இந்தியர்களின் பொருளாதார பங்குடைமை உயர்வு காண வேண்டும் என்பதில் நமக்கு எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.
ஆனால் இப்படிச் சொல்லும் போதே நமக்கு ஓர் ஒவ்வாமை வருகிறது! என்ன செய்வது? இப்படி எல்லாம் சொல்லி நமது அரசியல்வாதிகள் இந்திய சமூகத்தை படுபாதாளத்திற்குத் தள்ளி விட்டுவிட்டனர்! அப்போது அவர்கள் "தங்களின்" பொருளாதார நிலையை உயர்த்துவதற்காகத்தான் அப்படிச் சொன்னார்கள் என்பதைப் புரிந்து கொள்ளவே பல ஆண்டுகள் பிடித்துவிட்டன! அவர்களும் இந்தியர்கள் தானே, குறை சொல்ல வழியில்லை!
இப்போது அதே பிரச்சனையை அரசியல் அல்லாதவர்கள் பேசியிருக்கிறார்கள். நல்ல சகுனம் தான். கோலாலம்பூர் மற்றும் புத்ராஜயா இந்திய வர்த்தக சம்மேளனம் இந்தப் பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கிறது.
நாம் இன்றளவில் பங்குச் சந்தையில் 1.1. விழுக்காடு என்றளவில் தான் இருக்கிறோம். அட! எத்தனை காலம் தான் இப்படியே இருக்கப் போகிறோம்? எத்தனை காலம் தான் நாம் இப்படியே சொல்லிக் கொண்டே இருக்கப் போகிறோம்? துன் சாமிவேலு காலத்திலிருந்து இதுவரை நிலைமை மாறவில்லை. அன்றிருந்த நிலை தான் இன்றும்.
யாரால் இதனை மாற்ற முடியும்? வர்த்தக சங்கம் தான் முயற்சிகளை எடுக்க வேண்டும். சிறு தொழில்கள் செய்வதற்கான சூழல்கள் சிறப்பாகவே இருக்கின்றன.. மித்ரா அமைப்பு தனது கதவுகளை மூடிவிட்டாலும் தெக்கூன் போன்ற அமைப்புகள் கடனுதவிகளை நிறையவே செய்கின்றன.
ஆனால் எல்லாவற்றையும் விட நமது மக்களின் முயற்சிகள் அதிகரிக்க வேண்டும். வேலை வாய்ப்புக்கள் குறைவாக இருக்கும் காலகட்டத்தில் நாம் சொந்தத் தொழிலில் இறங்குவது காலத்தின் கட்டாயம்.
தொழில் என்பது நமக்குப் புதிதல்ல. தொடக்க காலத்திலிருந்தே நாம் தொழில் செய்து வந்திருக்கிறோம். உண்மையில் நாம் வியாபார சமூகம். சீனர்கள் நமது செட்டியார்களிடம் கடன் வாங்கித்தான் தங்களது தொழில்களை ஆரம்பித்தார்கள் என்று இன்றளவும் சொல்லத்தான் செய்கிறோம். அவர்களைச் சுட்டிக்காட்டியதோடு நாம் திருப்தியடைந்து விட்டோம்! நாம் எதையும் அசைத்துப் பார்க்கவில்லை!
எப்படியோ வர்த்தக சம்மேளனம் தனது முயற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ளும் என நம்பலாம். அதைவிட நமது முயற்சியே முக்கியம் வாய்ந்தது என்பதையும் மறக்க வேண்டாம். நாம் ஒரு வர்த்தக சமூகமாக மாற வேண்டும். மாற முடியும்.
No comments:
Post a Comment