Sunday, 3 July 2022

அமைதி ஆர்ப்பாட்டங்கள்!


 இன்றைய நாள்களில் மக்கள் தங்களது பிரச்சனைகளை அரசாங்கத்திற்குக் கொண்டு செல்ல அமைதியான ஆர்ப்பாட்டங்களை அல்லது ஊர்வலங்களை  அனுமதிக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

எல்லாவற்றுக்கும் தடை தடை என்றால் மக்கள் தங்களது பிரச்சனைகளை எங்கு கொண்டு செல்வார்கள்?  ஆர்ப்பாட்டாளர்கள் யாரும் வன்முறையை ஆதரிப்பவர்கள் இல்லை. பல இடங்களில் நாம் பார்ப்பதெல்லாம்  ஆளுங்கட்சியினரே வன்முறையைத் தூண்டிவிட்டு பின்னர் ஆர்ப்பாட்டுக்காரர்களின் மீது பழியைப் போட்டு விடுகின்றனர்! இது எப்போதுமே நடப்பது தான். 

ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் அரசாங்கத்தின் மீது பழிபோட வேண்டும் என்கிற நோக்கம் கொண்டவர்கள் அல்ல. தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்த அதனை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் மீது தான் எப்போதுமே நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.  போலிஸார் ஆளும் தரப்பினர் மீது கைவைப்பதில்லை!எல்லா நாடுகளில் இப்படித்தான் நடக்கிறது! இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை!

சரி,  இன்றைய நிலைமை என்ன? இன்றைய நாளிதழ்களில் பலர் பலவிதமாக தங்களது கோபங்களை வெளிப்படுத்துகின்றனர். தலைவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் அனைவருமே தங்களது ஆத்திரங்களைக் கொட்டுகின்றனர். யார் என்ன செய்ய முடியும்? விலைவாசிகளின் ஏற்றத்தின் போதே மக்கள் அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துவிட்டனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரே விலைவாசிகள் ஏற ஆரம்பித்து விட்டன. அப்போதே மக்கள் தங்களது ஆர்ப்பாட்டங்களை அமைதியான முறையில் வெளிப்படுத்தினர். 

மக்கள் மட்டும் அல்ல. அரசியல்வாதிகள் மட்டும் அல்ல. ஊடகங்கள் மட்டும் அல்ல. வாய்ப்புக் கிடைத்த அனைவருமே அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அரசாங்கமோ, முக்கியமாக பிரதமர், இந்த கண்டனங்களை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவருடைய பிரச்சனை அவருக்கு என்பது போல அவர் நடந்து கொண்டார். தனது அரசாங்கத்தை தூக்கிப்பிடிக்க என்ன என்ன செய்ய வேண்டுமோ அதன் மீது தான் கவனம் செலுத்தினார்!

இப்போது தான் தூக்கத்திலிருந்து விடுபட்டவர் போல விலைவாசிகளைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்.  விவசாயம் செய்ய நிலம் வேண்டுமென்கிறார்! கோழிவிலையைக் குறைக்க வேண்டும் என்கிறார்! முட்டை சாப்பிடுவதைக் குறையுங்கள் என்கிறார்!

இங்கும் நாம் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும்.  விலைவாசிகளைக் கட்டுப்படுத்த அமைச்சரவை சிறப்புக்குழு ஒன்றை அமைத்திருப்பது சரிதான் என்றாலும் அந்த குழுவில் இருக்கப் போகிறவர்களும் அதே அரசியல்வாதிகள் தான்! அப்படி இருப்பதைவிட துறை சார்ந்த நிபுணர்களுடன் கலந்துரையாடி ஒரு நீண்ட கால தீர்வு காண்பது இன்னும் நல்லது அல்லவா!

இது மக்கள் பிரச்சனை. மக்களின் வயிற்றுப் பிரச்சனை. அவர்கள் சொல்லுவதை அரசாங்கம் காதில் வாங்க வேண்டும். அதற்காகத்தான் ஊர்வலம் அதுவும் அமைதி ஊர்வலம். அதற்குக் கூட எதிர்ப்பு என்றால் மக்கள் எங்குச் செல்வார்கள்?

அமைதி ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்பது தான் அரசாங்கத்திற்கு நாம் வைக்கும் கோரிக்கை!

Saturday, 2 July 2022

புண்ணியம் கோடி!

 

செல்லியல் இணைய இதழில் படித்த ஒரு செய்தி மனதிற்கு  நெகிழ்வாக இருந்தது.

இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா? இப்படியும் நிறுவனங்கள் இருக்கின்றனவா? நமப முடியவில்லை! இதற்கு முன்னரும் கேள்விப்பட்டதில்லை!

 தமிழ் நாடு, கோயம்புத்தூரில் இது நடைபெறுகிறது என்பதை அறியும் போது மேலும் மகழ்ச்சி. அது கே.பி.ஆர்., மில் நிறுவனம். அதன் உரிமையாளர் முனைவர் கே.பி.ராமசாமி.

அவர்கள் செய்கின்ற மாபெரும் சேவை என்பது அவர்களிடம் வேலை  செய்கின்ற  பெண் பணியாளர்களுக்கு நல்ல கல்வியைக் கொடுத்து அவர்களைப் பட்டதாரிகளாக  உருவாக்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை  உயர்த்துவது தான்.  அவர்கள் செய்கின்ற வேலையிலும்,  தகுதிக்கு ஏற்ப,  பணி உயர்வு கொடுப்பதையும் நிர்வாகம் செய்து வருகிறது.

.பொதுவாக இதனை ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது.  ஒரு நிறுவனம் இந்த அளவுக்குத் தங்களது பணியாளர்கள் மீது அக்கறை காட்டுகின்றது என்றால்  அதனை நிச்சயமாக நாம் பாராட்ட வேண்டும்.

இப்போது உள்ள நடைமுறை என்ன?  நிறுவனங்களில் மேல் தட்டில் உள்ளவர்கள் மெத்த படித்தவர்கள். கீழ்தட்டில் உள்ளவர்கள் அரைகுறையாகப் படித்தவர்கள். மேல்தட்டில் உள்ளவர்கள் கீழ்தட்டில் உள்ளவர்களை மனிதர்களாகக் கூட மதிப்பதில்லை. அந்த அளவுக்கு வேறுபாடுகள் பார்ப்பவர்கள் இருக்கின்றனர். மேல் தட்டில் உள்ளவர்களுக்கு ஒரு வகையில் படித்தவர்களைக் கண்டால் கூட பிடிப்பதில்லை!

இப்படி ஒரு நிலையில் அதுவும் பெண் பணியாளர்களைப் பட்டதாரிகளாக்குவது என்பது நாம் சாதாரணமாக எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? ஒரு கருத்து சொல்லப்படுவதுண்டு: பெண் கல்வி கற்றால் அந்த குடும்பமே கல்வி கற்ற குடும்பமாக மாறிவிடும். ஆண்கள் மீது நமக்குள்ள நம்பிக்கை குறைந்துவிட்டது.  "டாஸ்மார்க்" அடிமையாக எப்போது மாறுவான் என்று சொல்ல முடியாது!

இந்த நிறுவனத்தை நடத்தும் முனைவர் கே.பி.ராமசாமி அவர்கள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்.  அந்த நிறுவனத்தின் இந்த ஓன்பதாம் ஆண்டும் பட்டமளிப்ப விழாவில் கலந்து கொண்ட  மனிதவள அமைச்சர் டான்ஸ்ரீ எம்.சரவணன் அவர்களையும் பாராட்டுகிறோம்.

பாரதி சொன்னது போல்: "புண்ணியம் கோடி ஏழைக்கு எழுத்தறிவித்தல்" என்பது அனைவருக்கும் சொல்லப்பட்டது தான்.


Friday, 1 July 2022

அழிப்பதற்கு ஏற்ற தருணமல்ல!

 

ஒரு சில சமயங்களில் நமது அதிகாரிகள் எந்த அளவுக்கு முட்டாள்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்பதை அறியும் போது வேதனையாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய? அவர்களை முட்டாள்கள் என்று ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை!

விவசாயம் இல்லாத நாடு என்றால்  என்ன ஆகும் என்று பார்த்திருக்கிறோம். நமது உணவு பொருள்கள் அனைத்தும இறக்குமதி என்றால் மக்கள் என்ன நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதும் நமக்கு ஓரளவு புரியும்.

எப்போதுமே இறக்குமதிகளைச் செய்து கொண்டிருக்க முடியாது. இப்போது ரஷ்யா/உக்ரைன் ஓர் எடுத்துக்காட்டு. இறக்குமதி செய்ய இயலாத  ஒரு சூழல் ஏற்படும் போது அப்போது நமது நிலை என்ன?

சாப்பாட்டுக்கு வக்கு இல்லை என்கிற நிலை இருந்தாலும் கூட தங்களது அதிகாரத்தைக் காட்டும் அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். விவசாயம் எவ்வளவு முக்கியம் என்பதை அறியாதவர்களாக இன்னும் இருக்கிறார்கள்.

எல்லாவற்றையும் விட அந்த விவசாயத்தை யார் செய்கிறார்கள் என்பதைக் கூட இனக் கண்ணோட்டத்தோடு தான் பார்க்கிறார்கள்!  அது இந்தியர்களாக இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்! அந்த விவசாய நிலங்கள் அழிக்கப்படும்.  மிக மிக வேகமான நடவடிக்கை!

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் இது கேமரன் ஹைலன்ஸில் நடந்தது. அரசாங்கத்துக்கு எதிர்ப்பாக இருக்கிறார்கள் என்பதற்காக  அங்கிருந்த விவசாயிகள் அனைவரையும் வெளியேற வைத்தார்கள்.  இத்தனைக்கும் அங்கிருந்து தான் பெரும்பாலான விவசாய பொருட்கள்  அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.  அவர்களில் பெரும்பாலானோர்  இந்தியர்கள்.

சமீபத்தில் தாமான் ஒன்றில்  பயன்படாத ஆற்றோரங்களில் உள்ள நிலங்களைப் பயன்படுத்தி சிறு தோட்டங்களைப் போட்டிருக்கும் குடியிருப்புவாசிகளின் மீது தங்களது கைவரிசையைக் காட்டியிருக்கிறார்கள்! அவர்கள் அங்கு பயிர் செய்கிறார்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு விற்கிறார்கள்.  மார்க்கெட் போய் வாங்க வேண்டியதை மக்கள் அங்கு வாங்கிக் கொள்கிறார்கள்.  நாளை மார்க்கெட்டில் தட்டுப்பாடு  ஏற்பட்டாலும் இங்கு எந்த தட்டுப்பாடும் இல்லாமல் பொருள்கள் கிடைக்கும்.

நாம் இங்கு சொல்ல வருவதெல்லாம் மக்கள் விலைவாசி ஏற்றத்தினால் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். அவர்கள் காலியாக உள்ள இடங்களில் பயிர் செய்ய அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும்.  அவர்கள் அந்த நிலத்திற்குச் சொந்தம் கொண்டாட முடியாது என்பது உண்மை. ஆனால் சும்மா கிடக்கும் நிலத்தில் பயிர் செய்வதில் தவறில்லை.

குறிப்பாக இந்த நேரத்தில் சொந்தமாக பயிர் செய்வதை ஆதரிக்க வேண்டும். விலைவாசி ஏற்றத்தினால் பெரும்பாலும் பாதிக்கப்படுவர்கள் பி40, எம்40 மக்கள் தான். பொருள்கள் கிடைப்பதே பிரச்சனை என்கிற போது அவர்கள் விவசாயம் செய்யும் சிறிய சிறிய தோட்டங்களை அழிப்பது சரியான செயல் அல்ல என்பதே எமது கருத்து.