Sunday, 30 June 2024

நாம் அனைவரும் மலேசியர்!

நன்றி:  தினத்தந்தி

நாம் அனைவரும் மலேசியர் என்கிற எண்ணம் வலுவிழந்து  வருகிறதோ  என்று  நாம் நினைக்க வேண்டியுள்ளது!

அதுவும் பிரதமர் அன்வார் இப்ராகிம் வந்த பிறகு  இனங்களிடையே பிரிவினைகளை உருவாக்குகிறாரோ  என்கிற ஐயத்தை ஏற்படுத்துகிறது.  அது சரியா தவறா என்று எனக்குத் தெரியவில்லை.

நன்றாக நடந்து கொண்டிருக்கும் கின்ராரா தமிழ்ப்பள்ளியின் ஒரு பகுதியை  உடைக்க வேண்டும்  என்கிற எண்ணமே யாருக்கும் வந்திருக்கக் கூடாது.  மேம்பாட்டு நிறுவனத்திற்கும் வந்திருக்கக் கூடாது அதே சமயத்தில் அதற்கு  அனுமதி கொடுத்த அரசாங்கத்திற்கும் வந்திருக்கக் கூடாது.  அவர்கள் அதற்கான அனுமதியைக் கொடுக்கும் போது  தமிழ்ப்பள்ளி அங்கு இருப்பது தெரியும்.  தமிழ்ப்பள்ளி கடந்த  எழுபத்தாறு ஆண்டுகளாக அங்கு தான் இருக்கிறது.

அந்த மேம்பாட்டு நிறுவனம்  தனது எல்லை என்ன என்பதைத் தெரிந்து கொண்டு தான் அவர்களின் வேலையை அவர்கள் ஆரம்பத்திருப்பர். அப்போது  அந்தப்பள்ளி அவர்களின் மேம்பாட்டு எல்லைக்குள் வரவில்லை.  அதனால் தான் அரசாங்கம் அதற்கு அனுமதி கொடுத்திருக்கிறது.  அனுமதி கொடுத்த போது  எல்லைக்குள்  வராத தமிழ்ப்பள்ளி இப்போது எங்கேயிருந்து வந்தது?  சிலாங்கூர் மாநில  ஆட்சிக்குழு உறுப்பினர்  கணபதி ராவ் அவர்களுக்குத் தெரியாமலா இது நடந்திருக்கும்?

நமக்கு ஒன்றும் புரியவில்லை. இப்போது மலேசிய அரசியலே கோமாளிகளால் நடப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது!  படிக்காத கூட்டம்  அரசை வழி நடத்துகிறதா? அது என்ன எதற்கெடுத்தாலும்  இந்தியர்கள் மட்டுமே பிரச்சனைக்குரியவர்களாகக் காட்டப் படுகிறார்கள்?

தமிழ்ப்பள்ளிகளை உடைப்பது, கோவில்களை உடைப்பது, கல்வியில் பாகுபாடு, இன பாகுபாடு, சமய பாகுபாடு,  வேலையில் பாகுபாடு - இப்படி ஒவ்வொன்றிலும் பாகுபாடு காட்டினால்  இந்தியர்கள் எப்படி நாட்டுப்பற்றோடு வாழ முடியும்?  அப்படி இருந்தும் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு அவர்கள் உதவவில்லை, இஸ்ரேலியர்களுக்கு ஆதரவாக அவர்கள் நடந்து கொள்ளவில்லை. உள்ளுரில்  எங்கும் குண்டுகளை வீசவில்லை.

அப்படியிருந்தும் இந்தியர்களுக்கு எதிராகத் தான் அனைத்து அரசாங்க நடவடிக்கைகளும்  அமைகின்றன.  நாம் அனைவரும் மலேசியர் என்கிற எண்ணம் பிரதமர் அன்வார் காலத்தில்  நடக்குமா என்பது சந்தேகமே!

Saturday, 29 June 2024

கொள்கையில் மாற்றமா?


 மெட்ரிகுலேஷன் கல்வியில் ஏதேனும் மாற்றம் வரக்கூடிய சாத்தியம் உண்டா?  அப்படியே வந்தாலும் அது  இந்திய மாணவர்களுக்கு நன்மைப் பயக்குமா?

பிரதமர் அன்வார் அவர்களின்  அறிவிப்பு  இன்னும் சரியான விளக்கத்தைக் கொடுக்கவில்லை.  பூமிபுத்ரா மாணவர்களின் எண்ணிக்கையிலோ,  தகுதியிலோ  எந்த மாற்றத்தையும்  அவர் சொல்லவில்லை.

ஆனால் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் இன்னும் வீழ்ச்சியைத் தான்  இந்தப் புதிய கொள்கை கொண்டுவரும் என்று தான் கணிக்க வேண்டியுள்ளது.  இந்தப் புதிய கொள்கை  அமைச்சரவையில்  விவாதிக்கப்பட்டது  என்று பிரதமர் கூறியிருக்கிறார்.  அமைச்சரவையில்  இந்திய பிரதிநிதிகள் இருந்திருந்தால் அவர்களுக்குத் தெரியாமலா இது நடந்திருக்கும்?  ஜ.செ.க.  சீனர்களுக்கு மட்டும் வாய் திறக்கும். பி.கே.ஆர்.  பிரதமர் வாய் திறப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும்.  வெளியில் மட்டும் அசகாய  சூரர்கள்!

ஒவ்வொரு ஆண்டும் மெட்ரிகுலேஷன் கல்வியில்  இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறதே தவிர கூடுவதாகத் தெரியவில்லை. இந்த ஆண்டும் அதே கதை தான்! கொள்கையை மாற்றிக்கொண்டோம் என்று சொல்லிக் கொண்டே நமது மாணவர்களுக்கு ஆப்படித்திருக்கிறார்கள்! இதனை முன்னேற்றம் என்கிறார் பிரதமர்.

நமக்கு எந்த கொள்கை மாற்றங்களும் வேண்டாம். பிரதமர் மலாய்க்காரர் ஆதரவு சரிந்துவிடும் என்பதற்காக  இந்தியர்களின்  மீது கைவைப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல.  நாம் கேட்பதெல்லாம் இந்திய மாணவர்களுக்கு  2500 இடங்கள்.  மலாய் மாணவர்களுக்கு 90 விழுக்காடு என்கிற ஒதுக்கீடு இருப்பது போல  இந்திய மாணவர்களுக்கு  2500 இடங்கள் ஒதுக்கீடு செய்வது தான் இந்த நீண்ட நாள் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண முடியும்.  இல்லாவிட்டால்  இந்தப் பிரச்சனை ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் மீண்டும் தலைதூக்கத்தான் செய்யும்.  அப்போது நமது இந்திய அரசியல்வாதிகள் தான்  நம்மிடமிருந்து வாங்கிக் கட்டிக்கொள்வார்கள்! ஆனாலும் எந்தப் புண்ணியமுமில்லை! அவர்கள் பாவ புண்ணியம் பார்க்கும் கூட்டம் அல்ல!

ஆக, இந்த ஆண்டும், மெட்ரிகுலேஷனைப் பொறுத்தவரை,  நமக்கு  நாமத்தைப்  போட்டிருக்கிறார்  நமது பிரதமர். இது இறுதி அல்ல! பொறுத்திருப்போம்!

Friday, 28 June 2024

மீண்டும் எழத்தான் வேண்டும்!

விழுவது எதற்காக?   மீண்டும் எழுவதற்காக!

குழந்தையாய் இருக்கும் போது எத்தனையோ முறை, கணக்கற்ற முறை நாம் விழுந்து எழுகிறோம்!   விழுந்தால் எழுவது  மனித இயல்பு.  விழுந்துவிட்டு எழவே மாட்டேன் என்றால்  அது நமது இயல்பு அல்ல.

ஆனால் அதனைத் தான் நமது தினசரி  வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்கிறோம். குழந்தையாய் இருக்கும் போது விழுவதும எழுவதும் இயல்பாக இருந்தது. வயதாகும் போது  அதுவே நமது முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கிறது!

குழந்தையாய் இருக்கும் போது  'விழுந்தால் எந்திரி' என்று உற்சாகப்படுத்திய கூட்டம் பெரியவர்கள் ஆனதும் 'போதும்! போதும்! அதைச் செய்யாதே!  இதைச் செய்யாதே!' என்று  தடை போடுகிறது! அதனால் தான்  நம் சமூகம், கீழே விழுந்த சமூகம்,  பட்டது போதும் என்று எழுவதற்கே அஞ்சுகிறது!  அப்படி என்ன தான்  பட்டு விட்டோம்?  நமக்குக் கீழே இருந்தவர்கள்  நம்மைவிட மேலே போவதை  கிழே  இருந்து பார்த்து  ரசித்துக்  கொண்டு  இருக்கிறோம்!  இதுவா முன்னேற்றம்?

விழுவதும் எழுவதும் நமது அன்றாட வாழ்க்கையில் நடப்பது தான். ஒரு மனிதன் கீழே விழுந்தால் அவனைத்  கைதூக்கி விடுவது நமது அனைவரின் கடமை.  கைதூக்கி அவனை உற்சாகப்படுத்தி  அவன் மீண்டும்  தனது விரும்பிய பாதையில் செல்ல அவனை உற்சாகப்படுத்துவது நமது கடமை.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்?   ஒருவன் விழுந்தால் அவனை மேலும் எழ முடியாதபடி  அவன் கைகால்களை முறித்து  முடக்கி விடுகிறோம்!  அவன் மீண்டும் எழாதபடி புதைத்து விடுகிறோம்.  இப்படித்தான் நமது வாழ்க்கை முழுவதிலும் இது போன்ற பாதகங்களைச் செய்து கொண்டிருக்கிறோம்.

நம்மிடம் திறமை இல்லையென்று யாராவது சொல்ல முடியுமா?  நமது திறமைகள் பல வழிகளில் முடக்கப்படுகின்றன.   இவைகள் எல்லாம் மீறி தான்   நாம் பல துறைகளில் ஜொலித்து வருகிறோம்.

நாம் விழவைக்கப் பட்டோம். அதனால் 'இது  ' நமது விதி'  என்று  யார் மீதும் பழி போடாமல் நாம் மீண்டும் எழுந்து நமது இனத்துக்குப் பெருமை சேர்ப்போம்!