ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர், , அசாம் பாக்கி மலேசியப் பங்கு சந்தையில் அவர் பங்கு வாங்கியது பற்றியான சர்ச்சை நாளுக்கு நாள் மலேசியர்களிடையே பேசுபொருளாக மாறிக் கொண்டு வருகிறது!
அந்த குற்றச்சாட்டில் நூறு விழுக்காடு உண்மை இருக்கிறது என்று யாரும் சொல்ல வரவில்லை. சந்தேகம் இருக்கிறது. அவ்வளவு தான்.
அந்த சந்தேகத்தைப் போக்குவது அசாம் பாக்கியின் கையில் தான் இருக்கிறது. அதனை அவர் செய்து விட்டுப்போகலாம். ஆனால் அதனைச் செய்வதை அவர் கௌரவக் குறைச்சலாகப் பார்க்கிறார்.
அசாம் பாக்கி மிகப் பெரிய பதவியில் இருப்பவர். இப்படி அவர் மீது குற்றம் சாட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றுதான். என்பது நமக்குப் புரிகிறது.
ஆனால் நாட்டில் யார் மீது வேண்டுமானாலும் குற்றம் சாட்டலாம். நாட்டின் பிரதமர் கூட சட்டத்தின் முன் சமம் தான். அப்பாற்பட்டவர் அல்லர். அதனால் தான் முன்னாள் பிரதமர் பல வழக்குகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்!
அசாம் பாக்கியின் பிரச்சனையில் திடீர் திடீரென திருப்பங்கள் ஏற்படுகின்றன! இது தான் இங்குள்ள பிரச்சனை.
அவரை யார் குற்றம் சாட்டுகிறார்களோ அவர்கள் தான் போலிசாரால் விசாரிக்கப்படுகின்றனர்! ஓரிரு தினங்களுக்கு முன்னர் லலிதா குணரத்னம் என்பவர் எழுதிய கட்டுரையை ஒட்டி போலிஸார் அவரை விசாரித்திருக்கின்றனர். சுமார் நான்கு மணி நேரம். இன்னும் பலர் அமைதியான ஊர்வலங்களில் கலந்து கொண்டவர்கள் விசாரிக்கப்படுகின்றனர். எதிர்கட்சியினர் விசாரிக்கப்படுகின்றனர். ஆனால் சம்பந்தப்பட்டவர் இதுவரை சம்பந்தப்படாதவராகவே போலிஸார் கண்களுக்குத் தெரிகின்றார்!
ஆக, அசாம் பாக்கியைத் தவிர ஊரில் உலகில் உள்ளவர்கள் எல்லாம் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்!
நாம் சொல்ல வருவதெல்லாம் இது தான்: நாங்கள் அசாம் பாக்கியை நம்புகிறோம். மடியில் கனமில்லையென்றால் ஓடி ஒளிய ஒன்றுமில்லையே!
No comments:
Post a Comment