Sunday, 2 July 2023

ஊழலா? தொடரட்டும்!

 

ஊழல் என்பது நாட்டின் மிகப்பெரும் பிரச்சனை. இதனை நாம் அறிந்துதான்  இருக்கிறோம்.

ஆனால் இதுநாள் வரை அரசாங்கம் அதுபற்றி கவலைப்படவில்லை! காரணம் அது ஊழல்வாதிகளால் நடத்தப்பட்ட அரசாங்கம்!

இப்போது இந்த ஒற்றுமை அரசாங்கத்தில், பிரதமர் அன்வார் இப்ராகிம், தன்னால் ஊழலை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் ஊழல் பேர்வழிகளின் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நடவடிக்கை என்னும் போது அதில் ஒற்றுமை அரசாங்கத்தில் பதவி வகிப்பவர்களும் அடங்குவர்!

இங்கு தான் பிரச்சனை ஆரம்பமாகிறது. இந்த ஊழல்வாதிகள் அனைவரும் சேர்ந்து இந்த ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்று  அவர்களும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

இதில் முக்கியமாக முன்னாள் பிரதமர்கள் டாக்டர் மகாதிர், முகைதீன் யாசின் இன்னும்  பல பிரபலங்கள்!  அம்னோ என்றாலே ஊழல் கட்சி தானே!  ஊழலில்  மட்டும் அவர்கள் ஒன்றுபட்டு நிற்கிறார்கள் என்பது தான்  உலக மகா உண்மை! அதற்குத் தலைமை டாக்டர் மகாதிர்!

இந்த அரசாங்கத்தைக் கவிழ்க்க முன்னணியில் நிற்பவர் டாக்டர் மகாதிர்! இவரும் இவரது குடும்பமும் பல பல கோடிகளுக்குச்  சேர்த்து வைத்திருப்பவர்கள்!  நடிப்பில் மாமனிதர்!  மற்றவர்களையெல்லாம்  ஊழல்வாதிகள் என்று குறை சொல்லும் டாக்டர் மகாதிர்,  தான் செய்த ஊழல்களை மிகத்திறமையாக மறைத்துவிட்டோம் என்று என்ன தான் தனக்குத் தானே திரைப் போட்டுக் கொண்டாலும் உண்மை ஒருநாள் வெளிவரும்  என்பதை மறந்து போனார்!

ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது. ஊழல்வாதிகள் ஒன்று சேர்கிறார்கள்! தலைமை டாக்டர் மகாதிர். மகாதீருக்கு மலபார் மூளை! ஒன்று சரியாகப் போனால் அதனை அவரால் பொறுத்துக் கொள்ள முடியாது! அதனை ஒழிக்க வேண்டுமென்று தான் அவர் சிந்திப்பார்! ஓர் ஐம்பது அறுபது ஆண்டுகளாக அழிப்பு, ஒழிப்பு  வேலையில் தான் அவர் ஈடுபட்டவர். எதனையும் ஆக்ககரமாக செய்யவது என்பது அவரது குணயில்பு அல்ல.

அதே சமயத்தில் முகைதீன் யாசின்  பிரதமர் பதவிக்காக எதனையும் செய்யக்கூடியவர். ஆக, அழிவுச் சக்திகள் ஒன்று சேர்கின்றனர். இவர்களை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.

இவர்கள் பதவியில் இருக்கிறார்களோ இல்லையோ எல்லாமே எப்போதும் போல வழக்கமாக நடந்து கொண்டு தான் இருக்கும். மக்கள் சுபிட்சமாகத் தான் வாழ விரும்புகிறார்கள். இந்த நாடு வளமான நாடாகத் தான் மாறும். அதில் எந்த மாற்றமும் இல்லை.

ஊழலைத் தொடர விரும்பும் அரசியல்வாதிகள் வீழ்வார்கள் என்பதை நாம் நம்பலாம்!


Saturday, 1 July 2023

வெறுப்பே அவரது ஆயுதம்!

 


         முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ  குற்றச்சாட்டு                            

டாக்டர் மகாதிர் இனங்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் அரசியல்வாதி என்பதை எல்லாகாலங்களிலும் நிருபித்து வந்திருக்கிறார். நமக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ வருகின்ற சட்டமன்ற தேர்தல் வரை அவர் பாட்டுக்குப் பேசிக்கொண்டு தான் இருப்பார். கடைசி நேரம் வரை அவர் மல்லுக்கட்டிக் கொண்டு தான் இருப்பார்.  அதில் அவருக்கு ஒன்றும் கஷ்டம் இல்லை, நஷ்டம் இல்லை.

டாக்டர் மகாதிர் ஆரம்பகால அரசியலே இனப்பிரச்சனையிலிருந்து தான் ஆரம்பமாகிறது.   இனப்பிரச்சனை தான் அவர் கையிலெடுத்த முதல் ஆயுதம்.  

அந்த காலகட்டத்தில்  மலாய்க்காரர் யாரும் மேற்கல்வி படிக்கவில்லையா? முன்னாள் பிரதமர்,  காலஞ்சென்ற துங்கு அப்துல் ரஹ்மான் காலகட்டத்தில் தான் மகாதிரும் அவரது மனைவியும் டாக்டர்களாகப் படித்து வெளியேறினார்கள். இன்னும் பலர் வேவ்வேறு பல்கலைக்கழகங்களில்  படித்துக் கொண்டிருந்தார்கள்.

இவர் பதவிக்கு வந்து என்ன செய்தார்?  கல்வித் தகுதியைக் குறைத்தார்  iஇன்றுவரை அது தொடர்கிறது!  முக்கால்வாசி பட்டதாரிகளுக்கு சாதாரண அரசாங்க வேலைகளைக் கூட செய்ய முடியாமல் தடுமாறுகிறார்கள்! இது தான் இவரின் சாதனை!

சமீபத்திய தகவலின்படி  எஸ்.பி.எம். ஏ கிரேட் பெற 65 மதிப்பெண்கள் போதுமாம்! 90,000 பேர்  கணக்குப் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லையாம்! இதனை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் இந்த மாணவர்கள் தானே மருத்துவம் பயில வேண்டும்! இல்லாவிட்டால் மலாய் மாணவர் எண்ணிக்கை குறைந்து போய் விடுமே!

இது தான் டாக்டர் மகாதிர்  மலாய் மாணவர்களுக்குச் செய்த மாபெரும் வளர்ச்சி! அவர் தான் அதனை மெச்சிக்கொள்ள வேண்டும்!

இது போன்று பலவற்றைச் சொல்லலாம்! இந்த நாட்டை ஊழல் நாடாக ஆக்கியவர் மாபெரும் சிற்பி டாக்டர் மகாதிர்!

இப்படி இவர் செய்த தவறுகளையெல்லாம் மற்ற இனத்தவர்கள் மீது தூக்கிப் போடுவதுதான் அவர் பாணி அரசியல்!  அதைத்தான் அப்போதும் செய்தார். இப்போதும் செய்கிறார்.

இருபத்திரண்டு ஆண்டுகள் ஆட்சியில் இருந்துவிட்டு  இப்போது தான் ,மலாய்க்காரர்களை ஒன்று சேர்க்க போராட்டம் செய்யப் போகிறாராம்! அவர்கள் வழிநடத்தப் போகிறாராம். இப்போது தான் மலாய் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தப் போகிறாராம்.  அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த சீன, இந்தியர்கள் தான் தடையாக இருக்கின்றனராம்!  புதிதாக கண்டுபிடித்திருக்கிறார் இருபத்திரண்டு காலம் ஆட்சியில் இருந்தவர்!

வெறுப்பு! வெறுப்பு! வெறுப்பு! இதுதான் டாக்டர் மகாதிரின் அரசியல்! எல்லா காலங்களிலும் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை அவர் சீக்கிரம் உணர்வார்!

Friday, 30 June 2023

அரிசி விலை எகிறுமா?

 

விலையேற்றம்  என்பது தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை.

ஆனால் அரிசி விலை ஏறும் போது தான் அடிவயிற்றைக் கலக்குகிறது! மலேசியர்களின்  உணவே அரிசி உணவு தானே.

ஒரு விஷயம் மனதுக்கு ஆறுதல். மலேசியாவில் உற்பத்தியாகும்  அரிசி விலையில்  எந்த மாற்றமும் ஏற்படாது.  அரிசியின் உற்பத்தியில்  எந்த மாற்றமும் இல்லை. உற்பத்தி வழக்கம் போல இருக்கிறது.  சந்தையில் தாராளமாகக் கிடைக்கிறது.  அதன் விலை வழக்கம் போல ரி.ம. 2,60 காசுகள்.  அதன் விலையை வியாபாரிகள்  ஏற்றினால் அதனை நீங்கள் புகார் செய்யலாம்.

வெளிநாட்டு அரிசிகளைப் பயன்படுத்தவர்களின் நிலைதான் கொஞ்சம் ஏமாற்றம் அளிப்பதாக இருக்கும் அல்லது இருக்கலாம்.  அதன் உற்பத்தி நிலவரம் நாம் அறியவில்லை.  குறைவான உற்பத்தி என்றால் அதன் விலையை அந்த அந்த நாடுகள் ஏற்றிவிட்டால் நம்மால் ஒன்று செய்ய இயலாது.

இந்தியர்களில் பலர் புழுங்கல் அரிசி உணவைச் சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள். அதன் விலையேற்றம் ஒரு வெள்ளியிலிருந்து இரண்டு வெள்ளி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக எல்லா வெளிநாட்டு உற்பத்திகளும் விலை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. சிக்கனம் என்று நினைத்தால் நமது நாட்டு உற்பத்தியைத்தான்  தேர்ந்தெடுக்க வேண்டும்.`    

ஆனால் வேறு வழியில்லை. அதிக விலை போட்டு விலையுள்ள அரிசிகளை எல்லாராலும் வாங்க இயலாது. விரலுக்கேற்ற வீக்கம் என்பதுபோல நம்மால் எதனைத் தாக்குப்பிடிக்க முடியுமோ அந்த பக்கம் மாற்றிக்கொள்ள வேண்டியதுதான். 

பெரும்பாலும் மலாய்க்காரர்கள் உள்ளூர் அரிசியைத்தான்  பயன்படுத்துகின்றனர்.  அது அவர்களுக்குப் பழகிவிட்டது. நமக்குத் தேவை என்றால் நாமும் பழகிக்கொள்ள வேண்டியது தான்.  எது விலை குறைவோ அந்தப்பக்கம் சாய்ந்து விடுவது தான் நல்லது.  எல்லாமே பழக்க தோஷம் தான். பழகிவிடும்.

 அரிசி விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது.  இன்னும் ஓரிரு மாதங்களில் அதன் தாக்கம் தெரியும். விலை ஏறக்கூடாது என்பது தான் நமது எதிர்பார்ப்பு. இப்போது எதனையும் நம்மால் கணிக்க முடியவில்லை. எல்லாமே தலைகீழாக மாறிக்கொண்டிருக்கிறது! விலை ஏறலாம் அல்லது ஏறாமலும் போகலாம்! பொறுத்திருப்போம்!