Monday, 3 June 2024

ஊழியர் சேமநிதி என்னாகிறது?

 

ஊழியர் சேமநிதி சேமிப்பு,   ஊழியர்கள்  ஓய்வுபெற்று ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அது  கையில் இருப்பதில்லை.  சேமிப்பு எங்கோ பறந்துவிடுகின்றது என்று பிரதமர் அன்வார் கூறியிருக்கிறார்.

குறிப்பாக எடுத்துக் கொண்டால் இந்தியர்களுக்கு இது மிகவும் பொருந்தும்.  பெற்றோர்கள் அந்தப் பணத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தாலும் பிள்ளைகள்  அந்தப் பணத்துக்காக ஒரு திட்டம் போட்டு வைத்திருப்பார்கள்!   அப்பன்  உழைத்துச் சம்பாதித்த பணம்,  திட்டம் போடுவது பிள்ளைகள்!  பெற்றோர்கள் இளிச்சவாயர்களாக இருந்தால், ஐந்தாண்டுகள் வேண்டாம், ஐந்து மாதமே போதும்!

விபரமான பெற்றோர்கள்  பணத்தைப் பிள்ளைகளிடம் கொடுக்க மாட்டார்கள்.  அவ்ர்கள் வங்கியில் போட்டு வைப்பார்கள்.  ஆனால் அப்பாவி பெற்றோர்கள் என்றால் அதோகதி! பெற்றோரைப் பயமுறுத்தியே அந்தப் பணத்தை வாங்கிவிடுவார்கள்!

என்ன செய்ய? பொறுப்பற்ற முறையில் பிள்ளைகளை வளர்த்தால் பிள்ளைகள் சொல்லுவதைத்தான் பெற்றோர்கள்  கேட்க வேண்டும். அவர்களும் என்ன செய்வார்கள்?  கடைசி காலம் பிள்ளைகளோடு தான் வாழ வேண்டும்.  அதனால் அவர்களுக்கும் ஒரு கட்டாயம். பிள்ளைகள் சொல்லுவதைக் கேட்டுத்தான் ஆக வேண்டும்.

கொடுமை என்னவென்றால்  பெற்றோரின் பணத்தை தங்கள்  விருப்பத்திற்குச் செலவு செய்யும் பிள்ளைகள், பெற்றோரின் கடைசி காலம்வரை அவர்களுக்குக் கஞ்சி ஊத்துவார்களா என்பது தான் கேள்விக்குறி.   பெற்றோரிடமே அந்தப் பணம் இருந்தால் அவர்களின் கடைசி காலத்திற்கு அந்தப் பணம் உதவும்.

ஆனால் அந்தப் பணம் எந்தந்த வகையில் வீணடிக்கப்படுகிறது என்று பார்த்தால் பிள்ளைகளின் கல்யாணச்செலவு.   ஏன்? அவர்கள் வேலை செய்யவில்லையா?  கல்யாணத்திற்காக பணம் சேர்த்து வைக்கவில்லையா?  ஒருத்தன் மோட்டோர் சைக்கிள் வாங்க வேண்டும் என்கிறான்! பணம் கொடுக்காவிட்டால் பயமுறுத்துகிறான்.  இப்படித்தான் பெற்றோர்களின் ஊழியர் சேமநிதி  அனைத்தும் கறைந்து போகிறது!

ஊழியர் சேமநிதி என்பது நமது வாழ்நாள் சேமிப்பு. முடிந்தால் வீடு போன்ற சொத்துக்கள் வாங்க வேண்டும்.  அந்தப் பணத்தின் மூலம்  கடைசிகாலத்தில்  நிம்மதியாக வாழ வேண்டும்.  இல்லாவிட்டால்  கடைசி காலத்தில் கையேந்த வேண்டி வரும்!

Sunday, 2 June 2024

மனித நேயமே இல்லையோ?

 

மிருகங்களைக் கொல்லுவதற்கு வகை வகையாக  வழிகள் தேடி அலைகிறது  மனிதக் கூட்டம்!

என்ன சொல்ல?   மனிதர்கள் மனிதாபமற்றுப் போனோம். மடையர்கள் ஆனோம்.  மனித நேயம் என்பதையே இழந்துவிட்டோமோ என்கிற கவலை கூட நமக்கு ஏற்படுகிறது.

மேலே உள்ள படத்தைப் பாருங்கள்.  மனிதன் ஒருவன், சாக்குப் பையில்  பூனையை உள்ளே போட்டுக் கட்டி ஆற்றில் வீசுகிறான்.  என்ன  கொடூரம் பாருங்கள்.  சும்மா வீசிவிட்டாலாவது அது பாட்டுக்குப் போய்விடும்.

சமீப காலங்களில் இது போன்ற ஏராளமான செய்திகளை நாம் பார்க்கின்றோம்.  பூனைகளை துணி துவைக்கும் சலவைகளில் போட்டு அரைத்து விட்டுப்போனதைப் பார்த்தோம்.  நாய்களை மோட்டார் சைக்கிளில்  வைத்து இழுத்துக் கொண்டு போனதைப் பார்த்தோம். நடக்க முடியாத கீழே விழுந்த  பசுமாட்டைத்  தரதர வென்று  இழுத்துக் கொண்டு போனதைப் பார்த்தோம்.  கண்ட இடங்களில் காக்காய்களைச் சுடுவதால் காக்கை ஒன்று உணவகத்தில் சூப் போடும்  பானைக்குள்  வந்து விழுந்ததைப் பார்த்தோம்!

நாளுக்கு நாள் இது போன்ற அராஜகங்கள் அத்து மீறுவதை  வேடிக்கைத் தான் பார்க்க முடிகிறது. இயக்கங்கள் பல தங்களது  ஆதங்கத்தை வெளிப்படுத்தத்தான் செய்கின்றன.  ஆனால் எதுவும் குறைந்தபாடில்லை.

அரசாங்கத்தில் பணிபுரிபவர்களே பலருக்குத் தெரிய  இது போன்ற வன்மத்தை வெளிப்படுத்துகின்றனர்.  பெரும்பாலும் நகராண்மை கழகத்தினர்  நாய்கள், பசுக்களை எப்படி நடத்துகின்றனர் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.  அரசாங்கத்தில் உள்ளவர்களே செய்தால்  அரசாங்கமே அதனை ஊக்குவிப்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. 

என்னவோ மலேசியர்களுக்குப் பாவ புண்ணியம் என்பதில் நம்பிக்கை இல்லையோ  என்று தான் தோன்றுகிறது.  இரக்கம் என்று ஒன்று இருப்பதாகவும் தெரியவில்லை.  கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எல்லாம் என்ன ஆனார்களோ!

இறைவா! இந்த மிருகவதையை நீர் தான் தடுக்க வேண்டும்!  வேறு யாரிடம் முறையிடுவது?

Saturday, 1 June 2024

பத்துமலையில் சிறப்பு வழிபாடு!

 

பத்துமலையில் அமைதிப் பேரணி ஒன்றை நடத்தினர் இந்து பெருமக்கள்.

மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த சுற்றுப்பயணியான நபர் ஒருவர்  பத்துமலைத் திருத்தலத்தில், முருகன் சிலை அருகே,   திருக்குரான் வாசகங்களை  வாசித்து  அதனைத் தனது காணொளி, டிக்டாக்  தளங்களில் பதிவேற்றம் செய்திருந்திருந்தார். 

இதனை அறிந்த பக்தர்கள் பலர் அதிருப்தி அடைந்ததுடன் எதிர்ப்பையும் தெரிவித்தனர். அந்நபர் அதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.  அவரின் கூற்றுப்படி பத்துமலை திருத்தலம் என்பது ஒரு வரலாற்றுப் பூர்வ இடம் என நம்பியதால்,   தான் அங்கு திருக்குரான் வசனங்களை வாசித்ததாக அவர் கூறினார்.  அதற்காக அவர் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

திருக்குரான் வசனங்களை வாசித்ததற்காக அதற்கு ஆட்சேபம் தெரிவிக்கும்  நோக்கத்துடன்  இந்து பெருமக்கள் சுமார் 600-க்கும் மேற்பட்டவர்கள் அமைதியுடன் ஒன்று கூடினர்.  இந்நிகழ்ச்சியில் ஒன்று கூடி தேவாரப்பாடல்களைப் பாடினர்.  சஹானா சுப்ரமணியம் தேவாரப்பாடல்களுக்குத்  தலைமை தாங்கி வழி நடத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பலர் வெளி மாநிலங்களிலிருந்தும், சிங்கப்பூரிலிருந்தும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி அமைதியுடன் நடந்தேறியது.

  பொதுவாக எந்தவொரு வழிபாட்டுத்  தலமாக இருந்தாலும் அதனை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.  மரியாதை தர வேண்டும்.  இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும். 

இந்து பெருமக்கள் அமைதியுடனும் எந்தவித ஆரவாரமும் இல்லாமல்  அமைதியுடன்  நடத்திய  இந்த  அமைதிப் பேரணியை வாழ்த்துகிறோம்.