Tuesday, 3 September 2024

ஆதரவு குறைகிறதா?

 

மெர்டேக்கா சென்டர் நடத்திய ஆய்வு ஒன்றில் மலேசிய இனங்களிடையே உள்ள  உறவுகள் பற்றி கொஞ்சம் புரிய ஆரம்பித்திருக்கிறது. இருந்தாலும் எதுவும் முடிந்த முடிவாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

ஆனாலும் ஒரு சில விஷயங்களை நாமும் யோசித்துப் பார்க்கலாம்.   நாம் தொடர்ந்து ஒதுக்கப்பட்டு வருகிறோம் என்பது தான் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது.  இன்றைய நிலை தான் நம்மைக் கீழ் நோக்கி இழுத்துக கொண்டுப் போகிறது  என்பது தான் குற்றச்சாட்டு. 

அரசாங்கத்திற்கு நம்முடைய ஆதரவு குறைகிறது என்பதற்கு முக்கிய காரணம் நமது அரசியல்வாதிகள் தான்.  தங்களது வாக்குவங்கியை நிரப்ப வேண்டும் என்பதற்காக அவர்கள் தொடர்ந்து இந்தியர்களை  இழிவுபடுத்தி வருவதுதான். ஒரு வேளை அது பிற இனத்தவரிடையே மகிழ்ச்சி அளிக்கலாம்!

உண்மையில் இந்தியர்கள் எந்தக் காலத்திலும் அரசாங்கத்திடம் கையேந்தும் கூட்டம் அல்ல.  அப்படியொரு நிலையை உருவாக்கியவர்கள்  நமது அரசியல்வாதிகள்.  நாம் ஒரு கௌரவமான இனம். நமக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளைக் கொடுத்தால் யாரிடமும் நாம் கையேந்தும் நிலையில் இருக்க மாட்டோம்.  நம்மிடமிருந்து அனைத்தையும் அபகரித்துவிட்டு நம்மைக் கையேந்தும் நிலைக்குத் தள்ளிவிட்டனர் நமது தலைவர்கள்.  எல்லா அயோக்கியதனத்தையும் செய்துவிட்டு இப்போது  "எங்களைப்பற்றி அவதூறு பேசினால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்" என்று  சவடால்தனம் பண்ணுகின்றனர்!

கல்வியில் நாம் தகுதி குறைந்தவர்களா? ஆனாலும் உயர்கல்வி நமக்கு மறுக்கப்படுகின்றது.  மருத்துவம் நமக்குக் கைவந்த கலை. ஆனாலும் நமக்குத் தகுதி இல்லையாம்.  சிறு சிறு தொழில்களில் ஈடுபட வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. நமது அங்காடிகள் உடைக்கப்படுகின்றன.  கேட்பார் யாருமில்லை. வழிபாட்டுத் தலங்கள்  உடைபடுகின்றன. தமிழ்ப்பள்ளிகள் தடுமாற்றத்திற்கு உள்ளாகின்றன.

இந்த நிலையில் நாம் ஏன் அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும் என்கிற கேள்வி இயல்பாகவே எழுகின்றது.  அதன் விளைவு தான் நமது ஆதரவு இன்றைய அரசாங்கத்திற்கு குறைந்து வருகிறது.  28 விழுக்காட்டினர் ஆதரவு தருகிறார்கள் என்றால் அவர்கள் அரசியல்வாதிகளாக இருப்பார்கள்!  அவர்கள் தான் எந்த அரசாங்கம் வந்தாலும்    கவிழ்வதில்லை!

ஆதரவு குறைகிறதா கூடுகிறதா என்பது அடுத்து வரும் தேர்தலில் தெரிந்துவிடும்.

Monday, 2 September 2024

துணை இயக்குனர் தேவையே

                                                   மலேசியத் தமிழ்ப்பள்ளி  

மலேசிய தமிழ்க்கல்வி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், செயளாருமான  திரு. ம.வெற்றிவேலன் அவர்களின்  அறைகூவலை நாம் சும்மா வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.  நாம்  அனைவரும்  ஆதரவுகரம் நீட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.

தமிழ்ப்பள்ளிகள் சமபந்தப்பட்ட  பிரச்சனைகளில் நாம் பேசுவதற்கு  முன்னாள் தேசிய முன்னணி அரசாங்கத்தில் வழிகள் இருந்தன. யாரிடமோ ஏதோ ஒரு பொறுப்பு இருந்தது. குறைந்தபட்சம் கல்வி துணை அமைச்சர் பதவியாவது இருந்தது.

இப்போது எதுவும் இல்லை.  இருக்கின்ற துணை அமைச்சர் சீனக் கல்வி பற்றி மட்டுமே  பேச அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.  ஆக, தமிழ்ப்பள்ளிகளுக்கு யாரும் இல்லை. ஏனோ  பிரதமர் அன்வார் இப்ராகிம்  தலமையாலான பக்காத்தான் அரசாங்கம் தமிழ்க்கல்வி பற்றி கண்டு கொள்வதில்லை. அதனால் தானோ என்னவோ இந்தியர்களின் ஆதரவை பிரதமர் அன்வார் இழந்து வருகிறார் என்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பிரதமர் அன்வாருக்கு சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருக்காமல் நமது உரிமைகளைப் பேசி, சந்திப்புக்களை நடத்தி  பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முயற்சிகள் எடுக்க வேண்டும்.

தமிழ்க்கல்வி என்பது இந்நாட்டுக்குப் புதிதல்ல.  இருநூறு ஆண்டுகளுக்கு மேலான  பாரம்பரியத்தைக் கொண்டது.  தமிழ்ப்பள்ளிகளில் பணிபுரியும் இந்திய ஆசிரியர்கள் தான் அரசாங்கத்தில்  பணிபுரிபவர்களாகக் கணக்கிடப்படுகின்றனர்.  இவர்களை விட்டால்  அரசாங்கத்தில்  இந்தியர்கள் யார் பணிபுரிகிறார்கள்?  மிக மிக சொற்பமே.

தமிழ்ப்பள்ளிகளில் பல பிரச்சனைகள் இருக்கின்றன.  யாரிடம் பேசுவது என்கிற குழப்பம்? சீனரோ, மலாய்க்காரரோ  அதனைப் புரிந்துகொள்ள வைக்க முடியாது.  தமிழ்ப்பள்ளிகளில் கல்விகற்ற ஒருவர் இயக்குநர்களில் ஒருவராகப் பணி புரிந்தால்  பிரச்சனைகளை அரசாங்கத்திற்குக் கொண்டுசெல்ல எளிதாக இருக்கும்.  சீனக் கல்விக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதனையே தமிழ்க்கல்விக்கும் எதிர்பார்க்கிறோம்.

பிரதமர் அன்வார் அவர்களின், வழக்கம் போல, அவரின் தயவுக்காக  நாம் காத்துக் கிடக்கிறோம். நமது  இந்திய அரசு சாரா இயக்கங்களும் இதுபற்றி பேச்சுவார்த்தைகள் நடத்த, கேள்விகள் எழுப்ப சரியான நேரம் இது.

பேச்சு வார்த்தைகளின் மூலம் எதுவும் நடக்கும் என எதிர்பார்க்கிறோம். வாழ்க நம் நாடு! வாழ்க நம் மக்கள்!

Sunday, 1 September 2024

புறக்கணிக்கலாம் ....ஆனால்...

 

மலேசிய  உலாமாக்கள் சங்கம் சொல்ல வருவது நமக்குப் புரிகிறது.  இஸ்ராயேலுக்கு ஆதரவான நிறுவனங்களைப் பறக்கணியுங்கள்  என்பது சரியானது தான்.  நாம் எந்த வகையிலும் இஸ்ராயேலை ஆதரிக்கப் போவதில்லை.

ஆனால் நாம் ஒரு சிக்கலான நிலையில் இப்போது இருக்கின்றோம்.  இன்று நாட்டில் வேலையில்லாப்  பிரச்சனை என்பது மிக மோசமான நிலையில் இருக்கின்றது.  நமது மக்கள் வேலை தேடி வெளிநாடு போகின்றனர். இன்று நமது அண்டை நாடான சிங்கப்பூர் தான் நமது மக்களுக்கு வேலைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இங்கு இருக்கின்ற வாய்ப்புக்களையெல்லாம் வெளிநாட்டவருக்குத் தாரைவார்த்தைக் கொடுத்து விட்டோம்.  அது நமது அரசியல்வாதிகளின் தாராள மனதைக் காட்டுகிறது.  ஆனால் இப்போது  நாம் சிங்கப்பூரிடம் கையேந்துகிறோம்.

நாம்,  சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பொருட்களை வேண்டாமென்றால்  புறக்கணிக்கலாம்.  வேண்டுமா வேண்டாமா எனபதைப் பொது மக்களிடமே விட்டுவிடுங்கள். தடை போடாதீர்கள்.  யாரையும் தூண்டிவிடாதீர்கள்.

இதனை நீங்கள் சராசரி மனிதர்களின் கோணத்திலிருந்து பார்க்க வேண்டும்.  இந்த நிறுவனங்களில்  வேலை செய்பவர்களின் குடும்பங்களையும் ஒரு கணம் யோசித்துப் பார்க்க வேண்டும்.  அவர்கள் வேலை பார்த்தால் தான் சோறு  வேலையில்லாவிட்டால் துணி கூட மிஞ்சாது!   அவர்களெல்லாம் மாதம் முடிந்தால்  சம்பளம் பெறுபவரில்லை. சாப்பாடு அவர்கள் மேசைக்கு வராது. அனைத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

அவர்கள் நிறுவனங்கள் நடக்கட்டும். அவர்களின் பொருட்கள் வேண்டுமா வேண்டாமா என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்.