மெட்ரிகுலேஷன் கல்வியில் ஏதேனும் மாற்றம் வரக்கூடிய சாத்தியம் உண்டா? அப்படியே வந்தாலும் அது இந்திய மாணவர்களுக்கு நன்மைப் பயக்குமா?
பிரதமர் அன்வார் அவர்களின் அறிவிப்பு இன்னும் சரியான விளக்கத்தைக் கொடுக்கவில்லை. பூமிபுத்ரா மாணவர்களின் எண்ணிக்கையிலோ, தகுதியிலோ எந்த மாற்றத்தையும் அவர் சொல்லவில்லை.
ஆனால் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் இன்னும் வீழ்ச்சியைத் தான் இந்தப் புதிய கொள்கை கொண்டுவரும் என்று தான் கணிக்க வேண்டியுள்ளது. இந்தப் புதிய கொள்கை அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது என்று பிரதமர் கூறியிருக்கிறார். அமைச்சரவையில் இந்திய பிரதிநிதிகள் இருந்திருந்தால் அவர்களுக்குத் தெரியாமலா இது நடந்திருக்கும்? ஜ.செ.க. சீனர்களுக்கு மட்டும் வாய் திறக்கும். பி.கே.ஆர். பிரதமர் வாய் திறப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும். வெளியில் மட்டும் அசகாய சூரர்கள்!
ஒவ்வொரு ஆண்டும் மெட்ரிகுலேஷன் கல்வியில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறதே தவிர கூடுவதாகத் தெரியவில்லை. இந்த ஆண்டும் அதே கதை தான்! கொள்கையை மாற்றிக்கொண்டோம் என்று சொல்லிக் கொண்டே நமது மாணவர்களுக்கு ஆப்படித்திருக்கிறார்கள்! இதனை முன்னேற்றம் என்கிறார் பிரதமர்.
நமக்கு எந்த கொள்கை மாற்றங்களும் வேண்டாம். பிரதமர் மலாய்க்காரர் ஆதரவு சரிந்துவிடும் என்பதற்காக இந்தியர்களின் மீது கைவைப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. நாம் கேட்பதெல்லாம் இந்திய மாணவர்களுக்கு 2500 இடங்கள். மலாய் மாணவர்களுக்கு 90 விழுக்காடு என்கிற ஒதுக்கீடு இருப்பது போல இந்திய மாணவர்களுக்கு 2500 இடங்கள் ஒதுக்கீடு செய்வது தான் இந்த நீண்ட நாள் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண முடியும். இல்லாவிட்டால் இந்தப் பிரச்சனை ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் மீண்டும் தலைதூக்கத்தான் செய்யும். அப்போது நமது இந்திய அரசியல்வாதிகள் தான் நம்மிடமிருந்து வாங்கிக் கட்டிக்கொள்வார்கள்! ஆனாலும் எந்தப் புண்ணியமுமில்லை! அவர்கள் பாவ புண்ணியம் பார்க்கும் கூட்டம் அல்ல!
ஆக, இந்த ஆண்டும், மெட்ரிகுலேஷனைப் பொறுத்தவரை, நமக்கு நாமத்தைப் போட்டிருக்கிறார் நமது பிரதமர். இது இறுதி அல்ல! பொறுத்திருப்போம்!
No comments:
Post a Comment