Sunday, 3 September 2023

கடுமையான ஒழுங்குமுறை!

 

ஒரு காலகட்டத்தில் காவல்துறை நமது இளைஞர்களுக்கு மிகவும் விரும்பிய துறையாக இருந்தது.

ஆனால் இப்போது என்னவோ அந்தத் துறையும்  நமது இளைஞர்களுக்கு  கசக்க ஆரம்பித்துவிட்டனவோ என எண்ணத் தோன்றுகிறது!  நமது இளைஞர்கள் விரும்பியபோது காவல்துறை நம்மைவிட்டு விலகி நின்றது. இப்போது காவல்துறை வேண்டும் என்கிற போது நமது இளைஞர்கள் விலகி நிற்கின்றனர்!

சமீபத்தில் காணொளி ஒன்றில் காவல்துறையைச் சேர்ந்த நண்பர் ஒருவர் பேசியதைக் கேட்க நேர்ந்தது. அந்தப் பேச்சினை நண்பர் மிகவும் வருத்தத்தோடு பதிவு செய்திருந்தார்.

ஆமாம். இந்திய இளைஞர்கள் விண்ணப்பம் செய்கிறார்கள். நேர்காணலுக்கு வருகிறார்கள்.  வெற்றி பெறுகிறார்கள்.  எல்லாமே சுபமாகத் தான் முடிகிறது. ஆனால் தெர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஓரிரு வாரங்களில்  "எனக்கு இந்த வேலை  சரிபட்டு வராது! நான் போகிறேன்! என் பெற்றோர்களைக் கேட்க    வேண்டும்!"  என்று சிறுபிள்ளைதனமாக நடந்து கொள்கிறார்கள் என்று அவர் கூறியிருந்தார்.

இங்கு நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன வென்றால் பல இளைஞர்கள் வாய்ப்புகள் கிடைக்க வேண்டியவர்கள்,  இந்த இளைஞர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பினால்,  அவர்களும் வாய்ப்பினை இழந்து போனார்கள். இது தான் பிரச்சனை. இவர்கள் வேண்டாம் என்று இடையிலேயே ஓடிப்போனால் அந்த  இடம் மீண்டும் நிரப்பபடுவதில்லை. இப்படிப் பல இந்திய இளைஞர்களின் வாய்ப்புகள் வீணடிக்கப்படுவதாக  அவர் கூறியிருந்தார்.

காவல்துறை  சம்பந்தமான  வேலைகளுக்குச் சில கெடுபிடிகள் இருக்கத்தான் செய்யும். கடுமையான பயிற்சிகள். கடுமையான நெறிமுறைகள். ஒழுங்குமுறைகள்  என்று பல கட்டுப்பாடுகளை எதிர்நோக்கத்தான்  வேண்டும். இதற்கெல்லாம் பயப்படுவர்கள்  காவல்துறை பக்கம் எட்டிப்பார்க்கூடாது. ஆனால் போகும் போது பெரிய வீராப்போடு  போவதும் பின்னர் "நான் வீட்டுக்குப் போறேன்!" என்று அழுவதும் - இது சிரிப்பதற்கான விஷயம் அல்ல.

காவல்துறையைத் தேர்ந்தெடுத்தால்  உறுதியாக இருங்கள். வீதிகளில் சண்டை போடுவதை வைத்து உங்கள் வீரத்தை மதிப்பிடாதீர்கள். நீங்கள் பயிற்சியின் போதே விலகினால் ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். உங்களைப் போன்ற இன்னொரு இளைஞனின்  எதிர்காலத்தை வீணடிக்கிறீர்கள். நீங்கள் விண்ணப்பம் செய்து, நேர்காணலில் பங்குப் பெற்றிருக்காவிட்டால்  யாரோ ஒரு இந்திய இளைஞனுக்கு அந்த இடம் கிடைத்திருக்கும். 

இளைஞனே கேள்! நமக்குப் பொறுப்புணர்ச்சி வேண்டும். வீரனாகப் போய் கடைசியில் கோழையாக வெளியே துரத்தடிக்கப்படுவது  மிக் மிக அற்பத்தனம். கோழைத்தனத்தின் எல்லை!

Saturday, 2 September 2023

புதிய அதிபருக்கு வாழ்த்துகள்!

 

                     சிங்கப்பூர் அதிபர், தர்மன்  சண்முகரத்தினம்

சிங்கப்புர் நாட்டின் அதிபராக தர்மன் சண்முகரத்தினம்  தெர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.  

 வாக்களிப்பின் மூலம் தேர்ந்தெடுக்கபட்ட அவருக்கு  மக்களின் ஆதரவு சுமார் எழுபது விழுக்காட்டுக்கு மேல்  என்பது,  அதுவும்  சீனர்கள் அதிகம் வாழும் சிங்கப்பூரில்,  எதிர்பார்க்க முடியாத ஒன்று. எப்படியிருப்பினும் அது மக்களின் தீர்ப்பு. தமிழர் ஒருவருக்கு  இந்த அளவு வரவேற்பு கிடைத்திருப்பது  உலகத்தமிழர்களுக்கு  மகிழ்ச்சியளிக்கும்  விஷயமாகும்.  தமிழர்களின் திறமைக்கு இது ஒன்றே போதும்.

அவருக்கு எதிராக போட்டியிட்ட இருவருமே சீனர்கள். அதில் ஒருவருக்கு  16 விழுக்காடும்  இன்னொருவருக்கு 14 விழுக்காடு வாக்குகளுமே கிடைத்தன.

திரு தர்மன் அவர்களின் பதவியேற்பு சடங்கு, இப்போதைய அதிபர் ஹாலிமா யாகோப்  பதவி காலம் முடிந்த பின்னரே நடைபெறும். அவருடைய பதவி காலம் 13.9.2023  அன்று முடிவடைகிறது. புதிய அதிபரின்  பதவியேற்பு  அடுத்த நாள் 14.9.2023 அன்று நடைபெறும். 

சிங்கப்பூர் நாட்டின் ஒன்பதாவது அதிபராக திரு தர்மன்  விளங்குகிறார்.  அவர் இலங்கைத் தமிழர். சிங்கப்பூரில் பிறந்தவர். அவருக்கு  மனைவியும் நான்கு குழந்தைகளும் இருக்கின்றனர். மனைவி ஜப்பானிய-சீன வம்சாவளியைச் சார்ந்தவர். சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர். சட்டம் படித்தவர்.

அதிபராக பதவியேற்கும் திரு தர்மன் அவர்கள் உலகத் தமிழர்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் மனிதர். சீனர்கள் அதிகமாகக் கொண்ட  ஒரு நாட்டில் ஒரு தமிழராலும் அதிபராக முடியும் என்பதை எண்பித்திருக்கிறார். உலகத் தமிழர்களுக்கு ஓர் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறார்.

தமிழர்கள் உலக அளவில் பல நாடுகளில் பெரும் பதவிகளில் அமர்ந்திருக்கின்றனர்.  அவர்களது திறமைகளைப் பல நாடுகள் அங்கீகரித்திருக்கின்றன.  இன்றளவும் அவர்கள் பல உயர் பதவிகளை வகிக்கின்றனர். வருங்காலங்களில் தமிழர்கள் இந்த உலக ஆள்வர் என்பது திண்ணம்.

Friday, 1 September 2023

இடைத் தேர்தல்!

 


பூலாய் நாடாளுமன்ற தேர்தலும்  சிம்பாங் ஜெராம் சட்டமன்ற தேர்தலும்  வருகின்ற 9 செப்டெம்பர் 2023,  சனிக்கிழமை  நடைபெற விருக்கின்றது

இந்த இடைத்தேர்தலில் மும்முனை போட்டி என்றாலும் போட்டி என்னவோ ஒற்றுமைக் கூட்டணிக்கும், பெரிகாத்தான் கூட்டணிக்குமான போட்டியாகத்தான் பார்க்கப்படுகின்றது.

இங்கு முக்கியமாக பார்க்கப்படுவது சிம்பாங் ஜெராம் சட்டமன்ற போட்டியில்  பக்காத்தான் கூட்டணி வெற்றி பெற வாய்ய்புண்டா  என்பது தான்.   இரண்டு தொகுதியுமே மலாய்க்காரர் அதிகமுள்ள தொகுதி தான்  என்றாலும் சிம்பாங் ஜெராம் தொகுதியில் குறைவான சீன வாக்களர்களும் இந்திய வாக்களர்களும் உள்ள தொகுதி என்பதால்  பாஸ் கட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக  இருப்பதாக சொல்லப்படுகின்றது.

அதிலும் சீன வாக்காளர்கள் பாஸ் கட்சிக்கு வாக்களிப்பதற்கான  வாய்ப்புகள் இல்லை. இந்திய வாக்காளர்களின் நிலை கணிக்க முடியவில்லை என்றாலும்  அவர்கள் பக்காத்தான் கூட்டணிக்குத்தான்  வாக்களிப்பார்கள் என்னும் நம்பிக்கை உண்டு. அவர்களும் பாஸ் கட்சியின் வலைக்குள் விழ வாய்ப்பில்லை.

இந்த இடைத் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் அரசாங்கத்தில் எந்தவொரு  பெரிய மாற்றமும் ஏற்படப்போவதில்லை. ஆனால் பக்காத்தான் கூட்டணி தோல்வி அடைந்தால்  அது பிரதமர் அன்வாரின் அரசாங்கத்திற்குப் பலத்த அடி என்று கருதலாம். அவர் மக்களின் ஆதரவை இழந்து வருகிறார் என்பது அதன் பொருள்.

இருந்தாலும், இருக்கின்ற சூழலில், அவர் தான் வெற்றி பெறுவார்  என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.  அவ்வளவு சீக்கிரத்தில் மக்கள் அவர் மீது உள்ள நம்பிக்கையை இழந்து விடவில்லை. இன்னும் நாட்டு மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத்தான் அவர் திகழ்கிறார்.

அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகள் எல்லாம் தற்காலிகைமானவை. வெகு விரைவில் அவைகளை எல்லாம் அவர் களைந்து மீண்டும் நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெறுவார் என நம்பலாம்.   நாம் அவர் மீது நம்பிக்கை இழந்தாலும்  அவர் நம்மீது உள்ள நம்பிக்கையை இழக்கமாட்டார்.

ஏற்கனவே அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகளை எல்லாம் இப்போது சுட்டிக்காட்டுவது தேவையற்ற வேலை. அதனால் யாருக்கும் பயனில்லை. தவறு செய்யாத அரசியல்வாதி யார்?  பழையனவற்றை  இப்போது புதிப்பிக்க வேண்டாம்.  மறந்துவிட்டு இப்போது என்ன நடக்கிறது என்பதை மட்டும் பாருங்கள். சுட்டிக்காட்டுங்கள். பேசுங்கள். விவாதியுங்கள்.

இந்த இடைத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் வாழ்த்துகள்!