலான விலங்கின் குணம்  நமக்கும் தேவை.  அதுவும்  நமது இனத்தில் பொதுவாக  போதுமான துணிச்சல்  இல்லை என்பதால் தான் நாம் அனைத்துத் துறையிலும்  பின் தங்கி இருக்கிறோம்.

இந்த புலி ஆண்டில்  கொஞ்சம் மாத்தி யோசிப்போம். எப்போதும் நமது பஞ்சாங்கங்களைப் பார்த்து பழகிவிட்டோம். இப்போது இந்த சீனப் பஞ்சாங்கத்தையும் நம்பிப் பார்ப்போமே!

நாம் இந்த புலி ஆண்டைப் பற்றி விலாவாரியாகப் போகவில்லை. இங்கு ஒரு நல்ல காரியத்தைப் பார்க்கிறோம். புலி துணிச்சலுக்குப் பேர்போனது. அந்த துணிச்சல் நமக்கு வர வேண்டும். நமது வாழ்க்கைக்குப் பயனாக இருக்க வேண்டும். துணிச்சல் இல்லை என்றால் எதனையுமே நாம் சாதிக்க முடியாது.

துணிவே துணை என்பார்கள்! அது இன்றும் நமக்குத் தேவை!

வாழ்த்துகள்!