Friday, 10 November 2017

கேள்வி - பதில் (64)


கேள்வி

தமிழக அரசியலில் கமல்ஹாசனின் நிலை என்ன?

பதில்

இன்னும் எதனையும் அவர் உறுதியாகச் சொல்லவில்லை.  "இதோ வந்து விட்டேன்" என்கிறார்! "இன்னுமா உங்களால் என்னைப் புரிந்து கொள்ள முடியவில்லை?"  என்று கேள்வி கேட்கிறார்! "மக்களைக் கேட்டுவிட்டு சொல்லுகிறேன்" என்கிறார்!  ஆனாலும் "நான் வருகிறேன்" என்று இதுவரை உறுதிப் படுத்தவில்லை.  வழக்கம் போல எல்லாரையும் குழப்புகிறார். 

ஆனாலும் அவரை நாம் குற்றம் சொல்ல முடியாது. அவர் சினிமாத்துறையைச் சார்ந்தவர். பல கோடிகள் புரளும் ஒரு மாபெரும் துறை அது. லாபம் நஷ்டம் என்று பலவற்றைப் பார்த்துவிட்டார். வெற்றிகள் பலவற்றைக் கண்டவர். தோல்விகளையும் சந்தித்தவர்,  வெற்றி, தோல்வி என்பதைவிட அந்தத் துறையை மிகவும் நேசித்தவர். தான் நினைத்ததைச் சொல்ல சினிமாவைப் பயன்படுத்தியவர். 

தான் நேசித்த ஒரு தொழிலை சும்மா அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்து விட முடியாது. அரசியல் களம் என்பது வேறு. சும்மா டுவிட் பண்ணலாம். குறைகள் சொல்லலாம். களத்தில் இறங்குவது என்பது வேறு. அரசியலில் நாகரிகமற்றவர்கள் குடும்பப் பிரச்சனைகளை எல்லாம் எழுப்புவர். அதனையெல்லாம்  அவர் எதிர்நோக்க வேண்டும். ஆனால் இதனையெல்லாம் ஏற்கனவே அவர் அனுபவித்து விட்டவர்.  தோலும் தடித்து விட்டது. அதனால் எதுவும் உறைக்காது!

ஆனால் நம்மைப் பொறுத்தவரை அவரால் தமிழகத்திற்கு என்ன லாபம் என்று தான் சராசரியான தமிழர்களின் கேள்வி. வெள்ளம்  ஏறுதல், குப்பைக் குவியல்கள் என்பதெல்லாம் ஒரு பக்கம்.  அது மட்டும் தாம் பிரச்சனைகள் என்பதல்ல. விவசாயம் உயிர் பெற வேண்டும். மீனவர்கள் பிரச்சனை.  கலாச்சாரம், தமிழ் மொழி மீதான பிரச்சனைகள் - இவைகளெல்லாம் சரி செய்யப்பட வேண்டும். இந்தப் பிரச்சனைகள் மீது அவர் இன்னும் வாய்த் திறக்கவில்லை!

ஒன்று மட்டும் தெளிவு. அவர் முதலைமச்சர் ஆக வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். அவரின் தன்னம்பிக்கை எனக்குப் பிடித்திருக்கிறது. அது முடியுமா, முடியாதா என்பது   பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

முடிந்தால், நமது வாழ்த்துகள்!


காந்திய வழியில் குமரி ஆனந்தன்...?


 

குமரி ஆனந்தன் தமிழகக் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். வயது 86. சமீபத்தில் நல்ல நோக்கத்திற்காக பாதயாத்திரை சென்றவர். ஆனாலும் அவரால் 380 கிலோமீட்டருக்கு மேல் செல்ல முடியாமல்,  இடையிலேயே பாதயாத்திரையைக் கைவிட்டவர். அத்தோடு உண்ணாவிரதம் வேறு. இப்போது  சோர்வு, உடல் தளர்ச்சி, வயது மூப்பின் காரணமாக ராயப்பேட்டை அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஓய்வு எடுத்து வருகிறார்.

குமரி ஆனந்தன் அவர்கள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் என்னும் முறையில்  மாதம் ரூபாய் 32,000 ஓய்வுதியமாகப் பெறுகிறார்.  அரசாங்க வாடகை வீட்டில் ருபாய் 4,000  வாடகைக் கொடுத்து  வசித்து வருகிறார்.

இவர் அரசாங்க மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதில் அப்படி என்ன விசேஷம்? இவர் மகள் பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன். அவர் ஒரு டாக்டர். தமிழிசையின் கணவர் சௌந்திரராஜன் ஒரு டாக்டர். குமரி ஆனந்தனின் பேரப்பிள்ளைகள் அனைவரும் டாகடர்கள். அத்தோடு இவரின்  சகோதரர் வசந்த் & கோ நிறுவனத்தின் வசந்தகுமார் தமிழ் நாட்டின் கோடிஸ்வரர்களில் ஒருவர்.

ஆக இத்தனை வசதிகளும் வாய்ப்புக்களும் இருந்தும் அவர் ஒரு தனி ஆளாக வாடகை வீட்டில்  வசித்து வருவது என்பது ஆச்சரியம் தானே!  அதற்கு  அவர் சொல்லும் காரணம்  அவரவர் அவர்கள்  வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நான் எனது வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  எந்த இடைஞ்சலும் இல்லை என்கிறார்.

அவருடைய சூழலில் அரசாங்க மருத்துவமனை என்பது .......எப்படி?  என்று கேட்டால்:  சிறப்பாகவே இயங்குகிறது. நன்றாகக் கவனித்துக் கொள்ளுகிறார்கள். பொது மக்கள் தொடர்ந்து  அரசு மருத்துவமனைகளுக்கு  ஆதரவு கொடுக்க வேண்டும் என்கிறார். எந்த அரசியல்வாதியும் அவருடைய  அலோசனையைக் கேட்கமாட்டார்கள் என்பது அவருக்கு மட்டும் அல்ல, நமக்கும் தெரியும்! அத்தோடு பொது மக்களை அரசு மருத்துவமனைகள் நல்ல முறையில் கவனித்துக் கொள்ள வேண்டுமென்றால் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தமிழிசை இருக்க வேண்டும் அல்லது வசந்தகுமார் இருக்க வேண்டும்!

எப்படி இருப்பினும் காந்தீய வழியில் அவர் அரசு மருத்துவமனையைத் தேர்ந்து எடுத்ததற்காக வாழ்த்துகிறேன். குறைந்தபட்சம் அவர் அந்த மருத்துவமனையில் இருக்கும் வரை மற்ற நோயாளிகளும் பயன் பெறுவார்கள் என்பதும் உண்மை! அரசு மருத்துவமனையை அவரைப் போன்ற அரசியல்வாதிகள் தேர்ந்து எடுப்பது மகிழ்ச்சியான செய்தி.  மற்ற அரசியல்வாதிகளும் அவரைப் பின்பற்ற வேண்டும் என்பதே நமது அவா!


Tuesday, 7 November 2017

தாளடி பணிந்தேன், டாக்டர்!



இந்தியா, ஓடிஷா மாநிலத்தில் ஓர் அபூர்வாமான சம்பவம். மனிதம் செத்துவிட்டது என்று சொல்லும் இந்தக் காலக்கட்டத்தில் "அப்படியெல்லாம் இல்லை, அது  இன்னும் உயிர்  வாழ்கிறது"  என்று சொல்லும்படியான  ஒரு சம்பவம்.


எந்த மருத்துவ வசதியும் இல்லாத ஒரு கிராமம், சாரிகேத்தா. ஒரளவு வசதிகள் உள்ள  மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென்றால் பத்து கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும். ஆனால் பாதைகள் இல்லை.  சேறும், சகதியும், ஆறுகளையும் கடந்து செல்ல வேண்டும்.  டாக்டர் ஓம்கார் ஹோட்டா சமீபத்தில் தான் மாவட்ட சுகாதார மையத்தின் பொறுப்பாளாராக நியமிக்கப்பட்டிருந்தார்.  அன்று காலை வழக்கம் போல வேலைக்குப் போன போது அவருக்கு தொலைப்பேசி அழைப்பு காத்துக் கொண்டிருந்தது.  மலைப் பிரதேச கிராமம் ஒன்றில் வசிக்கும்,  சுபம் மார்சே, என்னும் பெண் பிரசவத்திற்குப் பின்னர் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தார். இரத்தப்போக்கு  நின்றபாடில்லை.       

செய்தியை அறிந்த டாக்டர் ஓம்கார் தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு, தனது உதவியாளருடன், அந்தக் கிராமத்திற்கு  விரைந்தார்.  ஆனால் அவரால் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. மருத்துவமனைக்கு உடனடியாகச் செல்ல வேண்டிய நிலையில் அந்தத் தாய் இருந்தார்.   ஆனால் ஆம்பலன்ஸோ வேறு எந்த வாகன வசதிகளோ அங்கு இல்லை. கிராம மக்களும் ஒத்துழைக்காத சூழ்நிலையில் அவரும் அந்தப் பெண்ணின் கணவரும் அந்தப் பெண்ணை ஒரு கட்டிலில் கிடத்தி இருவரும் சேர்ந்து மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர்.  சேறும் சகதியும் நிறைந்த 10 கிலோமீட்டர் தூரம். மூன்று மணி நேரப் பயணம் கட்டிலைத் தூக்கிக் கொண்டு!    

உயிருக்குப் போராடிய அந்தப் பெண்ணுக்கு 18 மணி நேர தீவிர சிகிச்சை கொடுத்த பின்னர் இப்போது தாயும் சேயும் அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டனர். 

இப்படியும் ஒரு டாக்டரா என்று நாமும் அதிசயிக்கிறோம்.  பணத்தை மட்டுமே குறியாகக் கொண்டு இயங்கும் இந்த நவ நாகரிகக் காலத்தில் இவரின் காலில் விழுந்து நானும் வணங்குகிறேன். இது ஒரு சாதாரண விஷயமாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது. இவர் நீண்ட காலம் வாழ்ந்து மக்களுக்குத் தனது சேவைகளைத் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.    

உமது தாளடி பணிந்தேன், டாக்டர்!