Friday, 6 September 2024

இலக்கில் தெளிவில்லையோ!

 

இந்தியர் உருமாற்றுத்திட்டத்தில் முதன்மையான அமைப்பு என்றால் அது மித்ரா வைத்தவிர வேறு எந்த அமைப்பும் இல்லை.

அது ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இந்தியர்களின் பொருளாதார வளர்ச்சியே முக்கிய நோக்கமாகக் கூறப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் அரசியல்வாதிகளே  மித்ராவின் மூலம் அதிகப்பயன் பெற்றதாகத் தகவல்கள் கூறின.  சரி, ஏதோ சில அரசியல்வாதிகளாவது பயன்பெற்றார்களே என்று நம்மை நாமே தேற்றிக்கொள்ள வேண்டியது தான்!

இப்போது அது பற்றி பேசுவதை விடுத்து  மித்ராவின் இன்றைய நிலை என்ன  என்பது தான் முக்கியம். மித்ரா இப்போது சிறு வர்த்தகர்களுக்கு எந்த வகையிலும் உதவும்  என்கிற நம்பிக்கையில்லை.  அவர்களின் நோக்கமே மொத்தமாக பணத்தை விநியோகம் செய்வதற்கு எளிதான வழியைத்தான் தேடுகிறார்கள்!

சிறு வர்த்தகர்களுக்கான உதவி கரம் நீட்ட  பல ஆண்டுகளாக 'தெக்கூன்' செயல்பட்டு வருகிறது. அது இப்போது டத்தோ ரமணன் வருகைக்குப் பின்னர் இந்தியர்கள் பலர் பயன்பெற்று வருகின்றனர்.  டத்தோ வருகைக்கு முன்னர் தெக்கூன் ஏதோ 'நமக்கு எதிரி' என்று தான் பார்க்கப்பட்டது. அவர்கள் நிறையவே உதவுகிறார்கள்.  இப்போது மித்ரா நமக்கு எதிரி போன்று செயல்படுகிறார்கள்!  இவர்கள் களத்தில் இறங்கி  செயல்படத் தயாராக இல்லை.  அவர்களுடைய விண்ணப்ப பாரங்களைக் கூட  எளிமைப்படுத்த தயாராக இல்லை!

மித்ரா தனது இலக்கை மாற்றிக் கொண்டதோ என்று தான் நாம் நம்ப வேண்டியுள்ளது. இனி அவர்களுடைய கடனுதவி என்கிற  இலக்கு இல்லையென்றே தோன்றுகிறது. ஏதோ ஒரு நிகழ்ச்சி நடத்தி  அதற்கான செலவை மொத்தமாக அப்படியே ஏற்றுக் கொள்வது இன்னும் வேலை பளுவைக் குறைக்கும்.   நாம் இவர்களைக் கேள்வி கேட்க முடியாது. அதிகாரம் அவர்களிடம் உள்ளது.  நமது கேள்விகளுக்கு இவர்கள் பதில் கொடுக்கத் தயாரில்லை!

வழக்கம் போல் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

Thursday, 5 September 2024

அடுத்தக்கட்ட வேலை ஆரம்பமாகிவிட்டன!


 நமது வாழ்க்கையில் என்ன அசம்பாவிதங்கள் நடந்தாலும்  அத்தோடு எதுவும் முடிந்துபோய் விடுவதில்லை.

ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நடந்தது ஒரு விபத்து. அது நாட்டில் பெரியதொரு அனுதாப அலையை ஏற்படுத்தியது.  அதுவும் சில நாட்களில் மறைந்து போனது.  அவ்வளவு தான்.  எத்தகைய பிரச்சனைகளாக இருந்தாலும்  ஒருசில நாட்கள் தான். அப்புறம் அது காணாமல் போய்விடும்!  இயல்பு வாழ்வு தொடங்கிவிடும்.

அந்தப் பெண்மணி காணாமல்  போனதில் அனைவருக்கும் வருத்தம் தான். அதற்காக மற்ற வேலைகளை அப்படியே விட்டுவிட முடியாது.  மஸ்ஜித் இந்தியா இயல்பான நிலைக்குத் திரும்ப வேண்டும். அங்கிருக்கும் வர்த்தக நிறுவனங்களை ஒதுக்கிவிட முடியாது. அங்குள்ள தொழில்களை நம்பி பல நூறு குடும்பங்கள்  இருக்கின்றன. அவர்களின் வாழ்வாதாரத்தை அலட்சியப்படுத்திவிட முடியாது.  இலட்சங்கள், கோடிகளைச் சம்பாதிக்கும் நிறுவனங்கள் உள்ளன.  அவர்களின் தொழில்கள் பழைய நிலைக்குத் திரும்புவது அவசியம்.  

உடனடி தேவை எல்லாம்  பாதிக்கப்பட்ட இடங்கள் முற்றிலுமாக  சரிசெய்யப்பட வேண்டும் என்பது தான்.  அவசரம் அவசரம் என்று சொல்லி தரக்குறைவான வேலைகளைச் செய்யக்கூடாது என்பதே முக்கியம். அரசாங்கம் செய்கின்ற வேலைகள் அனைத்துமே 'சிஞ்சாய்' வேலைகள் என்று குறிப்பிடுவதுண்டு.  யாருக்கும் நல்லெண்ணம் இல்லை. இனிமேலும் வருமா என்று சொல்லுவதற்கில்லை.  காரணம் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்வரை 'சிஞ்சாய்' என்றே  சொல்லிப் பழகிவிட்டோம்.

ஏற்கனவே,  பழுது பார்க்கும் வேலைகள்  ஆறு மாதம்வரை இழுக்கும்  என்று அதிகாரிகளால் சொல்லப்பட்டது.  அப்படியென்றால் வேலை செய்யும் அரசாங்க ஊழியர்களுக்குச் சம்பளம் இல்லையோ!  சாக்குப்போக்குகள் சொல்லாமல் எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பழுது பார்க்கும் வேலைகள் முடிக்கப்பட வேண்டும் என்பது தான் நமது  ஆலோசனை.

எப்படி இருந்தாலும் பழுது பார்க்கும் வேலைகள் மும்முரமாகவும் தீவிரமாகவும்  நடைபெறுவதில் நமக்கு மகிழ்ச்சியே!

Wednesday, 4 September 2024

பொருளாதார பங்குடமை!

 

இந்தியர்களின் பொருளாதார பங்குடைமை உயர்வு காண வேண்டும் என்பதில் நமக்கு  எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.

ஆனால் இப்படிச் சொல்லும் போதே நமக்கு ஓர் ஒவ்வாமை வருகிறது!  என்ன செய்வது? இப்படி எல்லாம் சொல்லி  நமது அரசியல்வாதிகள் இந்திய சமூகத்தை படுபாதாளத்திற்குத் தள்ளி விட்டுவிட்டனர்!  அப்போது அவர்கள் "தங்களின்" பொருளாதார நிலையை உயர்த்துவதற்காகத்தான் அப்படிச் சொன்னார்கள் என்பதைப் புரிந்து கொள்ளவே பல ஆண்டுகள் பிடித்துவிட்டன!  அவர்களும் இந்தியர்கள் தானே, குறை சொல்ல வழியில்லை!

இப்போது அதே பிரச்சனையை அரசியல் அல்லாதவர்கள் பேசியிருக்கிறார்கள். நல்ல சகுனம் தான்.  கோலாலம்பூர் மற்றும் புத்ராஜயா இந்திய வர்த்தக சம்மேளனம் இந்தப் பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கிறது.

நாம் இன்றளவில் பங்குச் சந்தையில் 1.1. விழுக்காடு  என்றளவில் தான் இருக்கிறோம். அட! எத்தனை காலம் தான் இப்படியே இருக்கப் போகிறோம்?  எத்தனை காலம் தான் நாம் இப்படியே சொல்லிக் கொண்டே இருக்கப் போகிறோம்? துன் சாமிவேலு காலத்திலிருந்து இதுவரை நிலைமை மாறவில்லை.  அன்றிருந்த நிலை தான் இன்றும்.

யாரால் இதனை மாற்ற முடியும்?  வர்த்தக சங்கம் தான் முயற்சிகளை எடுக்க வேண்டும்.  சிறு தொழில்கள் செய்வதற்கான சூழல்கள் சிறப்பாகவே இருக்கின்றன..  மித்ரா அமைப்பு தனது கதவுகளை மூடிவிட்டாலும் தெக்கூன்  போன்ற அமைப்புகள் கடனுதவிகளை  நிறையவே  செய்கின்றன. 

ஆனால் எல்லாவற்றையும் விட நமது மக்களின் முயற்சிகள் அதிகரிக்க வேண்டும்.  வேலை வாய்ப்புக்கள் குறைவாக இருக்கும் காலகட்டத்தில்  நாம் சொந்தத் தொழிலில் இறங்குவது காலத்தின் கட்டாயம்.

தொழில் என்பது நமக்குப் புதிதல்ல. தொடக்க காலத்திலிருந்தே நாம் தொழில் செய்து வந்திருக்கிறோம்.  உண்மையில் நாம் வியாபார சமூகம். சீனர்கள் நமது செட்டியார்களிடம் கடன் வாங்கித்தான் தங்களது தொழில்களை ஆரம்பித்தார்கள் என்று இன்றளவும் சொல்லத்தான் செய்கிறோம்.  அவர்களைச் சுட்டிக்காட்டியதோடு நாம் திருப்தியடைந்து விட்டோம்!  நாம் எதையும் அசைத்துப் பார்க்கவில்லை!

எப்படியோ வர்த்தக சம்மேளனம் தனது முயற்சியைத் தொடர்ந்து  மேற்கொள்ளும் என நம்பலாம்.  அதைவிட நமது முயற்சியே முக்கியம் வாய்ந்தது என்பதையும் மறக்க வேண்டாம். நாம் ஒரு வர்த்தக சமூகமாக மாற வேண்டும்.  மாற முடியும்.