Friday 1 July 2022

அழிப்பதற்கு ஏற்ற தருணமல்ல!

 

ஒரு சில சமயங்களில் நமது அதிகாரிகள் எந்த அளவுக்கு முட்டாள்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்பதை அறியும் போது வேதனையாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய? அவர்களை முட்டாள்கள் என்று ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை!

விவசாயம் இல்லாத நாடு என்றால்  என்ன ஆகும் என்று பார்த்திருக்கிறோம். நமது உணவு பொருள்கள் அனைத்தும இறக்குமதி என்றால் மக்கள் என்ன நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதும் நமக்கு ஓரளவு புரியும்.

எப்போதுமே இறக்குமதிகளைச் செய்து கொண்டிருக்க முடியாது. இப்போது ரஷ்யா/உக்ரைன் ஓர் எடுத்துக்காட்டு. இறக்குமதி செய்ய இயலாத  ஒரு சூழல் ஏற்படும் போது அப்போது நமது நிலை என்ன?

சாப்பாட்டுக்கு வக்கு இல்லை என்கிற நிலை இருந்தாலும் கூட தங்களது அதிகாரத்தைக் காட்டும் அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். விவசாயம் எவ்வளவு முக்கியம் என்பதை அறியாதவர்களாக இன்னும் இருக்கிறார்கள்.

எல்லாவற்றையும் விட அந்த விவசாயத்தை யார் செய்கிறார்கள் என்பதைக் கூட இனக் கண்ணோட்டத்தோடு தான் பார்க்கிறார்கள்!  அது இந்தியர்களாக இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்! அந்த விவசாய நிலங்கள் அழிக்கப்படும்.  மிக மிக வேகமான நடவடிக்கை!

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் இது கேமரன் ஹைலன்ஸில் நடந்தது. அரசாங்கத்துக்கு எதிர்ப்பாக இருக்கிறார்கள் என்பதற்காக  அங்கிருந்த விவசாயிகள் அனைவரையும் வெளியேற வைத்தார்கள்.  இத்தனைக்கும் அங்கிருந்து தான் பெரும்பாலான விவசாய பொருட்கள்  அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.  அவர்களில் பெரும்பாலானோர்  இந்தியர்கள்.

சமீபத்தில் தாமான் ஒன்றில்  பயன்படாத ஆற்றோரங்களில் உள்ள நிலங்களைப் பயன்படுத்தி சிறு தோட்டங்களைப் போட்டிருக்கும் குடியிருப்புவாசிகளின் மீது தங்களது கைவரிசையைக் காட்டியிருக்கிறார்கள்! அவர்கள் அங்கு பயிர் செய்கிறார்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு விற்கிறார்கள்.  மார்க்கெட் போய் வாங்க வேண்டியதை மக்கள் அங்கு வாங்கிக் கொள்கிறார்கள்.  நாளை மார்க்கெட்டில் தட்டுப்பாடு  ஏற்பட்டாலும் இங்கு எந்த தட்டுப்பாடும் இல்லாமல் பொருள்கள் கிடைக்கும்.

நாம் இங்கு சொல்ல வருவதெல்லாம் மக்கள் விலைவாசி ஏற்றத்தினால் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். அவர்கள் காலியாக உள்ள இடங்களில் பயிர் செய்ய அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும்.  அவர்கள் அந்த நிலத்திற்குச் சொந்தம் கொண்டாட முடியாது என்பது உண்மை. ஆனால் சும்மா கிடக்கும் நிலத்தில் பயிர் செய்வதில் தவறில்லை.

குறிப்பாக இந்த நேரத்தில் சொந்தமாக பயிர் செய்வதை ஆதரிக்க வேண்டும். விலைவாசி ஏற்றத்தினால் பெரும்பாலும் பாதிக்கப்படுவர்கள் பி40, எம்40 மக்கள் தான். பொருள்கள் கிடைப்பதே பிரச்சனை என்கிற போது அவர்கள் விவசாயம் செய்யும் சிறிய சிறிய தோட்டங்களை அழிப்பது சரியான செயல் அல்ல என்பதே எமது கருத்து.

No comments:

Post a Comment