கேள்வி
தமிழக அரசியலில் கமல்ஹாசனின் நிலை என்ன?
பதில்
இன்னும் எதனையும் அவர் உறுதியாகச் சொல்லவில்லை. "இதோ வந்து விட்டேன்" என்கிறார்! "இன்னுமா உங்களால் என்னைப் புரிந்து கொள்ள முடியவில்லை?" என்று கேள்வி கேட்கிறார்! "மக்களைக் கேட்டுவிட்டு சொல்லுகிறேன்" என்கிறார்! ஆனாலும் "நான் வருகிறேன்" என்று இதுவரை உறுதிப் படுத்தவில்லை. வழக்கம் போல எல்லாரையும் குழப்புகிறார்.
ஆனாலும் அவரை நாம் குற்றம் சொல்ல முடியாது. அவர் சினிமாத்துறையைச் சார்ந்தவர். பல கோடிகள் புரளும் ஒரு மாபெரும் துறை அது. லாபம் நஷ்டம் என்று பலவற்றைப் பார்த்துவிட்டார். வெற்றிகள் பலவற்றைக் கண்டவர். தோல்விகளையும் சந்தித்தவர், வெற்றி, தோல்வி என்பதைவிட அந்தத் துறையை மிகவும் நேசித்தவர். தான் நினைத்ததைச் சொல்ல சினிமாவைப் பயன்படுத்தியவர்.
தான் நேசித்த ஒரு தொழிலை சும்மா அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்து விட முடியாது. அரசியல் களம் என்பது வேறு. சும்மா டுவிட் பண்ணலாம். குறைகள் சொல்லலாம். களத்தில் இறங்குவது என்பது வேறு. அரசியலில் நாகரிகமற்றவர்கள் குடும்பப் பிரச்சனைகளை எல்லாம் எழுப்புவர். அதனையெல்லாம் அவர் எதிர்நோக்க வேண்டும். ஆனால் இதனையெல்லாம் ஏற்கனவே அவர் அனுபவித்து விட்டவர். தோலும் தடித்து விட்டது. அதனால் எதுவும் உறைக்காது!
ஆனால் நம்மைப் பொறுத்தவரை அவரால் தமிழகத்திற்கு என்ன லாபம் என்று தான் சராசரியான தமிழர்களின் கேள்வி. வெள்ளம் ஏறுதல், குப்பைக் குவியல்கள் என்பதெல்லாம் ஒரு பக்கம். அது மட்டும் தாம் பிரச்சனைகள் என்பதல்ல. விவசாயம் உயிர் பெற வேண்டும். மீனவர்கள் பிரச்சனை. கலாச்சாரம், தமிழ் மொழி மீதான பிரச்சனைகள் - இவைகளெல்லாம் சரி செய்யப்பட வேண்டும். இந்தப் பிரச்சனைகள் மீது அவர் இன்னும் வாய்த் திறக்கவில்லை!
ஒன்று மட்டும் தெளிவு. அவர் முதலைமச்சர் ஆக வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். அவரின் தன்னம்பிக்கை எனக்குப் பிடித்திருக்கிறது. அது முடியுமா, முடியாதா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
முடிந்தால், நமது வாழ்த்துகள்!
No comments:
Post a Comment