Friday 10 November 2017

காந்திய வழியில் குமரி ஆனந்தன்...?


 

குமரி ஆனந்தன் தமிழகக் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். வயது 86. சமீபத்தில் நல்ல நோக்கத்திற்காக பாதயாத்திரை சென்றவர். ஆனாலும் அவரால் 380 கிலோமீட்டருக்கு மேல் செல்ல முடியாமல்,  இடையிலேயே பாதயாத்திரையைக் கைவிட்டவர். அத்தோடு உண்ணாவிரதம் வேறு. இப்போது  சோர்வு, உடல் தளர்ச்சி, வயது மூப்பின் காரணமாக ராயப்பேட்டை அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஓய்வு எடுத்து வருகிறார்.

குமரி ஆனந்தன் அவர்கள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் என்னும் முறையில்  மாதம் ரூபாய் 32,000 ஓய்வுதியமாகப் பெறுகிறார்.  அரசாங்க வாடகை வீட்டில் ருபாய் 4,000  வாடகைக் கொடுத்து  வசித்து வருகிறார்.

இவர் அரசாங்க மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதில் அப்படி என்ன விசேஷம்? இவர் மகள் பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன். அவர் ஒரு டாக்டர். தமிழிசையின் கணவர் சௌந்திரராஜன் ஒரு டாக்டர். குமரி ஆனந்தனின் பேரப்பிள்ளைகள் அனைவரும் டாகடர்கள். அத்தோடு இவரின்  சகோதரர் வசந்த் & கோ நிறுவனத்தின் வசந்தகுமார் தமிழ் நாட்டின் கோடிஸ்வரர்களில் ஒருவர்.

ஆக இத்தனை வசதிகளும் வாய்ப்புக்களும் இருந்தும் அவர் ஒரு தனி ஆளாக வாடகை வீட்டில்  வசித்து வருவது என்பது ஆச்சரியம் தானே!  அதற்கு  அவர் சொல்லும் காரணம்  அவரவர் அவர்கள்  வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நான் எனது வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  எந்த இடைஞ்சலும் இல்லை என்கிறார்.

அவருடைய சூழலில் அரசாங்க மருத்துவமனை என்பது .......எப்படி?  என்று கேட்டால்:  சிறப்பாகவே இயங்குகிறது. நன்றாகக் கவனித்துக் கொள்ளுகிறார்கள். பொது மக்கள் தொடர்ந்து  அரசு மருத்துவமனைகளுக்கு  ஆதரவு கொடுக்க வேண்டும் என்கிறார். எந்த அரசியல்வாதியும் அவருடைய  அலோசனையைக் கேட்கமாட்டார்கள் என்பது அவருக்கு மட்டும் அல்ல, நமக்கும் தெரியும்! அத்தோடு பொது மக்களை அரசு மருத்துவமனைகள் நல்ல முறையில் கவனித்துக் கொள்ள வேண்டுமென்றால் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தமிழிசை இருக்க வேண்டும் அல்லது வசந்தகுமார் இருக்க வேண்டும்!

எப்படி இருப்பினும் காந்தீய வழியில் அவர் அரசு மருத்துவமனையைத் தேர்ந்து எடுத்ததற்காக வாழ்த்துகிறேன். குறைந்தபட்சம் அவர் அந்த மருத்துவமனையில் இருக்கும் வரை மற்ற நோயாளிகளும் பயன் பெறுவார்கள் என்பதும் உண்மை! அரசு மருத்துவமனையை அவரைப் போன்ற அரசியல்வாதிகள் தேர்ந்து எடுப்பது மகிழ்ச்சியான செய்தி.  மற்ற அரசியல்வாதிகளும் அவரைப் பின்பற்ற வேண்டும் என்பதே நமது அவா!


No comments:

Post a Comment