Tuesday, 2 August 2022

ஏன் ஏமாற்றப்படுகிறோம்?

 

மெட்ரிகுலேஷன் கல்வி என்றாலே நமக்குத் தெரிந்ததெல்லாம் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி அந்த கல்வியை நம் இந்திய மாணவர்கள்  கற்க முடியாதபடி தடை செய்வது தான். . தடையாக இருப்பது கல்வி அமைச்சு!

என்ன காரணமாக இருக்க முடியும்?  வெளிப்படையாக எந்த காரணமும் சொல்லப்படவில்லை. உள்ளுக்குள் ஏதோ காரணங்கள் இருக்கின்றன. அதனைக் கல்வி அமைச்சால் வெளிப்படுத்த முடியவில்லை! இரகசியக் காரணங்கள் இருக்கலாம்! இருக்கட்டும்!

கல்வி அமைச்சின் மௌனம் நமக்குப்  பல்வேறு வகையான சந்தேகங்களை எழுப்புகிறது! மெட் ரிகுலேஷன் கல்விக்குப் புறக்கணிக்கப்பட்ட இந்திய மாணவரகள் பெரும்பாலும் நல்ல மார்க் வாங்கி வெற்றி பெற்றிருக்கின்றனர். அவர்கள் அந்த கல்வியைப் பெற எல்லாத் தகுதிகளும் அவர்களுக்கு உண்டு.

இங்கு நாம் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். நல்ல மார்க் வாங்குபவர்கள் இந்திய மாணவர்கள் மட்டும் அல்ல. மலாய், சீன மாணவர்களும் நல்ல மார்க்குகளைப் பெற்று தகுதி பெற்றிருக்கின்றனர். அவர்கள் எல்லாம் புறக்கணிக்கப்படவில்லை. இதில் ஏன் இந்திய மாணவர்கள் மட்டும் புறக்கணிக்கப்படுகின்றனர் என்கிற கேள்வி இயற்கையாகவே எழுகிறது.

கல்வி இப்போது வியாபாரமயமாகி விட்டது என்பது பொதுவான கருத்து. அதனை மறுக்க முடியாது. இந்த வியாபாரமயமானதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இந்தியர்கள் தான்.

இந்திய மாணவர்கள் எல்லாத் துறைகளிலும் புறக்கணிக்கப்படுகின்றனர். அவர்கள் எந்த பாடங்களை எடுத்து படிக்க விரும்புகிறார்களோ அவர்களுக்கு அது  கிடைப்பதில்லை. விரும்பாத துறைகளில் அவர்கள் திணிக்கப்படுகின்றனர். இந்த புறக்கணிப்பினால் அவர்கள் பெரும்பாலும் தனியார் கல்லூரிகளை நாட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். அதனால் தான் மருத்துவம் படிக்க இந்திய மாணவர்கள் வெளி நாடுகளுக்கெல்லாம் போய் மருத்துவம் பயில்கின்றனர்.  உள்ளுரில் அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

வெளிநாடுகளில், உள்ளூர் தனியார் பல்கலைக்கழகங்களில் ஏராளமான இந்திய மாணவர்கள் கல்வி கற்பதற்குக் காரணம்  அவர்கள் தேர்ந்தெடுக்கும் கல்வி இங்குக் கிடைப்பதில்லை.  கல்வி அமைச்சு அவர்கள் விரும்பும்  கல்விக்கு எல்லா வகையிலும் தடையாக இருக்கிறது! அதனால் தான் அவர்கள் தனியார் நிறுவனங்களில் கல்வி கற்கின்றனர்.

இப்படிப் படிக்கும் மாணவர்கள் எல்லாம் பெரும் செல்வந்தர் குடும்பங்களிலிருந்து வருபவர்கள் இல்லை. எல்லாம் சராசரி குடும்பங்களிலிருந்து வருபவர்கள் தான். அவர்களுக்குக் கைகொடுப்பதெல்லாம் உபகாரச்சம்பளம், கல்விக்கடன்  போன்றவை.  அப்படித்தான் அவர்கள் பிழைப்பு நடந்து கொண்டிருக்கிறது!

இதனைத்தான் கல்வி அமைச்சு தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.  மெட்ரிகுலேஷன் கல்வி மறுக்கப்பட்டால் இந்திய மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் கல்வியைத் தொடர்வார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். சொத்துகளை விற்றாவது இந்தியர்கள் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைப்பார்கள் என்பதை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். 

ஆனால் கல்வி அமைச்சு இதனையே சாக்காக வைத்து காலத்தை தள்ளிக் கொண்டிருக்க முடியாது. நாம் சொல்ல வருவதெல்லாம் ஒன்று: திறமையின் அடிப்படையில் எடுங்கள் அல்லது  எண்ணிக்கை அடிப்படையில் எடுங்கள் என்பது தான்.

இதற்குச் சரியான ஒரு முடிவை அரசாங்கம் எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்!

Monday, 1 August 2022

நல்லவர்கள் வருவார்கள்!

 

சமூக ஆர்வலர்கள் பலர், வருகின்ற பொதுத் தேர்தலில், சரியான பிரதிநிதிகள் இந்திய சமூகத்திற்குத்  தேவை என்று பேச ஆரம்பித்திருக்கின்றனர்.

இப்படிப் பேசுவதே நல்லதொரு முன்னேற்றம். இப்போது நம்முடைய கவனம் எல்லாம் நல்லவர்கள், நல்லது செய்ய முனைப்பு உள்ளவர்கள்,   நமது சமுதாயம் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள் -  பதவிக்கு வரவேண்டும் என்று நினைப்பதில நம் அனைவருக்குமே மகிழ்ச்சி என்பதில் சந்தேகமில்லை.

துங்கு அப்துல் ரஹ்மான், வீ.தீ.சம்பந்தன், டான் செங் லோக் போன்ற பெரிய மனிதர்களால் இந்த நாடு உருவாக்கப்பட்டது.

குறிப்பாக இந்திய சமூகத்தின் மாபெரும் தலைவர் என்றால் அது துன் வீ.தீ.சம்பந்தன் தான். அவரைப்போன்ற நேர்மையான, ஒழுக்கமான ஒரு தலைவர் அவருக்குப் பிறகு இந்த சமூகம் பார்த்ததில்லை. அந்த நேர்மை, உண்மை என்பதெல்லாம் அவரோடு போய்விட்டது.

அடுத்த 15-வது பொதுத்தேர்தல் எந்த நேரத்திலும் வரலாம் என்று சொல்லப்படுகின்ற ஒரு நேரத்தில் நாம் இருக்கிறோம்.

துன் வீ.தீ.சம்பந்தன் அவர்களுக்குப் பிறகு இந்திய சமுதாயத்தைப் பிரதிநிதித்தவர்கள் அவர் போட்ட கோட்டில் யாரும் போகவில்லை. இனி கோடு வேண்டாம்,  கோட்டை தான் வேண்டும் என்கிற நினைப்பில் இந்திய சமுதாயத்தைக் காட்டிக் கொடுக்கும் வேலையில் ஈடுபாடு காட்டினர்! அவர்களை உயர்த்திக் கொண்டு சமுதாயத்தை சாக்கடைக்குள் தள்ளிவிட்டனர்!

ஆனால் இந்த நரகாசுரனின் காலங்களிலும் அடித்துப் பிடித்துத் தான் நாம் ஒவ்வொரு  அங்குலமாக  வளர்ந்திருக்கிறோம்.

ஆனால் வருகின்ற பொதுத்தேர்தலில் நமது வலிமையை நாம் காட்டுவோம் என்பது நிச்சயம். நமக்கு நல்ல வலிமை தரும் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைவார்கள் என்பது நிச்சயம்.

நம்மைப்  பொறுத்தவரை  இந்த சமுதாயத்தை யாரும்  தூக்கிச்சுமக்க வேண்டிய அவசியமில்லை. அதனையெல்லாம் நாம்  கடந்து வந்துவிட்டோம்.  இத்தனை ஆண்டுகள் நமது தலைவர்கள் செய்த துரோகம் நமக்கு நல்ல பாடத்தை கற்றுக் கொடுத்துவிட்டது. தலைவர்கள் கொடுத்த இடைஞ்சல்களிலிருந்து மீறி  நாம் பூதாகரமாக வளர்ந்து கொண்டிருக்கிறோம்.

ஒரு சில பிரச்சனைகளுக்கு நாம் நிரந்தர தீர்வு காண வேண்டியுள்ளது. சான்றுக்கு மெட்ரிகுலேஷன் கல்வி,  இந்தியர்களின் குடியுரிமை - இது போன்ற பிரச்சனைகள் தீர்க்கபட வேண்டும். இதற்கு நல்ல தலைமத்துவம் தேவை.

அடுத்த பொதுத்தேர்தலில் நாம் நல்லவர்களைத்தான் தேர்ந்தெடுப்போம். துன் சம்பந்தன் அவர்களின்  பொற்காலம் மீண்டும் வரவேண்டும். நமது வாழ்க்கையில் நல்ல மலர்ச்சி ஏற்படும்! நம்புவோம்!

Sunday, 31 July 2022

மலேசிய குடும்பம்!

 

மலேசிய குடும்பம் என்றால் என்ன? மக்களிடையே ஒற்றுமை, புரிந்தணர்வு, திருப்தி - இப்படி  ஒரு விளக்கத்தைக்  கொடுத்திருக்கிறார் பிரதமர். அது மட்டும் அல்ல அதன் பொருளை இன்னும் விரிவுபடுத்தலாம்.

பிரதமரின் அறிவுரையை, ஆலோசனையை நல்ல எண்ணத்துடன் நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

இந்த அறிவுரை எல்லா மலேசியர்களுக்கும் தான்  ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு அல்ல. அப்படி இருக்கவும் முடியாது.

பிரதமர் நல்ல எண்ணத்துடன் தான்  இதனைச் சொல்லுகிறார் என்பதிலே நமக்குச் சந்தேகமில்லை. ஆனால் ஒரு சில விஷயங்களில் இந்த ஒற்றுமையை, நல்லெண்ணத்தைக் -  கெடுப்பது போன்று ஒரு சில விஷயங்கள் நடக்கின்றன. அது பிரதமரின் பொறுப்பல்ல என்று ஒதுக்கிவிட முடியாது.

சான்றுக்கு இப்போது இந்தியரிடையே மிகவும் பேசுபொருளாக இருப்பது மெட்ரிகுலேஷன் கல்வித்தேர்வு தான். இந்த கல்வி இந்திய மாணவர்களுக்கு புறக்கணிக்கப்படுகிறது என்பது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் காலத்தில்  ஒரு சில வரம்புகளை வைத்திருந்தார்.   அது  பெரிதாக ஒன்றும்  வரவேற்கப் படவில்லை என்றாலும் ஓர் அளவுகோல் இருந்தது. குறைந்தபட்சம் அதாவது கிடைக்கிறதே என்கிற ஒரு திருப்தி இருந்தது. அந்த எண்ணிக்கையைக் கூட்டுவதற்கு அதன் பின்னர் எவ்வளவோ வாய்ப்புக்கள் இருந்தும் அதனை ம.இ.கா. வழக்கம் போல பயன்படுத்திக் கொள்ளவில்லை.  ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.  இந்தியர்களுக்குப் பிரச்சனை என்று வரும்போது  ம.இ.கா. பின்வாங்குவது வழக்கமான ஒன்று தான்!

நாம் சொல்ல வருவதெல்லாம் மலேசிய குடும்பம் என்றால் அது இந்தியர்களையும் சேர்த்துத் தான் என்பதாக நாம் எடுத்துக் கொள்கிறோம். அப்படித்தான் பிரதமர் சொன்னதாக  நாம் அர்த்தப்படுத்திக்  கொள்கிறோம். அது பிரதமர் கருத்து மட்டும் தானா அல்லது அரசாங்கத்தின் ஒட்டு மொத்தக் கருத்தா என்பதிலே நாம் ஐயுறுகிறோம்.

மெட்ரிகுலேஷன் கல்வி என்று வரும் போது பிரதமருக்கு எந்த சம்பந்தமும் இல்லையா என்கிற கேள்வி நமக்கு எழுகிறது. கல்வி அமைச்சுக்கு மட்டும் அப்படி என்ன  தனி உரிமை, தனி அந்தஸ்து - அவர்களுக்கு அப்படி என்ன இந்தியர்களின் மேல் வெறுப்பு? கல்வி அமைச்சுக்கு மட்டும் "மலேசிய குடும்பம்" என்பதில் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லையோ!

உண்மையைச் சொன்னால் மலேசிய குடும்பத்தை உடைக்கும் முயற்சியில்  கல்வி அமைச்சு ஈடுபட்டிருப்பதாகவே நமக்குத் தோன்றுகிறது. உடைந்த குடும்பத்தை எப்படி ஒன்று சேர்ப்பது?

இதோ மேலே படத்தில் ஒரு குடும்பம் உடைந்து கொண்டிருக்கிறது. குடும்பம் உடைந்தால் நீங்கள் கனவு காணும் "மலேசிய குடும்பம்" ஒன்று சேர வாய்ப்பில்லை!  உங்களுக்கும் அதனைப் பார்க்க வாய்ப்பில்லாமல் போய்விடும்!

மலேசிய குடும்பம் தொடர்ந்து ஒன்றுபடுவது உங்கள் கையில்!