சமூக ஆர்வலர்கள் பலர், வருகின்ற பொதுத் தேர்தலில், சரியான பிரதிநிதிகள் இந்திய சமூகத்திற்குத் தேவை என்று பேச ஆரம்பித்திருக்கின்றனர்.
இப்படிப் பேசுவதே நல்லதொரு முன்னேற்றம். இப்போது நம்முடைய கவனம் எல்லாம் நல்லவர்கள், நல்லது செய்ய முனைப்பு உள்ளவர்கள், நமது சமுதாயம் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள் - பதவிக்கு வரவேண்டும் என்று நினைப்பதில நம் அனைவருக்குமே மகிழ்ச்சி என்பதில் சந்தேகமில்லை.
துங்கு அப்துல் ரஹ்மான், வீ.தீ.சம்பந்தன், டான் செங் லோக் போன்ற பெரிய மனிதர்களால் இந்த நாடு உருவாக்கப்பட்டது.
குறிப்பாக இந்திய சமூகத்தின் மாபெரும் தலைவர் என்றால் அது துன் வீ.தீ.சம்பந்தன் தான். அவரைப்போன்ற நேர்மையான, ஒழுக்கமான ஒரு தலைவர் அவருக்குப் பிறகு இந்த சமூகம் பார்த்ததில்லை. அந்த நேர்மை, உண்மை என்பதெல்லாம் அவரோடு போய்விட்டது.
அடுத்த 15-வது பொதுத்தேர்தல் எந்த நேரத்திலும் வரலாம் என்று சொல்லப்படுகின்ற ஒரு நேரத்தில் நாம் இருக்கிறோம்.
துன் வீ.தீ.சம்பந்தன் அவர்களுக்குப் பிறகு இந்திய சமுதாயத்தைப் பிரதிநிதித்தவர்கள் அவர் போட்ட கோட்டில் யாரும் போகவில்லை. இனி கோடு வேண்டாம், கோட்டை தான் வேண்டும் என்கிற நினைப்பில் இந்திய சமுதாயத்தைக் காட்டிக் கொடுக்கும் வேலையில் ஈடுபாடு காட்டினர்! அவர்களை உயர்த்திக் கொண்டு சமுதாயத்தை சாக்கடைக்குள் தள்ளிவிட்டனர்!
ஆனால் இந்த நரகாசுரனின் காலங்களிலும் அடித்துப் பிடித்துத் தான் நாம் ஒவ்வொரு அங்குலமாக வளர்ந்திருக்கிறோம்.
ஆனால் வருகின்ற பொதுத்தேர்தலில் நமது வலிமையை நாம் காட்டுவோம் என்பது நிச்சயம். நமக்கு நல்ல வலிமை தரும் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைவார்கள் என்பது நிச்சயம்.
நம்மைப் பொறுத்தவரை இந்த சமுதாயத்தை யாரும் தூக்கிச்சுமக்க வேண்டிய அவசியமில்லை. அதனையெல்லாம் நாம் கடந்து வந்துவிட்டோம். இத்தனை ஆண்டுகள் நமது தலைவர்கள் செய்த துரோகம் நமக்கு நல்ல பாடத்தை கற்றுக் கொடுத்துவிட்டது. தலைவர்கள் கொடுத்த இடைஞ்சல்களிலிருந்து மீறி நாம் பூதாகரமாக வளர்ந்து கொண்டிருக்கிறோம்.
ஒரு சில பிரச்சனைகளுக்கு நாம் நிரந்தர தீர்வு காண வேண்டியுள்ளது. சான்றுக்கு மெட்ரிகுலேஷன் கல்வி, இந்தியர்களின் குடியுரிமை - இது போன்ற பிரச்சனைகள் தீர்க்கபட வேண்டும். இதற்கு நல்ல தலைமத்துவம் தேவை.
அடுத்த பொதுத்தேர்தலில் நாம் நல்லவர்களைத்தான் தேர்ந்தெடுப்போம். துன் சம்பந்தன் அவர்களின் பொற்காலம் மீண்டும் வரவேண்டும். நமது வாழ்க்கையில் நல்ல மலர்ச்சி ஏற்படும்! நம்புவோம்!
No comments:
Post a Comment